இலங்கைக்கு இரண்டு லட்சம் கோடிகளை தாமதிக்காது இந்தியா வழங்க வேண்டும் – சுப்பிரமணிய சுவாமி கோரிக்கை

0
165
Article Top Ad

பொருளாதார நெருக்கடியின் காரணமாக அத்தியாவசிய உணவுப்பொருட்களைக் கூட இறக்குமதிசெய்ய முடியாமல் சிக்கித் திணறிக்கொண்டிருக்கும் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக ராஜபக்ஸகளின் நீண்டகால நம்பிக்கைக்குரிய நண்பரான சுப்பிரமணிய சுவாமி டுவிட்டரில் இந்திய அரசிடம் தனக்கே உரிய பாணியில் கோரிக்கை விடுத்துள்ளார்.

சீன ஜனாதிபதி ஸி ஜிங்பிங்கின் ஜுனியர் பங்காளியான விளாடிமீர் புட்டினின் ஏற்பாட்டில் இந்தியப் பிரதமர் மோடி சீன ஜனாதிபதியை சந்திப்பதற்குத்தயாராகிவருவதாக ரஷ்யத்தகவல் கிடைத்துள்ளதாக சுவாமி தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

அமெரிக்க அழுத்தங்களுக்கு எமது அமைச்சர்கள் தொடர்ந்தும் அடிபணிந்து இலங்கைக்கு 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ( ஏறத்தாழ இரண்டு லட்சம் கோடி இலங்கை ரூபா)கடனை வழங்க இழுத்தடித்தால் நாம் விலைபோய்விடுவோம் என்ற எச்சரிக்கையையும் சுப்பிரமணிய சுவாமி விடுத்துள்ளார்.

இந்திய தூதரக வட்டாரத்தில் சுப்பிரமணிய சுவாமியின் இந்த டுவிட்டர் செய்திதொடர்பாக வினவியபோது இது தொடர்பாக கருத்து கூற எதுவும் இல்லை என்று தெரிவித்தனர்.

இலங்கை இந்திய விடயம் தொடர்பாக தொடர்ந்தும் அவதானித்துவரும் ஆய்வாளரொருவரிடம் வினவியபோது இலங்கை அரசாங்கம் இலங்கையிடம் இருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கோரியுள்ளமை உண்மை 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனை இலங்கை கோருவதாக சுவாமி கூறியிருப்பது ஆச்சரியமளிக்கின்றது எனத் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்காது நடந்து கொண்ட விதம் மற்றும் பல்வேறு இந்திய முதலீட்டுத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு காண்பிக்கப்பட்டுவரும் இழுத்தடிப்புக்கள் தொடர்பாக அதிருப்தியுற்றுள்ள இந்திய அரசாங்கம் இலங்கையிடம் சில எதிர்பார்ப்புக்களை வெளிப்படுத்தியுள்ளது.

அவற்றை விரைவாக செயற்படுத்தும் போது இலங்கை அரசாங்கம் கோரிய ஒருபில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது என அந்த அவதானி மேலும் தெரிவித்தார். திருகோணமலை எண்ணெய்க்குதங்களை விரைந்து வழங்குவதும் இதில் அடங்கும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

http://