சுசில் பிரேமஜயந்தவைத் தொடர்ந்து மேலும் இரு அமைச்சர்களை பதவி நீக்க ஜனாதிபதி முடிவு!

0
159
Article Top Ad

அரசை கடுமையாகச் விமர்சிக்கும் மேலும் இரு இராஜாங்க அமைச்சர்களையும் பதவி நீக்குவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது ஆராய்ந்து வருகின்றார் என்று அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

அவர்களைப் பதவி நீக்குவதன் மூலம் ஏற்படும் அரசியல் பின்னடைவு நிலை பற்றியும் இதன்போது ஜனாதிபதியால் கவனம் செலுத்தப்படுகின்றது.

விரைவில் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது. அதன்போது இராஜாங்க அமைச்சுப் பதவிகளிலும் மாற்றம் வரவுள்ளது. அவ்வேளையில் இவ்விருவரும் நீக்கப்படலாம் எனத் தெரியவருகின்றது.

இதேவேளை, கல்வி இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த இன்று நீக்கப்பட்டார். அவர் வகித்த பதவி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
………………..

தகைமையற்ற வேடதாரிகளுக்கு கல்வியின் பெறுமதி தெரியாது! – பதிலடி கொடுத்தார் சுசில்

“நான் மக்களுக்காக உண்மையையே பேசினேன். பதவி நீக்கம் தொடர்பில் கவலையடையவில்லை. இனி என் தொழிலைச் செய்வேன்.”

– இவ்வாறு பதவி விலக்கப்பட்ட கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று அவர் மேலும் கூறியதாவது:-

”பதவி நீக்கம் பற்றி எனக்கு அறிவிக்கப்படவில்லை. ஊடகங்கள் ஊடாகவே அறிந்தேன். நான் 2000ஆம் ஆண்டிலிருந்து அமைச்சுப் பதவியை வகித்து வருகின்றேன். மூன்று ஜனாதிபதிகளின் கீழ் வேலை செய்துள்ளேன்.

நான் சட்டத்தரணி. இனி அந்தத் தொழிலை முன்னெடுப்பேன். தகுதியானவர்களுக்கு இடமளிக்கப்படவேண்டும். தகைமையற்ற வேடதாரிகளுக்குக் கல்வியின் பெறுமதி தெரியாது” – என்றார்.
…………

எங்கள் பக்கம் வாருங்கள்! – சுசிலுக்குச் சஜித் அணி அழைப்பு

“ஜனநாயகம் இல்லாத அணியில் இருக்க வேண்டாம். எங்கள் பக்கம் வாருங்கள். இணைந்து பணியாற்றுவோம்.”

– இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தரவுக்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.எம். மரிக்கார் எம்.பி. கூறியவை வருமாறு:-

“இது ஜனநாயக நாடு. கருத்துச் சுதந்திரம் இருக்கின்றது. குறிப்பாக மக்கள் பிரதிநிதிக்கு, மக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் உரிமை இருக்க வேண்டும். அந்தவகையில் மக்களின் குரலாகவே சுசில் பிரேமஜயந்த ஒலித்தார். அதற்காக அவர் பதவி நீக்கப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

ஜனநாயகம் இல்லாத, அடக்குமுறை தலைவிரித்தாடும், மக்களின் மன நிலையைப் புரிந்துகொள்ளாத கட்சியில் இனியும் இருக்க வேண்டும். ஜனநாயகத்தை மற்றும் மக்களை நேசிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம்” – என்றார்.