இலங்கை ஜனவரி 18ம் திகதியன்று 500 மில்லியன் டொலர்கள் கடன் தவணையை மீளத்திருப்பிச் செலுத்தினால் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியமான
பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தேவையான டொலர்கள் இல்லாமல் போய்விடும் என்பதே தற்போதுள்ள கரிசனையாக உள்ளதென பிரபல வங்கியாளர் ராஜேந்திரா தியாகராஜா தெரிவிக்கின்றார்.
குளோப் தமிழுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை தொடர்பாக விரிவாக விளக்கமளித்தார்.
500 மில்லியன் டொலர்களைச் செலுத்துவதல்ல மாறாக தொடர்ச்சியாக வெளிநாட்டுக்கடன்களைச் செலுத்தக்கூடிய பலம் அரசாங்கத்திடம் இருக்கின்றதா என்பது பெரும் கரிசனை எனவும் அவர் கூறுகின்றார்.
வெளிநாட்டுக் கடன்களைச் திருப்பிச் செலுத்த வருடாந்தம் 4.5பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கையால் முடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்
அடுத்துவரும் 5 ஆண்டு காலப்பகுதியில் இலங்கை சர்வதேச இறையாண்மை முறிகள் 14 பில்லியன் அமெரிக்கடொலர்கள் உட்பட மொத்தமாக 24 தொடக்கம் 25 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுக்கடன்களைச்செலுத்த வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
2021ம் ஆண்டு முதல் 2025வரை சராசரியாக 4. 5பில்லியன் அமெரிக்கடொலர்களை வருடாந்தம் வெளிநாட்டுக்கடன் தவணைக் கொடுப்பனவாக செலுத்த வேண்டியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.