உக்ரைன் Vs ரஷ்யா – புதினின் முடிவால் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்படுமா?

0
306
Article Top Ad

யுக்ரேன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான நெருக்கடி கடுமையாக தீவிரமடைந்து வருகிறது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கிழக்கு யுக்ரேனி எல்லைக்கு உள்பட்ட இரண்டு பிரிவினைவாத ஆதிக்கம் நிறைந்த பகுதிகளை அவற்றின் தன்னாட்சி மிக்க பிரதேசங்களாக அங்கீகரித்துள்ளார்.

டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய இந்த இரண்டு பகுதிகள். ஏற்கெனவே ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் தனி குடியரசுகள் ஆக அழைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்த பகுதிகளுக்கு செல்லுமாறு ரஷ்ய படைகளுக்கு புதின் உத்தரவிட்டுள்ளார். புதினின் இந்த அறிவிப்பால் மேற்கத்திய நாடுகளில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் விளைவாக அமெரிக்காவும் ஐரோப்பாவும் ரஷ்யா மீது கடுமையான தடைகளை அறிவிக்கக்கூடும்.

இந்தச் சூழலில், யுக்ரேன் நெருக்கடியால் உருவாகி வரும் உலகச் சூழல் இந்தியாவுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது. வரலாற்று ரீதியாக யுக்ரேன் விஷயத்தில் இந்தியா ரஷ்யாவுடன் இருந்துள்ளது, ஆனால் இப்போதைய நிலையானது 2014இல் இருந்து வேறுபட்ட ஒன்று.

2014 மார்ச் மாதத்தில் யுக்ரேனின் க்ரைமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டபோது, ​​இந்தியா அது குறித்து அதிகம் பேசவில்லை.

ஆனால் இந்தியா தெரிவித்த கருத்துக்கள் ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்தன.

இந்தியாவின் நிலை என்ன?

“இந்த விஷயத்தில் அனைத்து தரப்பினரும் நிதானத்துடன் செயல்பட வேண்டும்” என்று யுக்ரேன் நெருக்கடி தொடர்பாக நடந்து வரும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

“யுக்ரேனின் கிழக்கு எல்லையில் ஏற்பட்டுள்ள நிலை மற்றும் ரஷ்யாவின் அறிவிப்பை இந்தியா கவனித்து வருகிறது. ரஷ்யா மற்றும் யுக்ரேன் எல்லையில் அதிகரித்து வரும் பதற்றம் ஆழ்ந்த கவலைக்குரிய விஷயம். இச்சம்பவங்கள் அப்பகுதியின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்” என்று ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி கூறினார்.

அத்துடன் இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய டி.எஸ்.திருமூர்த்தி, “இந்த விஷயத்தில் எல்லா தரப்பினரும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

“எல்லா நாடுகளின் பாதுகாப்பு நலன்களுக்காகவும், பிராந்தியத்தில் நீண்டகால அமைதிக்காகவும் பதற்றங்களை உடனடியாக குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது.”

“ராஜீய அளவிலான பேச்சுவார்த்தையின் மூலமே இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும்,” எனவும் திருமூர்த்தி தெரிவித்துள்ளார். அண்மைக்காலத்தில் பதற்றத்தைத் தணிக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் எடுத்த முயற்சிகள் குறித்து சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது” என்றும் டிஎஸ் அவர் கூறினார்.

மின்ஸ்க் உடன்படிக்கை பற்றி பேசியபோது, பேச்சுவார்த்தை மூலம் ஏற்படக்கூடிய அமைதியான தீர்வுக்கு அந்த ஒப்பந்தம் அடிப்படையாக அமைகிறது என்றார்.

கூடுதலாக, “இந்த விவகாரம் ராணுவ நடவடிக்கை வரை செல்ல அனுமதிக்கக்கூடாது என்றும் பதற்றத்தை குறைக்க ஆக்கபூர்வ ராஜீய முயற்சிகள் தேவை என்றும் திருமூர்த்தி வலியுறுத்தினார்.

யுக்ரேனில் வசிக்கும் மற்றும் படிக்கும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய குடிமக்களைக் குறிப்பிட்ட அவர், அவர்களின் நல்வாழ்வுக்கே இந்தியா முன்னுரிமை தரும் என்றும் தெரிவித்தார்.

அதே சமயம் இந்தியா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியபோது புதினின் முடிவு குறித்து எங்கும் கண்டிக்கவில்லை.

க்ரைமியா மீதான இந்தியாவின் நிலைப்பாடு

2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரஷ்யா க்ரைமியாவை தன்னுடன் இணைத்துக்கொண்ட காலகட்டத்தில் ​​அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அரசில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த சிவசங்கர் மேனன், “க்ரைமியா மீது ரஷ்யாவுக்கு முற்றிலும் நியாயமான அக்கறை உள்ளது,” என்று கூறியிருந்தார்.

அதாவது ரஷ்யா க்ரைமியாவை இணைத்துக்கொண்டதை இந்தியா எதிர்க்கவில்லை.

அப்போது ​​இந்தியா அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்த ரஷ்ய அதிபர் புதின், “க்ரைமியாவில் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். க்ரைமியாவில் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு முக்கிய ஆதரவு அளித்த சீனாவுக்கு நான் நன்றி கூறுகிறேன். இந்தியாவின் நிதானம் மற்றும் பக்கச்சார்பற்ற தன்மையை நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம்,”என்று கூறினார்.

அப்போது இந்தியா – சீனா எல்லையில் பதற்றம் இருக்கவில்லை.

2020ஆம் ஆண்டு ஏப்ரலில் கிழக்கு லடாக்கில் மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டின் ‘நிலைமையை’ சீனா மாற்ற முற்பட்டது.

அந்த நடவடிக்கையின்போது இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அங்குள்ள எல்லையில் இப்போதும் பதற்றம் நீடிக்கிறது. கூடவே 2020ஆம் ஆண்டுக்கு முந்தைய நிலை, மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இன்னும் மீட்டெடுக்கப்படவில்லை.

எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பைப் பார்க்கும்போது ​​இந்தியாவுக்கு ரஷ்யா மட்டுமல்ல, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஆதரவும் தேவை.

யுக்ரேன் தொடர்பாக ரஷ்யாவும் மேற்கத்திய நாடுகளும் மோதல் போக்கில் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில் இந்தியா யாருடைய பக்கமும் எடுக்க முடியாது. பார்வையாளராகவும் இருக்க முடியாது. இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல் குறித்து இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா பேசி வருகிறது. ஆனால் ரஷ்யா நடுநிலையை கடைப்பிடித்தது.

இந்தியாவின் மௌனம்

தி வில்சன் மையத்தின் தெற்காசிய அசோசியேட்டும், ஆசிய திட்டத்தின் துணை இயக்குனருமான மைக்கேல் காகல்மேன் இது குறித்து ட்வீட் செய்துள்ளார்.

அதில், “ரஷ்யா மீதான இந்தியாவின் நிலைப்பாடு ஆச்சரியத்தை அளிக்கவில்லை. இன்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டமும் நடைபெற்றது. 2014ல் க்ரைமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டபோது, ​​இந்தியா மிகக் குறைவாகவே பேசியது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்மொழிவு வந்தபோது, ​​இந்தியா வாக்களிக்காமல் விலகி இருந்தது. இன்றும் இந்தியாவின் நிலைப்பாடு அப்படியே உள்ளது. இதை அமெரிக்கா அரைமனதுடன் ஏற்றுக்கொள்கிறது என்பது எனக்குத் தெரியும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மைக்கேல் காகல்மேன் வெளியிட்ட தனது இரண்டாவது ட்வீட்டில், “ஆனால் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு 2014 உடன் ஒப்பிடும்போது தற்போது வலுப்பெற்றுள்ளது. தற்போது டெல்லி மீது அதிக அழுத்தம் உள்ளது. ரஷ்யா யுக்ரேனைத் தாக்கி போர் மூண்டால் அது இந்தியாவுக்கு மிகவும் மோசமான நிலையை உருவாக்கும்.

ஊமை பார்வையாளராக இந்தியாவின் பங்கு எளிதானது அல்ல. ஆனால், யுக்ரேன் தாக்கப்படாவிட்டாலும் இந்தியாவுக்கு அது சிக்கலாகி விடும். ரஷ்யா சிறிய அளாவில் ஒரு ராணுவ நடவடிக்கையை எடுத்தாலும், அதன் மீது தடை விதிக்கப்படும். அதிலிருந்து சீனா பலம் பெறுவதோடு, அமெரிக்காவின் கவனமும் திசை திருப்பும். இந்தச் சூழ்நிலைகள் அனைத்தும் புதுடெல்லியின் நலன் சார்ந்தவை அல்ல,” என்று மைக்கேல் காகல்மேன் குறிப்பிட்டுள்ளார்.

இதே போல, இந்தோ-பசிஃபிக் நிபுணர் டெரெக் ஜே கிராஸ்மேன் தனது ட்வீட்டில், “யுக்ரேன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பைக் கண்டிக்காத இந்தியாவின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. ரஷ்யாவுடனான இருதரப்பு உறவை கெடுக்க இந்தியா விரும்பவில்லை. க்வாட் அமைப்பில், ரஷ்ய ஆக்கிரமிப்பை புறக்கணிக்கும் ஒரே நாடு இந்தியாதான். இது உண்மையில் மிகவும் விசித்திரமான சூழ்நிலையாகும்.”

“ரஷ்யா மற்றும் யுக்ரேன் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. விதிகள் அடிப்படையிலான சர்வதேச அமைப்பு தொடர்பாக சீனாவின் நிலைப்பாடு என்ன என்பது இங்கு தெரியவரும். இதில் அதிகம் எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை.”

” யுக்ரேன் ரஷ்யாவின் உள்விவகாரம் என்று புதின் இன்று தெரிவித்தார். தைவானைப் பற்றி இதுவரை சீனா இப்படித்தான் சொல்லி வருகிறது,”என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா என்ன செய்ய வேண்டும்?

அடல் பிஹாரி வாஜ்பேயி ஆட்சியில் வெளியுறவுத்துறை செயலராகவும், ரஷ்யாவுக்கான இந்திய தூதராகவும் இருந்த கன்வல் சிபல், ரஷ்யா-யுக்ரேன் நெருக்கடியில் இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து பிப்ரவரி 21 அன்று ‘India Narrative’ இதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

அதில், “அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ரஷ்யாவுடன் இந்தியா நல்லுறவைக் கொண்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில் நாம் எந்த சார்பு பக்கமும் எடுக்கக்கூடாது. மிகவும் புத்திசாலித்தனமான வெளியுறவுக் கொள்கை இப்போது தேவை. இந்தியா யாருடன் செல்கிறது என்பதை இரு தரப்பும் கவனித்து வருகிறது. இந்தியா தன்னை ஆதரிக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. ஆனால் இந்தியா சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும். அமெரிக்காவின் நெருக்குதலின் கீழ் வரக்கூடாது என்று ரஷ்யா கருதுகிறது. எந்தவொரு ராணுவ மோதலும் இந்தியாவுக்கு நல்லதல்ல, ஏனெனில் அது கடுமையான சர்வதேச விளைவுகளை ஏற்படுத்தும்.”என்று கன்வல் சிப்பல் எழுதியுள்ளார்.

“ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் இந்தியாவின் ராணுவ ஒப்பந்தம் பாதிக்கப்படும். மறுபுறம் ரஷ்யாவின் ஹைட்ரோகார்பன் துறையில் முதலீடு செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. ரஷ்யாவிடமிருந்து S-400 ஏவுகணை அமைப்புகளை வாங்கியதற்காக, ‘கவுண்டரிங் அமெரிக்காஸ் அட்வெர்ஸரீஸ் த்ரூ சாங்ஷன் ஆக்ட்’ (CAATSA) வின் கீழ் இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா இன்னும் பொருளாதாரத் தடைகளை விதிக்கவில்லை.

ஆனால் இப்போது அமெரிக்கா அதை பரிசீலிக்கக்கூடும். கச்சா எண்ணெய் விலை உயர்வது மட்டுமின்றி இந்திய பொருளாதாரத்தையும் அது பாதிக்கும். கோவிட் தொற்றுநோயின் மந்த நிலையிலிருந்து நமது பொருளாதாரம் இப்போதுதான் மீண்டு வரத்தொடங்கியுள்ளது,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் நிலைப்பாடு

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், யுக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து விவாதம் நடத்த வேண்டுமா என்பது தொடர்பாக ஜனவரி 31ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெற்றது. ஆனால் இந்தியா அந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

முன்னதாக, இந்த விவகாரத்தை விவாதிக்க ஆதரவாக அமெரிக்கா தலைமையில் 10 நாடுகள் வாக்களித்தன.

இந்தியாவை போலவே கென்யாவும் கேபோனும் வாக்களிக்கவில்லை. ரஷ்யாவும் சீனாவும் விவாதத்திற்கு எதிராக வாக்களித்தன.

இந்த வாக்கெடுப்பு நடைமுறை ரீதியானது மற்றும் வீட்டோவிற்கு (ரத்து அதிகாரம்) எந்த ஏற்பாடும் இல்லை. இதற்கு ஒன்பது வாக்குகள் தேவைப்பட்டன. விவாதத்திற்கு ஒன்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் ஆதரவு கிடைக்கும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருந்தது.

யுக்ரேன் நெருக்கடியை ராஜீய ரீதியாகவும், ஆக்கபூர்வ பேச்சுவார்த்தை மூலம் தீர்க்குமாறும் இந்தியா கேட்டுக் கொள்வது இது இரண்டாவது முறையாகும்.

யுக்ரேன் நெருக்கடியில் தான் எந்த தரப்பிற்கும் ஆதரவாக இல்லை என்பதைக்காட்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா முயன்றது. இந்தியா வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்றாலும், அதன் நிலைப்பாடு ரஷ்யாவுக்கு ஆதரவாகவே உள்ளது என்பதே கள யதார்த்தம்.

நன்றி – பிபிசி தமிழ்