ஜெனீவாவில் இம்முறை தப்பிப்பிழைக்குமா கோட்டா அரசு? – அமுக்கிப் பிடிக்கத் தயாராகிவிட்டது சர்வதேச சமூகம்

0
250
Article Top Ad

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் சுவிஸ் தலைநகரான ஜெனிவாவில் இம்மாதம் 28ஆம் திகதி ஆரம்பமாகின்றது. ஏப்ரல் முதலாம் திகதிவரை நடைபெறவுள்ள குறித்த மாநாட்டில் உலக நாடுகளின் மனித உரிமை நிலைவரம் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளதுடன், விவாதமும் இடம்பெறவுள்ளது. அத்துடன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் எழுத்துமூல அறிக்கையும் முன்வைக்கப்படவுள்ளது.

ஆபிரிக்க வலயத்தில் 13 நாடுகள், ஆசிய பசுபிக் வலயத்தில் 13 நாடுகள், மேற்கு ஐரோப்பியாவில் 7 நாடுகள், கிழக்கு ஐரோப்பாவில் 8 நாடுகள் என மொத்தம் 47 நாடுகள் பேரவையில் அங்கம் வகிக்கின்றன. இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை சுழற்சி முறையில் அங்கத்துவம் வழங்கப்படும். மேற்படி நாடுகளுக்கு வாக்குரிமை உண்டு. ஏனைய நாடுகள் கண்காணிப்பாளர்களாக பங்கேற்கலாம்.

அந்தவகையில் இம்முறை இலங்கை, மியன்மார், ஆப்கானிஸ்தான் உட்பட மேலும் சில நாடுகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது. அரச சார்பற்ற அமைப்புகளால் நடத்தப்படும் உப மாநாடுகளிலும் மேற்படி நாடுகள் முக்கிய இடத்தைப் பிடிக்குமென இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் முன்வைக்கப்படவுள்ள வருடாந்த அறிக்கையில், இலங்கை விவகாரம் தொடர்பிலும் பிரஸ்தாபிக்கப்படவுள்ளது. அது தொடர்பில் மார்ச் 03 ஆம் திகதி விவாதமும் இடம்பெறவுள்ளது.

சர்வதேச மட்டத்தில் ஜெனிவாக் கூட்டத்தொடரே இலங்கை சந்திக்கும் மிகப்பெரிய இராஜதந்திர சமராக இருக்கின்றது. குறிப்பாக 2012 ஆம் ஆண்டு முதல் இலங்கை தொடர்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. எந்தவொரு வாக்கெடுப்பிலும் இலங்கை வென்றதில்லை. எனினும், சீனா, ரஷ்யா, கியூபா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் அழுத்தங்களை சமாளித்து வருகின்றது.

இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் பொறுப்புக்கூறப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதி நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை, போருக்கு பின்னரான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

ஆரம்பத்தில் உள்ளகப் பொறிமுறை ஊக்குவிக்கப்பட்டாலும், அவற்றை செயற்படுத்துவதில் இலங்கை அரசு ஆமை வேகம் காட்டியது. இதனால் அனைத்துலக சமூகம் கடும் அதிருப்தியில் இருந்தன. காத்திரமான தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. குறிப்பாக பொருளாதாரத் தடைக்கான நகர்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த தருவாயிலேயே 2015 இல் முன்கூட்டியே மஹிந்த ராஜபக்ச தேர்தலுக்குச் சென்றார்.

அத்தேர்தலில் மஹிந்த தோல்வி கண்டார். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மைத்திரி தலைமையில் உதயமான நல்லாட்சி அரசு, சர்வதேச சமூகத்துக்கு சாதகமான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியது. ஜெனிவாத் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கவும் இணங்கியது. இதனால் இலங்கைக்கு உள்ளகப் பொறிமுறையை செயற்படுத்துவதற்கு ஒன்றரை வருடங்கள் அவகாசம் வழங்கப்பட்டது.

அதன்பிரகாரம் இழப்பீட்டு பணியகத்தை அமைத்தல், நல்லிணக்க செயலணி, புதிய அரசமைப்பு, பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், இடைநடுவில் திட்டங்களை மைத்திரி தரப்பு குழப்பியது. சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றப்படவில்லை.

மீண்டுமொருமுறை உள்ளகப் பொறிமுறை தோல்வி கண்டது. இதனால் சர்வதேச பங்களிப்புடனான பொறிமுறையே வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 2019 இல் ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு, நல்லாட்சி வழங்கிய இணை அனுசரணையை விலக்கிக்கொண்டது, அழுத்தங்கள் தொடர்ந்தால் மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவோம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மறுபுறத்தில் பொறுப்புக்கூறும் பொறிமுறை செயற்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், அனைத்துலக சமூகம் தற்போது நடவடிக்கையில் இறங்குவதற்குத் தயாராகிவிட்டது.