20 ஐ ஆதரித்த 9 தமிழ் எம்.பிக்கள் என்ன செய்ய போகின்றனர்?
நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களை மட்டுப்படுத்தும் நோக்கில் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்டமூலத்தை முன்வைப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார்.
இந்த தகவலை பிரதமரின் ஊடகப்பிரிவு நேற்று உறுதிப்படுத்தியது.
” நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கச் சபை மற்றும் நீதித்துறையின் சாத்தியமான கருத்துக்களை உள்ளடக்கிய வகையில் அரசியலமைப்பை திருத்துவதற்கான முன்மொழிவொன்றை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு பிரதமர் எதிர்பார்த்துள்ளார்.” – என பிரதமரின் ஊடகப்பிரிவு விடுத்திருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தற்போது அமுலில் உள்ள 20 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கிவிட்டு அல்லது பரந்தளவில் மறுசீரமைப்பு செய்துவிட்டு, 19 இல் இருந்தவாறு ஜனாதிபதிக்கான அதிகாரங்களை வழங்குவதற்கு பிரதமரால் 21 ஆவது சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்திலும் 20 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கிவிட்டு, மீண்டும் ’19’ என்ற நிலைக்கு செல்வதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன.
’20’ ஐ முழுமையாக நீக்கிவிட்டு, 19 ஐ அமுல்படுத்தும் திட்டமே அவசியம் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அதற்கேற்ற வகையிலேயே 21ஆவது திருத்தச்சட்டமூலம் வர வேண்டும். மாறாக தமது அரசியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் விதத்தில் மேற்படி திருத்தம் அமையக்கூடாது எனவும் அறிவித்துள்ளது.
இலங்கையில் 1978 ஆம் ஆண்டிலேயே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உருவாக்கப்பட்டது. தனிநபர் வசம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டன. நாடாளுமன்ற ஜனநாயகம் கேள்விக்குறியாக்கப்பட்டது. நாடாளுமன்றத்தை ஒரு வருடத்தில் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தது.
இந்நிலையில் 18 ஆவது திருத்தச்சட்டமூலம் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான பலத்தை மஹிந்த ராஜபக்ச மேலும் அதிகரித்துக்கொண்டார்.
நன்றி – ஆர்.சனத்