அரசாங்கம் தோற்றுவிட்டது, எதிர்க்கட்சிகளும் தோற்றுவிட்டன, நாடே தோற்றுவிட்டது? நிலாந்தன்

0
346
Article Top Ad

தற்பொழுது தென்னிலங்கையில் நடந்துகொண்டிருக்கும் மக்கள் எழுச்சிகள் இலங்கைத்தீவின் நவீன அரசியல் வரலாற்றில் முன்னெப்பொழுதும் ஏற்படாதவை. இதற்கு முன்பு இலங்கைத்தீவு, நாடு தழுவிய வேலை நிறுத்தங்களை கண்டிருக்கிறது. தமிழ் மக்களின் சத்தியாகிரக போராட்டத்தை கண்டிருக்கிறது. தொழிற்சங்க போராட்டங்களை கண்டிருக்கிறது. ஜேவிபியின் இரண்டு ஆயுதப் போராட்டங்களை கண்டிருக்கிறது. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை கண்டிருக்கிறது.

தவிர கடந்த 12 ஆண்டுகளாக தமிழ் மக்கள் ஆங்காங்கே தெட்டந் தெட்டமாக நடத்தும் கவனயீர்ப்பு போராட்டங்கள், ஒருநாள் எழுத தமிழ்கள், சில நாள் P2P போன்றவற்றை கண்டிருக்கிறது. ஆனால் தென்னிலங்கையில் இப்பொழுது நடப்பதுபோல மக்கள் தன்னியல்பாகவும் பரவலாகவும் தொடர்ச்சியாகவும் அரசாங்கத்துக்கு எதிராக வீதிகளில் இறங்குவது என்பது ஒரு புதிய தோற்றப்பாடு.

இம்மக்கள் எழுச்சிகளில் ஒருபகுதி எதிர்க்கட்சிகளால் ஒழுங்கு படுத்தப்படுகின்றன. மற்றொரு பகுதி தன்னியல்பானது. மக்கள் தாமாக முன்வந்து போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள். கட்சிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் இந்த மக்கள் எழுச்சிகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டன.அவற்றுக்கு தலைமைத்துவம் உண்டு,வழிகாட்டல் உண்டு. ஒரு அரசியல் வழி வரைபடம் உண்டு. ஆனால் தன்னியல்பான போராட்டங்கள் அப்படியல்ல.அவற்றுக்கு தலைமைத்துவம் இல்லை.பொது சனங்களின் கோபம்தான் அந்த போராட்டங்களுக்கான உணர்ச்சிகரமான அடிப்படை. அப் போராட்டங்களில் கட்சிகளின் சின்னங்கள் இல்லை,கட்சிகளின் கோரிக்கைகளும் இல்லை. ஆனால் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் பொதுவாக சிங்கக்கொடிகளோடு காணப்படுகிறார்கள்.இவர்களுக்கு தலைமைதாங்கி ஒன்று திரட்டும் மக்கள் இயக்கம் அரங்கில் இல்லை.அரங்கில் உள்ள கட்சிகளும் ஒற்றுமையாக இந்த மக்கள் எழுச்சி களுக்கு தலைமை தாங்கும் நிலை இல்லை.

இலங்கைத்தீவின் நவீன அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சிகளுக்கு இது போல ஒரு பொன்னான தருணம் கிடைக்கவில்லை. இந்த மக்கள் எழுச்சிக்கு தலைமை தாங்கி அவற்றை அவற்றின் உச்சம் வரை கொண்டு போக எதிர்க்கட்சிகள் தயாரா?

கடந்த சில வார நிகழ்வுகளை உற்றுப்பார்த்தால், குறிப்பாக நாடாளுமன்றத்தில் நடக்கும் விவாதங்களை உற்றுப் பார்த்தால் எதிர்க்கட்சிகளுக்கு அவ்வாறு மக்கள் எழுச்சிகளை ஒருங்கிணைத்து புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தும் திறன் இல்லை என்றே தெரிகிறது.

இதுபோன்ற மக்கள் எழுச்சிகளை சரியாக வழி நடத்தினால் அவை புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தும். அவ்வாறு வழி நடத்தாவிட்டால் அவை திசை திருப்பப்படும்.அல்லது காலகதியில் சோர்ந்து போய்விடும்.

வழிநடத்தப்படாத மக்கள் எழுச்சிகள் திசை திருப்பப்படுமாக இருந்தால் அவை விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும். அவை வன்முறையில் போய் முடியும். அது அரசாங்கத்துக்கு படைத்தரப்பை ஏவிவிடுவதற்குரிய வாய்ப்புக்களை வழங்கக் கூடும்.அரசாங்கம் ஆர்ப்பாட்டங்களை கையாள்வதற்கு படைத்தரப்பை அனுப்பத் தயாரில்லை.சரத் பொன்சேகா கூறியதுபோல எட்டாம் வகுப்பு வரை படித்த சிப்பாய்களை அங்கே அனுப்பக்கூடாது என்று தீர்மானித்து அரசாங்கம் அதை செய்யவில்லை.சரத் பொன்சேகா கூறுவதற்கு முன்பே அரசாங்கம் அந்த முடிவை எடுத்து விட்டது.

ஏற்கெனவே இன முரண்பாட்டில் போர்க் குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருக்கும் படைத்தரப்பை ஒப்பீட்டளவில் அதிகம் பாதுகாத்தது இந்த அரசாங்கம்தான். போர்க் குற்றச்சாட்டுக்களில் இருந்து ஒருவர் மற்றவரை பாதுகாக்க வேண்டிய தேவை பரஸ்பரம் படைத்தரப்புக்கும் அரசாங்கத்துக்கும் உண்டு. கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாக அரசாங்கம் அதைச் செய்து வருகிறது. அப்படிப்பட்ட ஒரு அரசாங்கம் படைத்தரப்பை அதன் சொந்த மக்களோடு மோத விடத் தயங்குகிறது.அதன் மூலம் படைத்தரப்பின் பெயர் மேலும் கெடுவதை அரசாங்கம் விரும்பவில்லை.

தவிர இதுபோன்ற தன்னியல்பான எழுச்சிகளின்போது படைத் தரப்பை முன்னிறுத்துவது எதிர்மறையான விளைவுகளையே தரும்.ஏற்கனவே கொழும்பில் அவ்வாறு ஆர்ப்பாட்டக்காரர்களை மிரட்ட முற்பட்ட ராணுவத்தின் பீல்ட் பைக் அணியைச் சேர்ந்த ஒரு சிப்பாய் போலீசாரால் தாக்கப்பட்டது விவகாரம் ஆக மாறியிருக்கிறது.

அதேசமயம் வழிநடத்தப்படாத எழுச்சிகளை அடக்க முற்படாமல் அவற்றை அவற்றின் போக்கிலேயே விட்டால், அவை ஒரு கட்டத்தில் தேங்கி நின்றுவிடும் அல்லது சோர்ந்து போய்விடும்.இதற்கு உலகளாவிய அனுபவங்கள் உண்டு.எனவே தன்னியல்பான மக்கள் எழுச்சிகளை எதிர்க்காமல் அவற்றின் போக்கிலேயே விடுவதன்மூலம் ஒரு கட்டத்தில் அவை தாமாக நீர்த்துப் போய்விடும்,சோர்ந்து போய்விடும் என்று அரசாங்கம் நம்பக் கூடும்.

இக்காரணங்களினால்தான் அரசாங்கம் ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு படைத்தரப்பை அனுமதிக்கவில்லை.அனுமதிக்கப்பட்ட பொலிசாரும் பல சமயங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக காணப்படுகிறார்கள்.

ஹோமகமவில் ஊரடங்கு வேளையிலும் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ய பொலிசார் அனுமதித்தார்கள். அதனால் ஹோமாகம பொலிஸுக்கு ‘ஜெயவேவா’ என்று மக்கள் கோஷமெழுப்பியுள்ளார்கள். குருநாகலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் தமது பக்க நியாயங்களை விளக்கிக் கூறிய பொழுது ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் கண்ணீர் விடுகிறார். கொழும்பில் பீல்ட் பைக் சிப்பாயை தாக்கியது ஒரு போலீஸ் அதிகாரி தான்.

எனவே இதுபோன்ற தன்னியல்பான எழுச்சிகளை படைத்தரப்பு, பொலீஸ் போன்றவற்றின்மூலம் அடக்குவதில் உள்ள வரையறைகளை அரசாங்கம் உணர்ந்து இருக்கிறது.மாறாக அவற்றை அடக்காமல் அவற்றின் போக்கிலேயே விடுவதன் மூலம் ஒரு கட்டத்தில் அவை தாமாக வேகம் தணிந்து சோர்ந்து போகக்கூடிய வாய்ப்புக்களையும் கவனத்தில் எடுத்து அரசாங்கம் ஆர்ப்பாட்டக்காரர்களை அதிகம் அடக்க முற்படவில்லை.

இவ்வாறு அரசாங்கம் அடக்க தயங்கும் மக்கள் எழுச்சிக்குத் தலைமை தாங்கி மக்களின் கோபத்தை ஒரு அரசியல் ஆக்க சக்தியாக மாற்ற எதிர்க்கட்சிகளும் தயாரில்லை.எதிர்க்கட்சிகள் மேற்படி மக்கள் எழுச்சிகளை ஒருங்கிணைக்க முடியாதவைகளாகக் காணப்படுகின்றன. ஒருபுறம் எதிர்க்கட்சிகள் தாங்களாக கூட்டங்களையும் எழுச்சிகளையும் ஒழுங்குபடுத்தி வருகின்றன.ஆனால் தன்னியல்பான மக்கள் எழுச்சிகள் பொறுத்து எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒரு பொதுவான வழி வரைபடம் இருப்பதாக தெரியவில்லை.

எதிர்க்கட்சிகளால் புரட்சிகரமான ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பதனை அரசாங்கம் நன்கு விளங்கி வைத்திருக்கிறது.மக்கள் எழுச்சிகளுக்கு தலைமை தாங்கத் தவறியது மட்டுமில்லை நாடாளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு எதிரான உறுப்பினர்களை திரட்டி ஒரு பெரும்பான்மையைக் காட்டுவதிலும் எதிர்க்கட்சிகள் இன்று வரையிலும் முன்னேறவில்லை. அரசாங்கம் அதை ஒரு சவாலாகவே எதிர்க்கட்சிகளின் நோக்கி முன்வைக்கின்றது. ஆனால் அரசாங்கம் கேட்கும் பெரும்பான்மையை காட்ட எதிர்க்கட்சிகளால் முடியாமல் இருக்கிறது அதற்கு பின்வரும் காரணங்கள் உண்டு.

முதலாவது காரணம் எதிர்க் கட்சிகள் மத்தியில் எல்லாரையும் ஒன்றிணைக்கவல்ல, மூன்று இன ங்களின் வாக்குகளையும் கவரவல்ல ஜனவசியம் மிக்க தலைவர்கள் குறைவாகக் காணப்படுவது.

இரண்டாவது காரணம் எதிர்க்கட்சிகள் ஆட்சிப் பொறுப்பை ஏற்கத் தயாரில்லை.அவ்வாறு ஆட்சிப்பொறுப்பை ஏற்பதன்மூலம் தோல்வியின் பங்காளிகளாக மாறத் தயாரில்லை.இப்பொழுது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகளை யார் வந்தாலும் எடுத்த எடுப்பில் தீர்க்க முடியாது என்பது எதிர்க்கட்சிகளுக்கும் நன்கு தெரிகிறது. எனவே ஏற்கனவே தோற்றுவிட்ட அரசாங்கத்தை மேலும் மோசமாக தோல்வியுற வைப்பதன் மூலம் தமக்கு சாதகமான ஒரு நிலைமையை கனிய வைக்கலாம் என்று எதிர்கட்சிகள் கார்த்திருக்கின்றனவா?ஆனால் அரசாங்கம் எவ்வளவுதான் தோல்வியுற்றாலும் யாப்புக்குள் நின்று ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாமா?

மூன்றாவது காரணம் யாப்பு. இப்போதிருக்கும் நெருக்கடிகள் யாவும் ஒருவிதத்தில் யாப்பு நெருக்கடிகள்தான். யாப்புக்குள் நின்று இப்போதிருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெறுவது கடினம்.நாடாளுமன்றத்தை உரிய காலம் வரும்வரை கலைக்க முடியாது.நாடாளுமன்றத்தைக் கலைக்கும்வரை நெருக்கடிகளை பொறுத்துக்கொள்ள முடியாது. ஜனாதிபதி ஒன்றில் தானாக முன்வந்து பதவி விலக வேண்டும்.அல்லது அவரை நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மூலம் தோற்கடிக்க வேண்டும்.எதிர்க்கட்சிகளிடம் அதற்கு வேண்டிய பலம் உண்டா? இல்லையென்றால் இந்த ஜனாதிபதியின் கீழ்தான் ஒரு இடைக்கால ஏற்பாட்டுக்கு போக வேண்டியிருக்கும். அப்படி இடைக்கால ஏற்பாட்டுக்கு போனால் அதில் ஜனாதிபதியின் தோல்வியை புதிய இடைக்கால கட்டமைப்பும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். எப்படித்தான் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் இந்த பிரச்சினைக்கு யாப்புக்குள் தீர்வு கிடையாது. யாப்புக்கு வெளியே சிந்திக்க வேண்டும். அதற்கு எதிர்க்கட்சிகள் தயாரில்லை.”நாங்கள் யாப்பு ரீதியிலான ஜனநாயகத்தை அதற்குரிய கட்டமைப்புக்களுக்கூடாக உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது. இந்த ஜனாதிபதி முறைமையின் கீழ் இந்த ஜனாதிபதியின் கீழ் அதற்கான வழி எதுவும் முன்னாள் இல்லை” என்று சஜித் கூறுகிறார்.

மேற்கண்ட மூன்று காரணங்களின் அடிப்படையிலும் தொகுத்துப் பார்த்தால் இப்போதிருக்கும் நெருக்கடியை யாப்புக்குள் நின்று தீர்க்க முடியாது. ஆனால் யாப்புக்கு வெளியே போனால் தீர்வு உண்டு.அவ்வாறு வெளியே போகத் தேவையான துணிச்சலையும் பலத்தையும் மக்கள் எழுச்சிகளை ஒருங்கிணைப்பதன்மூலம் பெறலாம்.ஆனால் அதற்கு எதிர்க்கட்சிகள் தயாரில்லை.இதுதான் பிரச்சினை.

ஏற்கனவே தோல்வியுற்ற ஓர் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப யாப்பு தடையாக இருக்கிறது. அந்தத் தடையை உடைத்துக்கொண்டு முன் செல்ல தேவையான பலத்தை மக்கள் எழுச்சிகள் வழங்குகின்றன.ஆனால் எதிர்க் கட்சிகளும் இந்த பொன்னான சந்தர்ப்பத்தை பயன்படுத்த தயாராக இல்லை. இப்படிப்பார்த்தால்,இலங்கைதீவில் அரசாங்கம் தோற்றுவிட்டது. எதிர்க்கட்சிகளும் தோற்றுவிட்டன. மொத்தத்தில் இலங்கைதீவே தோற்றுவிட்டது. இதில் 2009இல் ராஜபக்சக்கள் சிங்கள மக்களுக்குப் பெற்றுக் கொடுத்த வெற்றி எங்கே?

நன்றி – Athavan News