புதிய அமைச்சரவை நியமனம் இன்று

0
212
Article Top Ad

புதிய அமைச்சரவை இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் நியமிக்கப்படவுள்ளதாகவும் அதனடிப்படையில் 18 அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, புதிய அமைச்சரவையில் பல புதிய முகங்கள் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இராஜாங்க அமைச்சர்களின் தற்போதைய பதவிகள் அப்படியே இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சரத் ​​வீரசேகர, ஜோன்ஸ்டன், டலஸ், பந்துல, காமினி லொக்குகே, மஹிந்தானந்த, ரோஹித, ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்க மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த முக்கிய நபர்கள் இல்லாத நிலையில், பொதுமக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, அறிமுகமில்லாத சில முகங்கள் அமைச்சர் பதவிகளைப் பெறவுள்ளனர்.

நேற்றைய தினம் முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும, முன்னாள் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவும் அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ளப்போவதில்லை என அறிவித்துள்ளனர்.

இராஜாங்க அமைச்சர்களின் தற்போதைய பதவிகள் அப்படியே இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ள அதேவேளை ஜீவன் தொண்டமான் எந்தவொரு அமைச்சரவைப் பதவிகளையும் பொறுப்பேற்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை ஏற்கனவே இராஜினாமா செய்துள்ள நிலையில், 15க்கும் குறையாத இளம், படித்த, திறமையான அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவையை நியமிக்குமாறும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாகக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நேற்று நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் குழுவும் குறித்த யோசனையை ஏற்றுக்கொண்ட அதேவேளை அரசாங்கத்தின் திட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் உறுதியளித்துள்ளனர்.

இந்நிலையில் 18 பேர் கொண்ட புதிய அமைச்சரவை இன்று காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.