வடக்கு – கிழக்கு விடயத்தில் ஜெய்சங்கர் பீரிஸை விட அனுபவஸ்தர்!

0
361
Article Top Ad

இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் புதுடில்லியில் நேற்று முன்தினம் சந்தித்து உரையாடியுள்ளனர்.

இந்திய – இலங்கை வெளிவிவகார அமைச்சர்களைப் பொறுத்தவரை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை – இந்திய வெளியுறவு விடயத்தில் நன்கு பரிச்சயமான ஒருவராவார்.

இந்திய இராஜதந்திர சேவையில் ஒரு மூத்த இராஜதந்திரியாக பல நாடுகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர் எஸ்.ஜெய்சங்கர். அத்துடன், இலங்கையில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் ஒரு முக்கிய அதிகாரியாக பணியாற்றியதோடு ஜே.என்.டிக்ஸிட் இந்திய உயர் ஸ்தானிகராக இலங்கையில் பணியாற்றிய காலத்தில் 1987 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய சமாதான ஒப்பந்தத்தை அமுலாக்க வந்திருந்த இந்திய அமைதிப்படைக்கு பொறுப்பான விசேட அதிகாரியாகவும் ஜெய்சங்கர் பணிபுரிந்திருந்தார்.

இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டபோது இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தராக பணியாற்றியிருந்தார்.

1994ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இலங்கையின் ஜனாதிபதியாகத் தெரிவானபோது தமது அமைச்சரவையில் சிறப்புத் தகைமையுள்ளவர்களுக்கும் இடமளித்து அவர்களை நியமன அமைச்சர்களாகவும் பதவியில் அமர்த்தியிருந்தார் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.

அவ்வாறு பதவியில் அமர்த்தப்பட்டவர்களில் முக்கியமானவர்களே மறைந்த வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் மற்றும் இன்றைய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் வெளிவிவகார துறையைப் பொறுத்தவரை 1983ஆம் ஆண்டுக்கு பின்னரே சர்வதேச ரீதியாக பெரிதும் பேசப்படும் நிலைக்குள்ளாகியதோடு இந்தியாவுடனும் வெளியுறவுத்துறை குறித்து நெருங்கி செயல்பட வேண்டிய நிலைக்குள்ளாகியிருந்தது. இதற்கு இலங்கையில் 1983ஆம் ஆண்டில் ஏற்பட்ட கறுப்பு ஜூலை இனக் கலவரமே முக்கிய காரணமாகும். அன்று இந்திய பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி.

இலங்கையில் 83 ஜூலை இனக் கலவரம் ஏற்பட்டபோது நிலைமையை நேரில் கண்டறிவதற்காக இலங்கைக்கு அன்று வந்த இந்திய வெளிவிவகார அமைச்சரே பி.வி.நரசிம்மராவ். இவர் பின்னாளில் இந்திய பிரதமராகவும் பதவி வகித்திருந்தார்.

எனவே, 1983ஆம் ஆண்டு முதல் இன்று வரை இந்திய – இலங்கை வெளியுறவுத்துறைகள் பலதரப்பட்ட சவால்களுக்கு முகங்கொடுத்து இருக்கின்றன.

தற்போதைய சூழலில் இந்தியா, இலங்கை ஆகியவை தமது உள்நாட்டு விவகாரங்கள் சம்பந்தமாகவும் பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்தும் அதிகம் கவனம் செலுத்த வேண்டியவையாக இருக்கின்றன.

இலங்கையின் பொருளாதார நிலவரம் என்றுமில்லாதவாறு பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றது. அத்துடன், உள்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை இலங்கையில் 13ஆவது திருத்தச் சட்டம் இலங்கையின் அரசியல் உறுதிப்பாட்டுக்கு மிக அவசியமானதாக இருக்கின்றது.

13ஆவது திருத்தச்சட்டம் அமுலாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இலங்கையின் தமிழ்த் தரப்பினர் வடக்கு – கிழக்கு யுத்தம் முடிவுக்கு வந்த காலம் முதல் வலியுறுத்தி வருகின்றன. இது விடயத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்திய வெளியுறவு செயலாளராக இருந்த காலம் முதல் கொண்டு வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இருந்தபோதிலும் இது விடயத்தில் இந்தியா அசமந்தப் போக்குடனிருப்பதை நோக்கும் போது 13ஆவது திருத்தச்சட்டம் இலங்கையில் முழுமையாக அமுலாக்கப்படும் பட்சத்தில் இலங்கை மீதான தனது பிடியை இழந்துவிடக்கூடுமோ என இந்தியா நினைத்திருப்பது போன்றே தோன்றுகின்றது.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தற்போது இந்தியாவுக்கு மேற்கொண்டுள்ள விஜயம் இலங்கையை பொருளாதார அழுத்தங்களிலிலிருந்து விடுபடச்செய்யும் விதத்தில் இந்தியாவின் உதவியை நாடுவதாகவே இருக்கின்றது. ஏற்கனவே இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபடும் விதத்தில் பெருமளவு நிதியுதவியை வழங்கியுள்ளது.

இந்நிலையில், 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக தனது பங்களிப்பை இந்தியா தற்போது வெளிப்படுத்த வேண்டியது இன்றியமையாததாகின்றது. அத்துடன், எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் இடம்பெறவுள்ள 49 ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூடடத்தொடரிலும் இதுவரை காலமும் இலங்கை மீதான 46-1 ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்படாதிருப்பதையும் இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கின்றது.

இதுகுறித்து இலங்கை இந்தியாவை திசை திருப்ப முயலும் நடவடிக்கைக்கு இந்தியா இடம்தரக்கூடாதெனவும் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தியாவை எச்சரித்துள்ளார்.

எனவே, இந்தியா இலங்கையுடனான தனது வெளியுறவுக் கொள்கை விடயத்தில் வடக்கு – கிழக்கில் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக கூடுதல் அழுத்தங்களை தற்போதைய சூழ்நிலையில் இலங்கைக்கு வழங்குவதே இன்றியமையாததாகின்றது.

நன்றி – ஈழநாடு