சவால்களை முறியடிக்கச் சகலரும் ஒன்றிணைக! – சபாநாயகர் உரை

0
128
Article Top Ad


“கடந்த இரண்டு வருடங்களில் நாடு பல சவால்களுக்கு முகங்கொடுத்திருந்தது. புதிய ஆண்டும் சவால் மிக்கதாக அமையும். நாட்டில் காணப்படும் சவால்களை வெற்றிகொள்வதற்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். நாட்டுக்குரிய கடமைகளையும், பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.”

– இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற 2022ஆம் ஆண்டுக்கான அரச ஊழியர்கள் சத்தியப்பிரமாண உறுதியுரை எடுத்துக்கொள்ளும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களில் நாடு பல சவால்களுக்கு முகங்கொடுத்திருந்தது. தொடர்ச்சியாக பல்வேறு தீர்மானங்கள் எடுக்க வேண்டியிருந்தது. இந்தச் சவால்கள் புதிய ஆண்டிலும் தொடர்கின்றது.

எனவே, புதிய ஆண்டும் சவால் மிக்கதாக அமையும். நாட்டில் காணப்படும் சவால்களை வெற்றிகொள்வதற்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். நாட்டுக்காக உரிய கடமைகளையும், பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்” – என்றார்.

நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க கூறுகையில்,

“2021ஆம் ஆண்டில் காணப்பட்ட சவால்களை சிறந்த முறையில் முறியடிப்பதற்கு பாராளுமன்றத்தால் முடிந்தது.

கொரோனா சூழ்நிலையில் காணப்படும் சவால்களுக்கு முகங்கொடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும்.

அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புடன் செயற்பட்டமையாலேயே கடந்த வருடத்தில் சவால்களை வெற்றிகொள்ள முடிந்தது.

பாராளுமன்றச் செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுக்க பாராளுமன்றப் பணியாளர்களின் உயர்ந்த நிபுணத்துவமே காரணம்” – என்றார்.

கொரோனா சவால்களை வெற்றிகொள்வதற்குத் தனிப்பட்ட ரீதியாகவும், நிறுவன ரீதியாகவும், சமூக ரீதியாகவும் காணப்படும் பொறுப்புக்கள் குறித்து பாராளுமன்ற மருத்துவ நிலையத்தின் வைத்திய அதிகாரி ரி.ஆர்.பத்திரன இங்கு கருத்துத் தெரிவித்தார்.

நல்ல சுகாதார பழக்கவழக்கங்கள் மூலம் கொரோனா சவாலை சமாளிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது, முகக்கவசத்தை அணிவது மற்றும் சவர்க்காரமிட்டு அடிக்கடி கைகளைக் கழுவுவதன் முக்கியம் பற்றியும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமும் பணியாட்தொகுதி பிரதானியுமான குஷானி ரோஹனதீர, உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே.ஜயதிலக, பாராளுமன்ற திணைக்களங்களின் தலைவர்கள், பாராளுமன்ற செயலகத்தின் பணியாளர்கள் மற்றும் இணைந்த சேவைகளின் பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.