அரச கைக்கூலிகளுக்கு இடமளிக்காதீர்கள்! – தமிழர்களிடம் ரெலோ கோரிக்கை

0
289
Article Top Ad
“இந்தியாவை நோக்கிய கோரிக்கையின் வழியாக இலங்கை அரசின் இனவழிப்புக்கு எதிராகத் தந்திரோபாய நகர்வை தமிழர் தரப்பு ஒருமித்த பலத்துடன் மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிராகப் போராட்டத்தை நடத்தி தமிழர் தரப்பைக் காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் அரசின் கைக்கூலிகளின் நடவடிக்கைகளுக்கு இடமளிக்காதீர்கள்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ, தமிழ் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பில் ஊடகப்பிரிவு நேற்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“மாகாண சபை முறைமையை முற்றுமுழுதாக நீக்கி தமிழர்களைப் பலம் அற்றவர்களாக ஆக்குவோம் என்ற சபதத்தோடு அரச கட்டளை ஏறியவர் இன்றைய ஜனாதிபதி.  புதிய அரசியல் யாப்பின் மூலம் அதை நிறைவேற்றத்  தயாராகி வருகின்றார்.

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்ற செயலணியின் தலைவர் ஞானசார தேரர் மாகாண சபை முறையை அழித்து ஒழித்து  தமிழர்களுக்கு இருக்கும் ஆகக்குறைந்த அதிகார முறைமையை நீக்குவோம்  என்ற செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றார்.

அமைச்சரவை அந்தஸ்துடன் இந்தியாவுக்கான தூதுவராகச் சென்ற மிலிந்த மொரகொட தமிழர்கள் அரசியல் தீர்வைக் கோரவில்லை, அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்க்கக் கோருகின்றார்கள் என்று கூறி வருகின்றார்.  மாகாண சபை முறைமை ஒரு வெள்ளை யானைக்கு ஒப்பானது என்று இந்தியாவிலே தெரிவித்து வருகின்றார்.

வியாத்மக என்ற சிங்களப் புத்திஜீவிகள் அமைப்பு மாகாண சபை முறைமையை ஒழித்துக்கட்டி தமிழர்களை எமது தாயக பூமியிலேயே அரசியல் பலம் அற்றவர்களாக ஆக்க முயற்சி செய்கின்றார்கள். மகா சங்க பவுத்த பிக்குகள் இதே திசையிலே பயணிக்கின்றார்கள்.

13ஆவது திருத்தச் சட்டம் எமது அரசியல் தீர்வு அல்ல என்பதை நாம் தெட்டத்தெளிவாகக் கூறியுள்ளோம்.  நிரந்தரமான அரசியல் தீர்வை நாம் எட்டும் வரையும் மாகாண சபை முறைமை அரசியல் யாப்பில் இருப்பது அவசியமாகும். இதை நீக்கிவிட்டாலோ அல்லது பலவீனமாக்கினாலோ தமிழர் இருப்பே எந்த நாட்டில் கேள்விக்குறியாகிவிடும். இதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

மாகாணசபையின் அடித்தளமாக இருக்கும் 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதே இதற்கு ஒரே வழி என்ற வகையில்  பேரினவாத தென்னிலங்கை சிங்கள அரசு பிரசாரத்தை முன்னெடுத்து வெற்றியும் கண்டு வருகின்றார்கள்.

இதற்கு வலுசேர்க்கும் விதமாக எமது தமிழ் இனத்திலேயே  தேசியவாதிகள் என்ற போர்வையோடு  இயங்கும் அரச கைக்கூலிகள் 13 எதிர்ப்பு என்று ஒரு போராட்டத்தை அரசின் கனவுகளை நிறைவேற்றுவதற்குச் சாதகமாகச்  செயற்படுகின்றார்கள். இவர்களைத் தமிழ் மக்கள் அடையாளம் கண்டு நிராகரிக்க வேண்டும்.

தமது அரசியல்  கொள்கைக்கான எந்தப் பாதையையும் வகுக்க முடியாத இவர்கள், இதுவரையும் எந்த நகர்வையும் மேற்கொள்ளாதவர்கள் தமிழர்கள் ஒருமித்து முன்னெடுக்கும் செயற்பாடுகளை விமர்சிப்பதையே அரசியலாகக்  கொண்டுள்ளார்கள்.

இவர்கள் ஒற்றையாட்சியை எதிர்க்கின்றோம் என்று கூறிக்கொண்டு அதன் கீழுள்ள பிரதேச சபைகளில் பதவிகளைப் பெற்றுக்கொண்டவர்கள், ஒற்றையாட்சியை ஏற்று சத்தியப் பிரமாணம் செய்து நாடாளுமன்ற பதவிகளை அலங்கரித்துக் கொண்டவர்கள், எதிர்க்கிறோம் எனக் கூறும் 13இல் உள்ள  மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடத் தயாராகி வருபவர்கள். இரட்டைவேடம் போடும் இவர்களை மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

இவர்களால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான தீர்வையோ விடிவையோ பெற்றுத்தர முடியாது. தமது அரசியல் கையாலாகாத நிலையை மக்கள் அடையாளம் கண்டுவிட்டார்கள் என்பதால் வெற்றுக் கோஷங்களின் மூலம் எம்மக்களை ஏமாற்ற முயலுகிறார்கள். போராட்டத்துக்காக ஒரு துளி வியர்வை கூடச் சிந்தாதவர்கள் உயிரிழந்த போராளிகளையும்  மக்களையும் தமது ஈனச் செயல்களுக்குப் பயன்படுத்துகின்றார்கள். அந்தப் புனித ஆத்மாக்களின் தியாகங்களைத் தமது சுயலாப அரசியலுக்காக விலைபேசுகின்றார்கள்.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வேண்டி போராட வேண்டிய தேசியவாதிகள் என்று கூறிக் கொள்பவர்கள் தமிழர்களுக்கு எதிராகவே ஒரு போராட்டத்தை தாயக பூமியில் நடத்துவதற்குத் தமிழ் மக்கள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

ஏற்கனவே அரசின் முகவர்கள் பலர் சிறு குழுக்களாக நின்று தேசியத்துக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்து வருவதை நீங்கள் அறிவீர்கள்.  அதே பாதையில் தேசியவாதிகள் என்ற போர்வையைப் போர்த்திக்கொண்டு  தமிழின எதிர்ப்பு என்னும் அரசின் நிகழ்ச்சி நிரலை சிரமேற்கொண்டு அரசின் கனவுகளை நிறைவேற்றும் இந்தக்  கைக்கூலிகளை நிராகரித்து தமிழரின் ஒற்றுமையை பேரினவாத அரசுக்கும் சர்வதேசத்துக்கு தெரிவிக்குமாறு தமிழ் மக்களை வேண்டிக்கொள்கின்றோம்” – என்றுள்ளது.