காலநிலை மாற்றம் – அமேசான், கூகுள், வோடஃபோன் போன்ற பெருநிறுவனங்கள் செய்வதை அம்பலப்படுத்தும் அறிக்கை

0
413
Article Top Ad

காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான தங்கள் சொந்த இலக்குகளைக் கூட உலகின் பல பெருநிறுவனங்கள் எட்டவில்லை. கூகுள், ஆப்பிள், அமேசான் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் உள்ளன.

அதேசமயம், தாங்கள் ஆற்றிய பணிகளை மிகைப்படுத்தியோ அல்லது தவறாகவோ சொல்லும் வழக்கத்தைக் கொண்டுள்ளன என்றும் நியூ க்ளைமேட் இன்ஸ்டிட்யூட் எனும் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

வாடிக்கையாளர்கள், பசுமை தயாரிப்புகளை அதிகம் விரும்புவதால், கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் சுற்றுச்சூழல் தாக்கத்தின் மீது கவனம் செலுத்த வேண்டிய அழுத்தத்தில் இருக்கின்றன என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த அறிக்கையில் பயன்படுத்தப்பட்ட சில ஆய்வு முறைகளுடன் நாங்கள் உடன்படவில்லை என்றும், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக இருப்பதாகவும், சில நிறுவனங்கள் பிபிசி செய்தியிடம் தெரிவித்தன.

இந்த ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட நிறுவனங்கள் உலகளவில் வெளியாகும் பசுமை இல்ல வாயுக்களின் அளவில் 5% வெளியாகக் காரணமாக உள்ளன என்று இந்த அறிக்கை கூறுகிறது. இந்த நிறுவனங்களின் கார்பன் உமிழ்வு அதிகமாக இருந்தாலும், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் முன்னின்று செயல்படும் திறனைப் பெற்றுள்ளன.

இந்த ஆய்வின் ஆசிரியர் தாமஸ் டே பிபிசி நியூஸிடம் பேசியபோது, எங்கள் குழு முதலில் கார்ப்பரேட் உலகில் நல்ல நடைமுறைகளைக் கண்டறிய விரும்பியது என்று கூறினார். ஆனால் அவர்கள் “இந்த நிறுவனங்களின் நடைமுறைகளைக் கண்டு வெளிப்படையாகவே அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தனர்.”

நிறுவனங்கள் சொல்வது என்ன?

அமேசான் தனது அறிக்கையில் கூறியது: “காலநிலை மாற்றம் ஒரு தீவிரமான பிரச்னை என்பதை நாங்கள் அறிந்திருப்பதால், இந்த லட்சிய இலக்குகளை நாங்கள் நிர்ணயித்துள்ளோம்.

மேலும் முன்னெப்போதையும் விட இப்போது கூடுதலாக நடவடிக்கை தேவைப்படுகிறது. 2040க்குள் நிகர கார்பன் உமிழ்வில் பூஜ்ஜியம் (net-zero carbon) என்ற இலக்கை அடைவது எங்கள் இலக்கின் ஒரு பகுதியாக உள்ளது.

இதுதான் 2025க்குள் 100% புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் எங்கள் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான பாதையாகவும் உள்ளது.”

மேலும் நெஸ்லேவும் இதுகுறித்து கருத்து தெரிவித்தது: “காலநிலை மாற்றம் குறித்த எங்களது நடவடிக்கைகள் மற்றும் அர்ப்பணிப்புகளை ஆய்வு செய்வதை நாங்கள் வரவேற்கிறோம். இருப்பினும், நியூ க்ளைமேட் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தின் கார்ப்பரேட் காலநிலை பொறுப்பு கண்காணிப்பு (CCRM – Corporate Climate Responsibility Monitor) அறிக்கையில் எங்கள் அணுகுமுறை பற்றிய புரிதல் இல்லை மற்றும் குறிப்பிடத்தக்க தவறுகளும் உள்ளன.”

எப்படி நடத்தப்பட்டது ஆய்வு?

நியூ க்ளைமேட் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் மற்றும் கார்பன் மார்க்கெட் வாட்ச் ஆகிய லாப நோக்கற்ற நிறுவனங்களால் இந்த கார்ப்பரேட் காலநிலை பொறுப்பு கண்காணிப்பு ஆய்வு நடத்தப்பட்டது.

இதில், பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பதற்காக நிறுவனங்கள் பயன்படுத்தும் உத்திகளை இந்தக் குழு ஆய்வு செய்தது.

உலகளாவிய வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்த உலகம் 2050க்குள் நிகர-பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைய வேண்டும் என்று இலக்கு விஞ்ஞானிகளால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது வளிமண்டலத்தில் உள்ள பசுமை இல்ல வாயுக்களின் அளவை இதற்குமேல் துளியும் கூட்டக்கூடாது. இதன்மூலம் கார்பன் சமநிலையை எட்ட முடியும்.

கார்பன் உமிழ்வை முடிந்தவரை குறைப்பதுடன், அதே அளவு கார்பனை வளிமண்டலத்தில் இருந்து அகற்றுவதன் மூலம் எஞ்சியிருப்பதை சமநிலைப்படுத்துவதாகும்.

நிறுவனங்கள் தங்கள் இலக்குகளை தாங்களே நிர்ணயிக்கின்றன. எடுத்துக்காட்டாக, 2030க்குள் கூகுள் நிறுவனம் கார்பன் இல்லாததாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது.

உற்பத்தியான இடத்திலிருந்து பொருட்களை கொண்டு செல்வது முதல் தொழிற்சாலைகள் அல்லது கடைகளில் பயன்படுத்தப்படும் ஆற்றல் வரை எதனாலும் உமிழ்வு உருவாக்கப்படுகிறது. இதைக் குறைப்பதுதான் கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான வழிகளில் ஒன்று.

இதுபோல நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் எல்லா முறைகளையும் இந்த ஆய்வுக்குழு கவனித்தது.

அதன்படி, ஒட்டுமொத்தமாக, தற்போது நடைமுறையில் உள்ள உத்திகள் செயல்படுத்தப்பட்டால் , அதிகபட்சம் 40% உமிழ்வைக் குறைக்கும். உண்மையில் “நிகர பூஜ்ஜியம்” என்ற சொல்லில் குறிப்பிடப்பட்டுள்ள 100% என்பது இந்த முறைகளால் சாத்தியமில்லை.

25 நிறுவனங்களில் மூன்று நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிகளில் இருந்து 90% கார்பன் உமிழ்வை அகற்றுவதில் உறுதியாக உள்ளன என்று அது கூறுகிறது. அவை மார்ஸ்க், வோடபோன் மற்றும் டாய்ச் டெலிகாம்.

வணிக நிறுவனங்கள் தங்கள் காலநிலை உறுதிமொழிகளைப் பற்றி பேசும் விதமும் ஒரு பெரிய பிரச்னை என்று ஆய்வு கூறுகிறது. நிறுவனங்கள் கூறுவதற்கும் யதார்த்தத்திற்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது, என்று டே கூறுகிறார். மேலும் நுகர்வோர் உண்மையைக் கண்டறிவதும் கடினமாக இருக்கும்.

“நிறுவனங்களின் லட்சியப்பூர்வமானவை போல தோன்றும், தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கும் கூற்றுகள் அனைத்தும் பெரும்பாலும் உண்மையான பொருளைக் கொண்டிருக்கவில்லை” என்று அவர் விளக்குகிறார். “ஒப்பீட்டளவில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள் கூட தங்கள் செயல்களை மிகைப்படுத்துகின்றன.”

யாருடைய குழு ஆவணங்களை வாரக் கணக்கில் செலவழித்தது, எடுத்துக்காட்டாக வீட்டு உபயோகப் பொருட்கள்வா, தொழில்நுட்பம் அல்லது பல்பொருள் அங்காடியில் உணவை வாங்க முயற்சிக்கும் சராசரி நபர், (நிறுவனங்களின் காலநிலை மாற்ற கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து) முழுமையாக அறிந்துகொண்டு முடிவை எடுக்க சிரமப்படுவார் என்று டே கூறினார்.

ஒரு நிறுவனத்துடன் மறைமுகத் தொடர்புடைய செயல்பாடுகள் மூலம் வெளியாகும் உமிழ்வுகள், அப்ஸ்ட்ரீம் (ஒரு பொருள் உருவாக்கப்படும் முன்னரே மூலப்பொருட்கள் மூலம் வெளியாகும் உமிழ்வுகள்) அல்லது டௌன்ஸ்ட்ரீம் (ஒரு பொருள் உருவாக்கப்பட்ட பின்னர் அதன் விநியோகம் மற்றும் பயன்பாடு மூலம் வெளியாகும் உமிழ்வுகள்) உமிழ்வுகள் என அழைக்கப்படும் மிகவும் சர்ச்சைக்குரிய பகுதிகளில் ஒன்றாகும்.

எடுத்துக்காட்டாக, ஆப்பிள் ஃபோன்கள், மடிக்கணினிகள் மற்றும் பிற தயாரிப்புகளைப் பயன்படுத்தும் நுகர்வோரின் மின்சார நுகர்வு உட்பட, ஆப்பிளின் காலநிலை தடம் 70% அப்ஸ்ட்ரீம் உமிழ்வுகளால் உருவாக்கப்பட்டதாக அறிக்கை கூறுகிறது.

பல நிறுவனங்கள் இந்த உமிழ்வை தங்கள் காலநிலை திட்டங்களில் சேர்க்கவில்லை.

தங்களின் காலநிலை பொறுப்புகள் மற்றும் இலக்குகள் பற்றிய “உரையாடல் மற்றும் ஆய்வை” வரவேற்பதாகக் கூறும் ஈகேயா (Ikea) நிறுவனம், தங்களது இலக்குகள் புவிவெப்ப உயர்வை 1.5டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த முனையும் அறிவியல் நோக்குடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

“நியூ க்ளைமேட் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தின் புதிய அறிக்கை இதற்கு ஆக்கபூர்வமான கூடுதலாகும்,” என்கிறது ஈகேயா.

மேலும் யுனிலீவர் கருத்துரைத்தது: “இந்த அறிக்கையின் சில கூறுகளில் நாங்கள் வெவ்வேறு கண்ணோட்டங்களைப் பகிர்ந்துகொள்கிறோம், எங்கள் முன்னேற்றத்தின் வெளிப்புற பகுப்பாய்வுகளை நாங்கள் வரவேற்கிறோம். எங்கள் அணுகுமுறையை எவ்வாறு அர்த்தமுள்ளதாக உருவாக்க முடியும் என்பதைப் பார்க்க நியூ க்ளைமேட் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்துடன் ஓர் ஆக்கப்பூர்வமான உரையாடலைத் தொடங்கியுள்ளோம்.”

கூகுள் பிபிசி செய்தியிடம் கூறியது: “எங்கள் காலநிலை உறுதிப்பாடுகளின் நோக்கத்தை நாங்கள் தெளிவாக வரையறுத்து, எங்களின் வருடாந்திர சுற்றுச்சூழல் அறிக்கையில் எங்களின் முன்னேற்றம் குறித்து தொடர்ந்து அறிக்கை செய்கிறோம், எங்களின் ஆற்றல் மற்றும் பசுமை இல்ல வாயு உமிழ்வு தரவு எர்ன்ஸ்ட் & யங் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.”

ஆப்பிள் இந்த அறிக்கைக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை. ஆனால் அதன் கார்பன் தடத்தை குறைக்கும் திட்டம் உள்ளது என்று பிபிசி நியூசிடம் கூறியது.

கார்ப்பரேட் காலநிலைப் பொறுப்புக் கண்காணிப்பு நிறுவனங்களின் உறுதிமொழிகளைத் தொடர்ந்து மதிப்பீடு செய்து, ஆண்டுதோறும் கண்டுபிடிப்புகளை வெளியிடும்.

பகுப்பாய்வு செய்யப்பட்ட நிறுவனங்களின் முழு பட்டியல்: Maersk, Apple, Sony, Vodafone, Amazon, Deutsche Telekom, Enel, GlaxoSmithKline, Google, Hitachi, Ikea, Vale, Volkswagen, Walmart, Accenture, BMW Group, Carrefour, CVS Health, Deutsche Post DHL , E.On SE, JBS, Nestle, Novartis, Saint-Gobain, Unilever.

நன்றி – பிபிசி தமிழ்