“வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது அதனை ஆதரிப்பதா? இல்லையா? என்பது குறித்து தீர்மானிக்கப்படவில்லை.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்தார்.
அடுத்த வாரம் நடைபெறவுள்ள கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
கண்டியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“வரவு – செலவுத் திட்டத்தில் மக்களுக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்கப்பெறவில்லை. நாட்டில் அனைத்துப் பொருட்களினது விலைகள் தொடர்ந்து அதிகரிக்கின்றது.
ஆளும் கட்சியில் உள்ள சிலர் தமது கட்சி உறுப்பினர்களைக் கட்சியை விட்டு வெளியேறும்படி பகிரங்கமாகத் தெரிவித்து வருகின்றனர்.
முக்கியமான தருணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உரிய தீர்மானங்களை எடுக்கும்” – என்றார்.