ஸ்ரீதேவி வாழ்க்கை எப்படி இருந்தது? – ராம் கோபால் வர்மாவின் காதல் கடிதம்

0
289
Article Top Ad

மறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்த தனது நினைவுகளையும் எண்ணங்களையும் ‘ஸ்ரீதேவி ரசிகர்களுக்கு என் காதல் கடிதம்’ எனும் தலைப்பில் திறந்த மடலாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார் இயக்குநர் ராம் கோபால் வர்மா. அதன் தமிழாக்கம் பின்வருமாறு.

உங்களில் கோடிக்கணக்கானவர்களை போல நானும் ஸ்ரீதேவி மிகவும் அழகான, ஈர்ப்புக்குரிய பெண் என்று நினைத்தேன். இந்த நாட்டின் மிகப்பெரிய திரை நட்சத்திரமான அவர் 20 ஆண்டுகளுக்கும் மேல் வெள்ளித் திரையில் கோலோச்சினார்.

ஆனால், அது இந்தக் கதையின் ஒரு பகுதி மட்டுமே. ஸ்ரீதேவியின் மரணம் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தந்தாலும், வாழ்வும் மரணமும் கணிக்க முடியாதது, கொடூரமானது, வலுவிழந்தது மற்றும் புதிரானது என்பதற்கான ஒரு மோசமான நினைவூட்டல்தான் ஸ்ரீதேவியின் மரணம்.

ஸ்ரீதேவியின் இறப்புக்குப் பிறகு அவரது அழகு, நடிப்பாற்றல், அவரது மரணம் எவ்வாறு பாதித்துள்ளது என்பது எல்லாம் பற்றி பேச அனைவரையும்விட என்னிடம் அதிக விடயங்கள் உள்ளன.

‘க்ஷணம்’ மற்றும் ‘கோவிந்தா கோவிந்தா’ ஆகிய எனது இரு படங்களில் அவர் நடித்தபோது அவருடன் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்தது. ஒரு பிரபலத்தின் வாழ்க்கை வெளியுலகம் நினைப்பதைவிட எப்படி முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என்பதற்கு ஸ்ரீதேவியின் வாழ்க்கை ஒரு மிகச்சிறந்த உதாரணம்.

பெரும்பாலனவர்களுக்கு ஸ்ரீதேவியின் வாழ்க்கை மிகவும் நேர்த்தியானது என்ற எண்ணமே உண்டு. அழகிய முகம், சிறந்த திறமை, இரு அழகான மகள்களுடன் நிலையான குடும்பம் இருந்தது அவருக்கு. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவரது வாழ்க்கை விரும்பத்தக்கதாகவும், பொறாமைப்படும் வகையிலும் இருந்தது. ஆனால், உண்மையிலேயே ஸ்ரீதேவி மகிழ்ச்சியாக இருந்தாரா?

அவரைச் சந்தித்த நாள் முதலே அவரை நான் நன்கு அறிவேன். அவரது தந்தை இறக்கும் வரை அவர் வானில் சிறகடிக்கும் பறவையைப் போல இருந்ததையும், அவரது தந்தையின் இறப்புக்குப் பின்னர் மிகவும் கட்டுப்பாடுகள் விதித்த அவரது தாயால் அவர் ஒரு கூண்டுப் பறவையைப் போல இருந்ததையும் நான் என் கண்ணாரக் கண்டுள்ளேன்.

அந்த காலகட்டத்தில் நடிகர்களுக்கு கருப்பு பணமாகத்தான் சம்பளம் வழங்கப்படும். வருமான வரி சோதனைகளுக்கு பயந்து அவரது தந்தை, தன் நண்பர்களையும் உறவினர்களையும் நம்பினார். அவர் இறப்புக்குப் பிறகு, அவர்கள் அனைவரும் ஸ்ரீதேவியை ஏமாற்றினார்கள்.

ஸ்ரீதேவியின் தாயும் அவரது அறியாமையால், பிரச்சனைக்கு உரிய பல சொத்துகளில் முதலீடு செய்ய, அந்தப் பிழைகள் அனைத்தும் சேர்ந்து அவர் ஒன்றும் இல்லாதாராகவே இருந்தார். போனி கபூர் அவரது வாழ்க்கைக்குள் நுழையும்போது அவர் கிட்டத்தட்ட அனைத்தை சொத்துக்களையும் இழந்தவராகவே இருந்தார்.

ஏற்கனவே கடுமையான கடன் நெருக்கடியில் இருந்த போனி கபூரால், ஸ்ரீதேவி சாய்ந்து அழுவதற்கு தனது தோள்களை மட்டுமே கொடுக்க முடிந்தது.

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு மூளை அறுவைசிகிச்சையால் ஸ்ரீதேவியின் தாய் உளவியல் நோயாளியானார். ஸ்ரீதேவியின் தங்கை ஸ்ரீலதாவும் தனது அண்டை வீட்டு நபர் ஒருவருடன் தாமாகச் சென்று மணம் புரிந்துகொண்டார்.

இறப்பதற்கு முன்பு ஸ்ரீதேவியின் தாய், சொத்துகள் அனைத்தையும் ஸ்ரீதேவியின் பேரிலேயே உயிலாக எழுதி வைத்தார். ஆனால், அந்த உயிலில் கையெழுத்திடும் தனது தாய் தெளிவாகச் சிந்திக்கும் நிலையில் இல்லை என்று ஸ்ரீலதா, ஸ்ரீதேவி மீது வழக்குத் தொடுத்தார்.

அந்தச் சூழ்நிலையில், கோடிக்கணக்கானவர்களால் விரும்பப்பட்ட ஸ்ரீதேவி, பணம் ஏதுமின்றி தனித்து நின்றார். அவருடன் இருந்தது போனி கபூர் மட்டும்தான்.

போனி கபூரின் தாய் ஸ்ரீதேவியைத் தனது குடும்பத்தைக் கலைத்தவராகவே பார்த்தார். போனி கபூரின் முதல் மனைவி மோனாவுக்கு செய்தவற்றுக்காக, ஒருமுறை ஓர் ஐந்து நட்சத்திர விடுதியில் வைத்து அனைவரின் முன்னிலையிலும் ஸ்ரீதேவியின் வயிற்றில் குத்தினார் போனியின் தாய்.

‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் நடித்த சிறு காலக்கட்டத்தைத் தவிர அவர் பெரும்பாலும் மகிழ்ச்சியற்றவராகவே இருந்தார். எதிர்காலம் பற்றிய உத்தரவாதமின்மை, தனி வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவங்கள் அவரது மனதில் ஆழமான வடுக்களை ஏற்படுத்தியது. அதன் பின்னர் அவர் நிம்மதியாகவே இல்லை.