இலங்கையில் அடுத்த வருடத்திற்குள் உணவுப் பற்றாக்குறை:பாரிய நெருக்கடி குறித்து ரணில் எச்சரிக்கை

0
125
Article Top Ad

 

இலங்கையின் தற்போதைய அந்நிய செலாவணி மற்றும் தங்க கையிருப்பு பற்றிய தகவல்களை வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்திற்கு அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களை நாடாளுமன்றத்தில் இதுவரை சமர்ப்பிக்கவில்லை என குற்றம் சாட்டினார்.

தற்போது நாம் எதிர்கொள்ளும் அந்நியச் செலாவணி பிரச்சினை தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ள இந்த ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தில் எண்ணெய் மற்றும் நிலக்கரி வாங்குவது பற்றி பேசப்பட்டது. ஆனால், அந்நிய செலாவணி இல்லையென்றால், மற்ற நாடுகளுக்கு எவ்வாறு பணம் செலுத்துவது என்றும் ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பினார்.

நாட்டில் எரிபொருள் இல்லாதமையினால் எதிர்காலத்தில் மின்சார துண்டிப்பு ஏற்படக்கூடும் என்றும் இந்த நிலைமை ஏற்பட்டால், மக்கள் எவ்வாறு நெருக்கடியை எதிர்கொள்வது என்பது குறித்த ஒரு திட்டம் இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும் இந்த நிலைமை தொடர்ந்தால் 2022 மார்ச் மாதத்திற்குள், உணவுப் பற்றாக்குறையுடன் நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொள்ளும் என ரணில் விக்ரமசிங்க எச்சரித்தார்.