ஜோ பிடன் – நரேந்திர மோடி இன்று பேச்சுவார்த்தை

0
255
Article Top Ad

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனுடன் பிரதமர் மோடி இன்று காணொளிக் காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்தியா – அமெரிக்கா இடையே ‘2 பிளஸ் 2’ பேச்சுவார்த்தை இன்று திங்கட்கிழமை அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் இடம்பெறுகின்றது.

மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மற்றும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆகிய இருவரும் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன், ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

இந்த நிலையில் இருநாடுகளிடையிலான ‘2 பிளஸ் 2’ பேச்சுவார்த்தைக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், பிரதமர் மோடியும் இன்று காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

இந்த பேச்சுவார்த்தை குறித்து வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சாகி கூறியதாவது:-

நமது அரசாங்கங்கள், பொருளாதாரங்கள் மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதற்காக, ஜனாதிபதி ஜோ பைடன், நாளை(அதாவது இன்று) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை காணொலி காட்சி வழியாக சந்திக்கிறார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது, கொரோனா தொற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைப்பது, காலநிலை நெருக்கடியை எதிர்கொள்வது, உலகப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் செழுமை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஒத்துழைப்பது குறித்து இருதலைவர்களும் விவாதிப்பார்கள்.

மேலும் உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் மிருகத்தனமான போரின் விளைவுகள் மற்றும் உலகளாவிய உணவு வழங்கல் மற்றும் பொருட்களின் சந்தைகளில் அதன் சீர்குலைக்கும் தாக்கத்தை தணிப்பது பற்றிய அமெரிக்காவின் நெருக்கமான ஆலோசனைகளை பைடன் வழங்குவார் என்று ஜென் சாகி கூறினார்.

கடந்த மாதம் நடந்த குவாட் தலைவர்கள் மாநாட்டின்போது பிரதமர் மோடியும், ஜனாதிபதி ஜோ பைடனும் சந்தித்து பேசியது என்பது குறிப்பிடத்தக்கது.