“நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசே முழுப்பொறுப்பு. கடந்த ஆட்சி மீது குற்றம் சுமத்திவிட்டு எவரும் நழுவமுடியாது.”
– இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“நாடு இன்று கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. சில பிரச்சினைகள்தான் வெளியில் தெரிகின்றன. தெரியாத பல பிரச்சினைகளும் உள்ளன.
எமக்குக் கடன் கொடுப்பதற்கு எவரும் முன்வருவதில்லை. தனித்து விடப்பட்டுள்ளோம். நெருக்கடி நிலைமையைப் பயன்படுத்தி, நிபந்தனைகள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலைமையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அரச செலவீனங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.
தேசிய அரசு அமைப்பதால் நாட்டின் நெருக்கடி நிலைமையைச் சரிசெய்ய முடியாது. எனவே, தேசிய அரசு அமைப்பதற்கு நாம் உடன்படமாட்டோம். அவ்வாறு அமையும் அரசியல் அமைச்சுப் பதவிகளை வகிக்கவும் மாட்டோம்” – என்றார்.