இலங்கை தொடர்பான காலக்கெடுக்களை உன்னிப்பாக அவதானிக்கின்றோம்- இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் டெனி சாய்பி

0
76
Article Top Ad

பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவது என்பது சில வார காலவரையறைக்குட்பட்டது

எனவும் இது தொடர்பாக உன்னிப்பாக அவதானித்துவருவதாகவும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தூதுவர் டெனி சாய்பி தெரிவித்தார்.

ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை நீடிப்பது தொடர்பாக இன்னமும் திட்டவட்டமான தீர்மானம் ஏதும் எடுக்கப்பவில்லை எனவும் அவர் கூறினார்.

நேர்காணல் : அருண் ஆரோக்கியநாதர்

நீங்கள் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தூதுவராக வருகைதந்து இரண்டு வருடங்களை அடுத்த மாதம் பூர்த்திசெய்கின்றீர்கள் .

இதுவரையில் இலங்கையைப் பற்றிய உங்கள் எண்ணப்பாடுகள் யாவை?

ஆம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தூதுவராக வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.

ஆனால் நான் முதன்முறையாக இலங்கைக்கு 2015ம் ஆண்டில் சுற்றுலாப் பயணியாக என்னுடைய குடும்பத்தினர் சகிதமாக வருகை தந்து புகையிரதங்கள் முச்சக்கரவண்டிகள் மூலமாக நாட்டின் பல பாகங்களுக்கும் சென்றிருந்தோம்.

அப்போது எனது இலங்கையைப் பற்றிய முதலாவது எண்ணப்பாடு யாதென்றால் இலங்கை தொன்மையான மனித நாகரிகமுள்ள வளமான  நாடு.  அதன் பூகோள ஸ்தானத்தினால் பெரிதும்  முக்கியத்துவம் பெறுகின்றது என்பதாகும்.

அதன்பின்னர் இங்கு இடம்பெற்ற பயங்கரமான ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் அரசியல் யாப்பு நெருக்கடி அதனைத் தொடர்ந்து கொரோனா நாட்டைப் பற்றிய இரண்டாவது எண்ணப்பாடாக இருக்கின்றன.  ஏனென்றால் இவை வளமிக்க இலங்கை உண்மையாக வளரக்கூடிய சாத்தியப்பாடுகளைப் பாதித்துள்ளது.

இந்த நாடு புதையல்மிக்க நாடு என நான் கூறுகின்றேன். இதற்கு காரணம் இங்கு கிடைக்கும் இரத்தினங்கள் மாத்திரமல்ல மாறாக இங்குள்ள உயர்வான மனித அபிவிருத்திச் சுட்டெண் இங்குள்ள மக்கள் நன்று கல்வி கற்றவர்களாக உயர் விழுமியங்களைக் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

கடந்த 50 வருட காலப்பகுதியில்  மிகவும் சிறப்பான நெகிழ்வுப்போக்கை காண்பித்துள்ளனர். இந்தியாவை அணுகக்கூடிய முக்கிய பாதையில் தெற்காசியாவில் மேற்கிற்கும் கிழக்கிற்கும் இடையே கேந்திர ஸ்தானத்தில் இலங்கை அமைந்துள்ளது.

உலகில் கொள்கலன் கப்பல்போக்குவரத்தின் அரைவாசியும் எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பற்போக்குவரத்தின் மூன்றில் இரண்டு பகுதியும் இடம்பெறும் பாதையிலும் இலங்கை அமைந்திருக்கின்ற இலங்கை உண்மையிலேயே ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட நாடாகும்.

இலங்கை மிக உயர்வான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது ஆனால் அதனை அனைவரும் ஒன்றிணைவதன் மூலமாகவும் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களில் அனைவரையும் உள்வாங்குவதனுர்டாகவும் மாத்திரமே நடைமுறைச்சாத்தியமாக்க முடியும்.

இந்த வழியில்  அனைவரும் முன்னோக்கிப் பயணிக்க வேண்டும் என்கிற நம்பிக்கையை மட்டுமே நான் கொண்டிருக்கமுடியும்.

கடந்தவாரம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தீர்கள்.இந்த விஜயத்தின் போது உங்கள் அவதானிப்புக்கள் எப்படியாக இருந்தன?

யாழ்ப்பாணத்தில் மிகவும் சுவாரசியமாக ஏறத்தாழ ஒரு வாரகாலத்தைக் கழிக்கக் கிடைத்தது. அங்கு நான் மேற்கொண்ட சந்திப்புக்களில்  Yarl IT Hub யாழ் தொழில்நுட்ப கூடத்தைச் சேர்ந்த பல இளைஞர்களுடன் சந்தித்தேன்.

இந்தச்சந்திப்பு மிகவும் நம்பிக்கை தருவதாக அமைந்திருந்தது. இந்த இளைஞர்கள் புலம்பெயர் தமிழர்களின் பிரசன்னம் அதிகம் காணப்படும் கனடா, பிரித்தானியா மற்றும் அமெரிக்காவிற்கு  தகவல் தொழில்நுட்ப மென்பொருட்களை தயாரித்து ஏற்றுமதிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதனைத்தவிர  உள்ளுர் சமுதாயங்களுக்கு சேiவாயற்றும் பெண் அங்கத்தவர்களையும் சந்தித்தேன். அவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஊடாக நிதி அனுசரணையளிக்கப்பட்ட ஊடக பயிற்சி வழங்கப்பட்டது.

அவர்கள் மக்களுக்காக ஆற்றும் பணியை எவ்வாறு ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் தெரியப்படுத்துவது என்பதே இந்தப் பயிற்சியின் நோக்கமாகும். இவை நம்பிக்கை அளிக்கின்ற செய்திகளாக அமைந்துள்ள போதிலும் சிறப்பான பொருளாதார வளர்ச்சியில் இலங்கைப் பிரஜைகள் அனைவரும் பங்குகொள்ளக்கூடியவகையில் வடக்கில் பல விடயங்களைச் செய்யவேண்டியுள்ளது.

அங்கு பனைவளம் சார் கைத்தொழிற்துறை இருக்கின்றது அதிகம் படித்த பண்பட்டவர்கள் இருக்கின்றனர் இவற்றை பெறுமதிசேர்க்கும் விடயங்களாக மாற்றி மக்களின் வாழ்வில் மேலும் அதிக கௌரவத்தைப் பெற்றுக்கொடுப்பது என ஆராயவேண்டும். இது அதிகாரிகள் முன்பாகவுள்ள முக்கியமான சவால்களில் ஒன்றாகும். 

இலங்கையில் பலவாரகாலமாக பல்வேறு தரப்பட்டவர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு முக்கிய பேச்சுக்களில்ஈடுபட்ட GSP Monitoring Mission ஜிஎஸ்பி கண்காணிப்பு தூதுக்குழுவினர் இம்மாதமுற்பகுதியில்  ஐரோப்பா திரும்பியிருந்தனர்.

அவர்களின் முக்கிய பரிந்துரைகள் என்ன?இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை தொடர்ந்தும் நீடிப்பது தொடர்பாகதீர்மானமேதும் எடுக்கப்பட்டதா?

எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. ஜிஎஸ்பி பிளஸ் கண்காணிப்பு என்பது இலங்கையிலும் பிரஸஸ்ஸிலுமுள்ள இதனுடன் தொடர்புபட்ட பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு நடைமுறையாகும்.

 உங்களுக்கு தெரியும் .ஐரோப்பிய பாராளுமன்றமும் அதன் அங்கத்தவர்களும் அவர்களது நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர். எனவே இது தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் ஒரு செயன்முறையாகும்.

இலங்கையில் நாம் மேற்கொண்ட கலந்தாராய்வுகளின் போது பங்குபற்றிய ஒவ்வொருவருமே இலங்கையின் ஏற்றுமதியாளர்களுக்கு ஜிஎஸ்பி பிளஸின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தினர்.

ஐரோப்பிய சந்தைக்கான சிறப்பு அணுகலை வழங்குகின்ற இந்த சலுகையை தொடர்ந்தும் தக்கவைப்பதற்கு இலங்கை அதனால் இயன்ற அனைத்தையும் செய்யவேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

இதனைத்தவிர அரசாங்கம் ஏற்று அங்கீகரித்த மனித உரிமைகள் தொழிலாளர் உரிமைகள் சுற்றாடல் மற்றும் காலநிலை தொடர்பான 27 சர்வதேச சமவாயங்களையும்  வினைத்திறனான வகையில் இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதை காண்பிக்கவேண்டும் என்பது எமது இரண்டாவது அவதானிப்பாகும்.

தன்னிச்சையான கைதுகள்  போன்ற புதிய கட்ட அத்துமீறல்களை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இறுதியாக 2017ல் இலங்கைக்கு மீண்டும் ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை வழங்கியபோது சர்வதேச தராதரத்திற்கு அமைவாக  பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்தியமைப்பது என்பது முக்கியமானதொரு உறுதிமொழியாகக் காணப்பட்டது.

 இது விடயத்தில் தெளிவான முடிவுகளை எதிர்பார்த்துக்காத்திருக்கின்றோம்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் விடயத்தில் அரசாங்கம் அதிகமான வாக்குறுதிகளை வழங்கியபோதும் பெருமளவானவை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என விமர்சகர்கள் கூறுகின்றனர். இதுதொடர்பாக உங்கள் பார்வை என்ன?


 நாம் ஜனாதிபதி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோர் பயங்கரவாத தடைச்சட்டம் மீள் பரிசீலனைக்குட்படுத்தப்படும் என்பது தொடர்பாக வெளிப்படுத்திய உறுதிப்பாட்டைக் குறிப்பெடுத்துள்ளோம்.

ஆனால் இவை காலவரையறைற்ற தல்ல மாறாக இன்னமும் சில காலப்பகுதிக்குள் நிறைவேற்றப்படவேண்டியவையாகும்.

 உதாரமாண கூறுவதாயின் செயற்குழுவின் அறிக்கையை இம்மாதம் 24ம் திகதிக்குள் இறுதிசெய்வதாகக் கூறிய அரசாங்கம் இந்த வருட முடிவிற்குள் அதுதொடர்பாக அமைச்சரவையில் ஆராய்வதாகக் கூறியிருந்தது.

எனவே  காலக்கெடுக்கள் இருக்கின்றன. அந்தக்காலக்கொடுக்களை நாம் உன்னிப்பாக அவதானித்துவருகின்றோம்.

எனவே ஜிஎஸ்பி பிளஸ் துர்துக்குழுவினருக்கு வழங்கிய உறுதிமொழியை அரசாங்கம் ஏற்று நடக்;கும் என நாம்  நம்புகின்றோம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஐநா பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக அமெரிக்க சென்றபோது 2022ல் இலங்கையில் புதிய அரசியலமைப்புக் கொண்டுவரப்படும் எனக்கூறியிருந்தார்.

அடுத்தாண்டில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படவாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முக்கியமான கூட்டத்தொடரும் அடுத்த மார்ச் மாதத்தில் இடம்பெறவுள்ளது.  

இலங்கையில் பொறுப்புக்கூறல் நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடு என்ன?

ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் ஐநாவின் 46 /1 தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தன.

நல்லிணக்கம் ,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் விடயத்தில் தொடர்ந்து நடவடிக்கை முன்னெடுக்கப்படவேண்டும்  என்ற விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்திவருகின்றது.

யுத்த காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்ததிற்கு வித்திட்ட விடயங்கள் பற்றி நடவடிக்கை எடுப்பதற்கான ஐநாவின் கட்டமைப்பிற்கு ஆதரவுவழங்குவதிலிருந்து வாபஸ் பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்த தீர்மானம் தொடர்பாக நாம் அதிருப்தி கொண்டுள்ளோம் .

தற்போது உள்ளுர் பொறிமுறை மூலமாக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ள உறுதிப்பர்டு தொடர்பில் நாம் குறிப்பெடுத்துள்ளோம்.

இது தொடர்பாக அரசாங்கத்துடன் நாம் அடிக்கடி பேசிவருகின்றோம்.  காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகம் இழப்பீட்டுக்கான அலுவலகம் சுயாதீனமான மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற மிக முக்கியமான நிறுவனங்களின் சுயாதீனத்தை மதிப்பது இதில் முக்கியமானது.

நாங்கள் இந்த நிறுவனங்கள் தொடர்பாக அதிக அவதானம் செலுத்தியுள்ளோம். இந்த உள்ளுர் செயன்முறை வெற்றியளிக்கும் என  எதிர்பார்க்கின்றோம்.

இந்துசமுத்திரத்தில் கேந்திர ஸ்தானத்தைக் கொண்டுள்ள இலங்கையில் தமது பிரசன்னத்தை உறுதிசெய்வதற்கு உலகிலுள்ள வல்லரசு நாடுகளான அமெரிக்கா சீனாவுடன் இந்தியா ஜப்பான் ஆகியவையும் முனைகின்றன. இலங்கை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் நலன்சார் விடயங்கள் எவை?

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்து சமுத்திரம் தொடர்பான வியூகம் என்பது அதன் இந்தோ பசுவிக் வியூகத்தின் ஒரு பாகமாக அமைந்துள்ளது. ஒட்டு மொத்தமாக எடுத்து நோக்கினால் ஒத்துழைப்பிற்கு வழிகோலுவதான சட்டத்தின் ஆட்சிக்குட்பட்ட பிராந்திய ஒழுங்கமைப்பை ஏற்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் முனைகின்றது.

இந்த ஒத்துழைப்பு என்பது  கொவிட் பெருந்தொற்றும் மற்றும் திறந்த சந்தை போன்ற முக்கிய சவால்கள் குறித்து அவதானம் செலுத்த வழிகோலுகின்றது. எம்மிடம் ஒளிவுமறைவான நிகழ்ச்சி நிரல் ஏதும் கிடையாது .

சமாதானம் மனித உரிமைகள் சட்டத்தின் ஆட்சி ஜனநாயகம் போன்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படையான விழுமியங்களுக்கு நாம் மதிப்பளித்துச் செயற்படுகின்றோம். இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் அக்கறைகொண்டுள்ள அiனைத்துபெரும்  சக்திகளும் சட்டடத்தின் ஒரே விதத்தில் சட்டங்களுக்கு  மதிப்பளித்து செயற்படவேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம் .

இந்த சட்டங்களே இந்தப் பிராந்தியத்தில் அமைதியைப் பேணுவதற்கு அவசியமானது இதற்கு நாம் முன்னுரிமை கொடுக்கின்றோம். நாம் கடற்கொள்கையர்களுக்கு எதிரான போராடுதல் ,தகவல்களை பரிமாறுதல், வெளிப்படைத்தன்மையைப் பேணுதல் மற்றும் இந்த சட்டங்களை நடைமுறைக்கிடுதல் தொடர்பாக கலந்தாராய்தல் ஆகிய விடயங்களுக்கு யதார்த்தபூர்வமாக பங்களிக்க விரும்புகின்றோம்.

கொவிட் -19 பெருந்தொற்று எவ்வாறாக இராஜந்திரிகளான உங்களைப் போன்றவர்களின் செயற்பாடுகளில் தாக்கம் செலுத்தியுள்ளது ?

கொவிட்-19 காலப்பகுதி என்பது இலகுவானதல்ல இலங்கையில் சகல மட்டங்களிலும் தொடர்புகளை ஸ்தாபிப்பதில் இது பெரும் தடங்கலை ஏற்படுத்தியுள்ளது. நான் சந்திக்க எதிர்பார்த்தவர்களில் பாதியளவினரைக் கூட இன்னமும் சந்திக்கவில்லை. அவர்களுடன் பலமுறை சந்திப்புக்களில் ஈடுபட நினைத்தேன் .

ஆனால் அது கைகூடவில்லை.  இலங்கைக்கும் ஜரோப்பிய ஒன்றியத்திற்கும் மிக அவசியமான உறவைக் கட்டியெழுப்புவது இந்தக்காலப்பகுதியில் பெரிதும் சவாலாகவே உள்ளது.

ஆனால் மறுமுனையில் ஜிஎஸ்பி கண்காணிப்பு தூதுக்குழுவினருக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கள் மற்றும் அவர்களுடனான கலந்துரையாடல்கள் ஐரோப்பிய ஒன்றியமானது இலங்கையைப் பொறுத்தவரை இன்னமும் அர்த்தபூர்வமானதாக இருப்பதை உணர்த்திநிற்கின்றது.

கொவிட் -19  இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை குறைக்கவில்லை மாறாக அதிகரித்தே இருக்கின்றது.

இலங்கைக்கு தடுப்பூசிகளை வழங்குதவற்காக ஐரோப்பிய ஒன்றியம் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு 2 மில்லியன் யூரோவை வழங்கியது இது கொவெக்ஸ் தடுப்பூசி உற்பத்திக்கு பயன்படுததப்படும்

அந்தவகையில் ஒத்துழைப்பு குறையவில்லை அதிகரித்தே உள்ளது. இலங்கையில் நான் எஞ்சியுள்ள மிகுதிக் காலப்பகுதியில்  இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் நல்ல உறவைக் கட்டியெழுப்புவதற்கு முடியுமான அனைத்தையும் செய்ய எண்ணியுள்ளேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here