இப்படி மோசமான அறுவடையை வாழ்நாளில் கண்டதில்லை -விவசாயிகள் துயர் பகிர்வு

0
213
Article Top Ad

விவசாயி பிரியந்த ராஜபக்ஸ

‘ உழுதுண்டு வாழ்வோரே வாழ்வர் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வர்’ இது நம் முப்பாட்டன் வள்ளுவன் சொன்ன பொன்மொழி. விவசாயிகள் பற்றி எவ்வளவு உயர்வாக ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதியிருந்தார்.

ஒரு நாட்டிற்கு விவசாயிகள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதற்கு வள்ளுவனின் குறள் சிறந்த உதாரணம். விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால் நாட்டிலுள்ள மக்களின் நிலையோ பரிதாபகரமானது. இதற்கு இலங்கை சிறந்த உதாரணமாகும்.

கடந்த வாரத்தில் இலங்கையின் அதிகமாக விவசாயம் நடைபெறும் பகுதிகளில் ஒன்றான கந்தளாய்ப் பகுதிக்கு சென்று அங்குள்ள சில விவசாயிகளுடன் உரையாடக்கிடைத்தது. கண்களிலே ஏக்கத்துடன் சுமார் ஒரடியளவில் வளர்ந்துள்ள நெற்கன்றுகளை பார்த்தபடி இடையிடையே அங்குள்ள களைகளை பிடுங்கியபடி நிற்றிருந்தார் பிரியந்த ராஜபக்ஸ. 46 வயதுடைய பிரியந்தவின் குடும்பமே விவசாயக் குடும்பந்தான்.

சுமார் 30 வருடங்களாக விவசாயத்தில் ஈடுபட்டுவரும் பிரியந்த முன்பு எப்போதுமே தனது வயலை இந்த நிலையில் பார்த்தது இல்லை என்கிறார். ‘ நாம் இங்கு மூன்று மாதத்தில் விளையும் நெல்லைப் பயிரிட்டோம். இன்று சரியாக மூன்று மாதங்களும் பத்து நாட்களும் ஆகிவிட்டன. இன்னமும் இவ்வளவு உயரம் தான் வளர்ந்திருக்கின்றது’ என்று கவலையுடன் கூறினார்.

இரசாயனப் பசளைக்கு அரசாங்கம் தடைவிதித்தமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டது என்பது அவரது கருத்து. இரசாயன உரம் போட்டியிருந்தால் பயிர்கள் மூன்று மாதத்தில் இடுப்பளவினைத்தாண்டி செழித்துவளர்ந்திருக்கும் என்கிறார் அவர்.

தனது நான்கு ஏக்கர் அளவிலான வயல் நிலத்தில் இம்முறை மேற்கொண்ட அறுவடையின் போது வெறுமனே 20 மூடை நெல்லே கிடைத்ததாக கூறும் பிரியந்த முன்னர் இந்த 60 மூடை நெல்லை இதே வயலில் இருந்து பெற்றதாகச் சுட்டிக்காட்டுகின்றார்.

அரசாங்கம் உங்களுக்கு சேதனப் பசளை வழங்கியதல்லவா ? அப்படியிருந்தும் இந்த நிலை ஏன் ஏற்பட்டது என அவரிடம் வினவியபோது ‘ அது எவ்விதத்திலும் பயனற்றது. வெறும் தார் உருண்டை போன்றிருந்தது. அதனை எங்களால் போட முடியாது என்பதால் நாம் ஒதுக்கிவைத்துவிட்டோம்.

அத்தோடு ஒரு எண்ணெய்ப் பதார்த்தத்தையும் தந்தார்கள். அதனை வயலில் தெளித்தபோது மோசமான மணம் காணப்பட்டது. அதற்கு பண்டி மற்றும் நாய்கள் எல்லாம் வயலுக்குள் நுழைந்து துவம்சம் செய்தன.

அதனால் பெருமளவான எமது வயல் நிலங்களில் எவ்வித உரத்தையும் இடாமலே பயிர்களை நட்டோம் என்கிறார் பிரியந்த .

ராஜபக்ஸவின் பெரும் ஆதரவாளரான பிரியந்த கடந்த பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுணவிற்கு வாக்களித்திருந்தார். தற்போது வயல்களின் நிலையைப் பார்க்கும் போது அரசாங்கத்தைப் பற்றி நினைக்கையில் என்ன தோன்றுகின்றது என அவரிடம் வினவியபோது

‘ இதனைப் பார்க்கின்றபோது அவர்களைக் கொல்ல வேண்டும் என்ற வெறி ஏற்படுகின்றது எம்முடைய பிள்ளைகள் எதனைச் சாப்பிடுவார்கள். நாம் தற்போது என்ன செய்யப் போகின்றோம். எம்மால் அவர்களைக் கொன்று தின்னமுடியுமென்றால் நாம் கொன்று தின்போம் . எமது பிரதேசத்திற்கு அருகில் அவர்கள் வந்தால் நான் கல்லால் அவர்களின் மண்டையில் அடிப்பேன். அந்தளவிற்கு எனக்கு ஆத்திரம் வருகின்றது. இனி ஒருபோதும் அவர்களுக்கு வாக்களிக்கமாட்டேன்ஷ என்றார் பிரியந்த ராஜபக்ஸ.

விவசாயி சிறிபால மடகெதர

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள அறுவடையைக் கொண்டு எடுத்த கடன்களைக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறும் பிரியந்த கூலி வேலை செய்து தான் கடன்களை அடைக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக சோகத்தைப் பகிர்ந்துகொண்டார்.

புpரியந்தவைக் கடந்த சில கிலோமீற்றர்கள் சேருநுவர பகுதிக்கு சென்ற போது 74 வயதுடைய விவசாயி சிறிபால மடகெதரவைச் சந்திக்கக் கிடைத்தது. விவசாயம் பற்றிப் பேசலாமா என்று கூறும் போது தனது வாயைக் கிளறவேண்டாம். ஆட்சியில் உள்ளவர்களைப் பற்றி வாய்க்குள் கடுமையாக திட்டியது பக்கம் நின்ற எமது காதுகளிலும் வீழ்ந்தது.

‘ ஒரு நாட்டை நடத்திச் செல்வதற்கு விவசாயிகள் முக்கியம். தொழிலாளர்கள் முக்கியம். அரச ஊழியர்கள் எங்கிருந்து சம்பளம் பெறுகிறார்கள். அவர்கள் விவசாயிகளின் வருமானத்தில் இருந்தல்லவா வசதிகளைப் பெறுகிறார்கள்.

எமது பொருளாதாரத்தை அவர்கள் நிர்மூலமாக்கினால் எப்படி அவர்களால் வாழமுடியும்? நாம் கடுமையான சூழலில் விவசாயம் செய்கின்றோம். எமக்கு உரம் இல்லாவிடின் என்ன நடக்கும்? நஞ்சை உண்டு சாவதா ? என்று கேள்வி எழுப்பினார்.

இந்தப் பகுதியில் அதிகளவானவர்கள் சிறுநீரக வியாதிக்கு உட்பட்டுள்ளார்கள். புற்றுநோய் போன்ற பல நோய்களும் உள்ளன அந்தவகையில் இரசாயன உரத்தை தடைசெய்து சேதனப் பசளையை ஊக்குவிக்க அரசாங்கம் எடுத்த தீர்மானம் நல்லதல்லவா என அவரிடம் வினவியபோது ‘ எனது பெற்றோரின் காலத்தில் எல்லாம் இரசாயனப் பசளை இருக்கவில்லை.

நாம் நன்கு உண்டு குடித்து வாழ்ந்தது உண்மைதான். ஆனால் கடந்த பல தசாப்தங்களாக இரசாயனப் பசளையைப் பயன்படுத்தியே விவசாயிகள் பழக்கமாகிவிட்டனர்.

இந்த நிலமும் இரசாயனப் பசளைக்கே பழக்கப்பட்டுவிட்டது. இப்படி இருக்கையில் இரசாயனப் பசளையைப் பயன்படுத்தவேண்டாம் என்று அரசாங்கம் கூறுகின்றது. அப்படியெனில் விவசாயிகள் எப்படி சம்பாதிக்க முடியும் ? எனக் கேள்வி எழுப்பினார் சிறிபால மடகெதர.

வழமையாக பரபரப்பாக சனக்கூட்டம் நிறைந்து காணப்படும் புறக்கோட்டைப் பகுதியிலுள்ள அரிசிக்கடையில் வாடிக்கையாளர் எவருமற்ற நிலையிலும் காலை 11 மணியளவில் அரிசி நிலைவரம் தொடர்பான பேசவேண்டும் என்ற போது இன்முகத்துடன் வரவேற்றார் கிருஸ்ணன் புஸ்பநாதன் ‘ நாம் விவசாயிகளிடம் அனுப்பு கூறும் தொகை அரிசி மூடைகளை அவர்கள் தற்போது அனுப்புவதில்லை. வெகுகுறைவாக அனுப்புகின்றனர் . இல்லாவிட்டால் அனுப்புவதே கிடையாது. வீட்டிலுள்ளவர்களுக்கு உண்பதற்கே அரிசி போதாது எப்படி அனுப்புவது எனக் கேட்கின்றனர் ‘ என்றார் .

கிருஸ்ணன் புஸ்பநாதன்

விவசாயத்துறைசார் நிபுணர்களின் கருத்துப்படி எதிர்வரும் மாதத்தில் இலங்கையில் கடுமையான உணவுநெருக்கடி ஏற்படுவதற்கும் உணவுதொடர்பான பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டென எச்சரிக்கப்பட்டுள்ளது.

உரப் பிரச்சனை காரணமாக நடப்பு பெரும்போகத்தில் குறைவான அறுவடையையே விவசாயிகள் பெற்றுவருகின்றமை தொடர்பான அறிவிப்புக்கள் வெளியாகிவருகின்றன.

எவ்விதமான இடைமாற்று திட்டமுமின்றி 2021ம் ஆண்டு மே மாதத்தில் அரசாங்கம் இரசாயன உரத்திற்கு தடைவிதித்து சேதனப் பசளையை பயன்படுத்துமாறு முன்வைத்த கொள்கைத்திட்டத்தின் விளைவை இந்தப் போகத்தில் விவசாயிகள் அனுபவிக்கத்தொடங்கியுள்ளனர். அடுத்த மாதமுதல் இதன் விளைவுகளை பொதுமக்கள் இன்னமும் அதிகமாக அனுபவிப்பர் என்றே எச்சரிக்கப்பட்டுள்ளது.

விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உரம் வழங்கப்படவில்லை இதன்காரணமாக அரிசி மற்றும் ஏனைய பயிர்கள் மரக்கறிகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வரத்தொடங்கியுள்ளது.

இம்முறை அரிசிக்கு 50 சதவீதமளவில் அரிசி ஏனைய பயிர்கள் மற்றும் மரக்கறி வகைகளுக்குப் பற்றாக்குறை ஏற்படும் என அபாயச்சங்கு ஊதும் விவசாயத்திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கே.குணரத்ன மேலும் கூறுகையில்.

‘ இந்த நிலை ஏற்படுவதற்கு காரணம் சேதன பசளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விவசாயச் செய்கைதொடர்பாக எவ்வித திட்டமும் இருக்கவில்லை.

கட்டங் கட்டமான திட்டம் இருந்திருக்குமேயானால் சேதனப் பயிர்ச்செய்கை வெற்றிபெற்றிருக்கும். ஆனால் போதிய திட்டமிடல் இன்மையானது ஒட்டுமொத்த விவசாயத்துறையையும் பாழ்படுத்திவிட்டது| –

கடந்தாண்டில் இரசாயன உரத்திற்கு தடைவிதிக்கப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டுள்ள பத்துலட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு நஸ்ட ஈடாக 40 பில்லியன் ரூபாவை வழங்குவதற்கு கடந்த மாதத்தில் அரசாங்கம் தீர்மானிருந்தது.

சில மாவட்டங்களில் 10 சதவீதம் வரை நெல் அறுவடை குறைந்துள்ளதாகவும் மற்றும் சில மாவட்டங்களில் 15 முதல் 20 வீதம் வரையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ள விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்தகமகே அண்மையில் தெரிவித்திருந்தார்.

இலங்கையை 100 சதவீதம் சேதனப் பசளை பயன்படுத்தும் நாடாக மாற்றும் திட்டம் பெரும் தோல்வி கண்டுள்ளதை விவசாய நிபுணர்கள் பலரும் ஒப்புக்கொண்டுள்ளனர் . இருந்தபோதும் விவசாய அமைச்சரோ பெரும் போகத்திற்கு நெல் வயல்களைத் தயார் செய்வதில் ஏற்பட்ட தாமதமே அறுவடை வீழ்ச்சிக்கு காரணம் என கூறியிருந்தார்.

இதே வேளை அமைச்சரவைப் பேச்சாளரும் பெருந்தோட்டத்துறை அமைச்சருமான ரமேஸ் பத்திரண சேதனப் பசளைக்கு மாற்றும் முயற்சிகாரணமாக 20 முதல் 25 சதவீத இழப்பு ஏற்படும் என கடந்த ஜனவரியில் கூறியிருந்தார். நாம் நேரில் மேற்கொண்ட விஜயத்தின் போது விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பு அதனை விட அதிகமாக இருப்பதனை உணர்ந்தகொள்ளமுடிந்தது.

இந்த பற்றாக்குறையை நிவர்த்திக்கும் வகையில் சுமார் 300 000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் மார்ச் மாதம் அளவில் மக்கள் பொதுவாகப் பயன்படுத்தும் அரிசிகளின் விலைகளே 200 ரூபாவைத் தாண்டும் எனக் கூறப்படுகின்றது.