அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்டமூலத்தை முன்வைப்பதற்கு பிரதமர் திட்டம்?

0
224
Article Top Ad
✍️’19’ இற்கு புத்துயிர் கொடுக்க வருகிறது ’21’
✍️ பஸிலின் எம்.பி. பதவியும் பறிபோகும் நிலை
✍️ 19+ வேண்டும் என்கிறது எதிரணி
✍️

20 ஐ ஆதரித்த 9 தமிழ் எம்.பிக்கள் என்ன செய்ய போகின்றனர்?

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களை மட்டுப்படுத்தும் நோக்கில் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்டமூலத்தை முன்வைப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார்.

இந்த தகவலை பிரதமரின் ஊடகப்பிரிவு நேற்று உறுதிப்படுத்தியது.

” நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கச் சபை மற்றும் நீதித்துறையின் சாத்தியமான கருத்துக்களை உள்ளடக்கிய வகையில் அரசியலமைப்பை திருத்துவதற்கான முன்மொழிவொன்றை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு பிரதமர் எதிர்பார்த்துள்ளார்.” – என பிரதமரின் ஊடகப்பிரிவு விடுத்திருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தற்போது அமுலில் உள்ள 20 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கிவிட்டு அல்லது பரந்தளவில் மறுசீரமைப்பு செய்துவிட்டு, 19 இல் இருந்தவாறு ஜனாதிபதிக்கான அதிகாரங்களை வழங்குவதற்கு பிரதமரால் 21 ஆவது சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்திலும் 20 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கிவிட்டு, மீண்டும் ’19’ என்ற நிலைக்கு செல்வதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன.

’20’ ஐ முழுமையாக நீக்கிவிட்டு, 19 ஐ அமுல்படுத்தும் திட்டமே அவசியம் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

அதற்கேற்ற வகையிலேயே 21ஆவது திருத்தச்சட்டமூலம் வர வேண்டும். மாறாக தமது அரசியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் விதத்தில் மேற்படி திருத்தம் அமையக்கூடாது எனவும் அறிவித்துள்ளது.

இலங்கையில் 1978 ஆம் ஆண்டிலேயே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உருவாக்கப்பட்டது. தனிநபர் வசம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டன. நாடாளுமன்ற ஜனநாயகம் கேள்விக்குறியாக்கப்பட்டது. நாடாளுமன்றத்தை ஒரு வருடத்தில் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தது.

இந்நிலையில் 18 ஆவது திருத்தச்சட்டமூலம் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான பலத்தை மஹிந்த ராஜபக்ச மேலும் அதிகரித்துக்கொண்டார்.

✍️ ஜனாதிபதியொருவர் 2 தடவையே அப்பதவியை வகிக்கலாம் என்ற வரையறை மாற்றியமைக்கப்பட்டது. அந்தவகையிலேயே 2015 ஜனாதிபதித் தேர்தலில் அவர் மூன்றாவது தடவையும் போட்டியிட்டார்.
✍️ 2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்கும், சட்டவாக்க சபையான நாடாளுமன்றத்துக்கு அதிகாரங்களை பகிரும் வகையிலும் 19 ஆவது திருத்தச்சட்டம் முன்வைக்கப்பட்டது. உயர்நீதிமன்ற திருத்தங்களையும் உள்வாங்கி, சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாத வகையில் அச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
✍️ சரத் வீரசேகரவைத் தவிர, ஏனைய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் 19 இற்கு சார்பாக வாக்களித்தனர்.
✍️ நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று, நான்கரை வருடங்களுக்கு பிறகே ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும். இதன்மூலம் ஒரு வருடத்தில் கலைக்க முடியும் என்ற ஏற்பாடு 19 ஊடாக நீக்கப்பட்டது.
✍️ 2018 இல் அரங்கேறிய 52 நாட்கள் ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சியின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்கூட்டியே நாடாளுமன்றத்தை கலைத்தபோது, அது சட்டவிரோதம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
✍️ 19 இன் பிரகாரம் ஜனாதிபதியால் தன்னிச்சையான முறையில் உயர்பதவிகளுக்கான நியமனங்களை வழங்கமுடியாது. அரசியலமைப்பு பேரவையின் அனுமதி அவசியம். பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகர் ஆகியோர் இப்பேரவைக்கு பதவிவழி உறுப்பினர்கள். சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மூவரும் உள்வாங்கப்பட்டனர்.
✍️ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வயதெல்லை 30 இல் இருந்து 35 ஆக்கப்பட்டது.
✍️ அமைச்சரவை எண்ணிக்கை வரையறுக்கப்பட்டது. 30 அமைச்சர்களையும், 40 இராஜாங்க அமைச்சர்களையும் மட்டுமே நியமிக்க கூடியதாக இருந்தது. தேசிய அரசு அமையும் பட்சத்தில் அமைச்சரவை எண்ணிக்கையை 45 வைர அதிகரித்துக்கொள்ள முடியும்.
✍️ பிரதமருடன் கலந்துரையாடிவிட்டே அமைச்சரவை தொடர்பான நியமனங்களை ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டும்.
✍️ இரட்டை குடியுரிமை உடையவர்கள் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்பட்டது.
( இதன்படி இரட்டை குடியுரிமை கொண்டிருந்த கீதா குமாரசிங்கவுக்கு எம்.பி. பதவியை இழக்க வேண்டி ஏற்பட்டது. இரட்டை குடியுரிமையை துறந்த பின்பே அவர் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.)
✍️ சுயாதீன ஆணைக்குழுக்கள் உட்பட பல ஜனநாயக அம்சங்கள் 19 இல் இருந்தன. நிறைவேற்று, சட்டவாக்கம் ஆகியவற்றுக்கிடையில் அதிகாரப்பகிர்வு இருந்தது. ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு பொறுப்புக்கூடற வேண்டியவராக இருந்தார். சட்டரீதியில் ஜனாதிபதியின் செயற்பாடுகளை சவாலுக்குட்படுத்தும் ஏற்பாடுகளும் இருந்தன.
✍️ 2019 ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்ற பிறகு. 19 ஐ நீக்கிவிட்டு 20 ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
✍️ நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் அச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.
✍️ நாடாளுமன்றத்தில் உள்ள 28 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 19 பேர் ’20’ இற்கு எதிராக வாக்களித்தனர். காங்கிரஸ் உறுப்பினர்கள், அரவிந்தகுமார் உட்பட 9 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.
✍️ 19 இல் இருந்த சில ஏற்பாடுகள் 20 இலும் தக்கவைக்கப்பட்டன. ஒரு சிலவற்றைதவிர ஏனையவை மாற்றப்பட்டன.
அந்தவகையில் –
✍️ நான்கரை வருடங்களுக்கு பிறகு, நாடாளுமன்றத்தைக் கலைக்கலாம் என்பது ஒரு வருடம் ஆக்கப்பட்டது. எதிர்ப்புகள் வலுத்தால் அது இரண்டரை வருடமாக்கப்பட்டது. நாடாளுமன்றம் விரும்பினால், தீர்மானமொன்றை நிறைவேற்றி, உடனடி தேர்தலுக்கு செல்லலாம்.
✍️ அரசியலமைப்பு பேரவை நீக்கப்பட்டு, நாடாளுமன்ற பேரவை உருவாக்கப்பட்டது. உயர்பதவிகளுக்கான நியமனங்களை ஜனாதிபதி வழங்கலாம்.
✍️ அமைச்சர்களை தனக்கு ஏற்ற வகையில் நியமிக்கலாம். எனினும், அமைச்சரவை வரையறை 19 இன் பிரகாரமே காக்கப்பட்டது.
✍️ ஜனாதிபதி அமைச்சு பதவிகளை வகிக்க முடியாது என்ற நிலை மாற்றப்பட்டது. நாடாளுமன்றத்துக்கு பொறுப்புக்கூறும் தன்மையும் அகற்றப்பட்டது.
✍️ ஜனாதிபதியொருவர் இரு தடவைகள்தான் அந்த பதவியை வகிக்கலாம் என்ற வரையறையும் தக்கவைத்துக்கொள்ளப்பட்டது.
✍️ இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்றம் செல்ல முடியாது என்ற ஏற்பாடு நீக்கப்பட்டது. இதன் அடிப்படையில்தான் இரட்டை குடியுரிமை கொண்ட பஸில் ராஜபக்ச தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வந்தார்.
✍️ எனவே, 20 ஆவது திருத்தச்சட்டம் திருத்தப்பட்டு, பழைய ஏற்பாடுகளின் பிரகாரமே 19 மீண்டும் அமுலுக்கு வந்தால் பஸில் ராஜபக்சவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழக்க நேரிடும்.
✍️ ’20’ இல் எவ்வாறான திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. திருத்தம் மேற்கொள்ளப்படும் என்பது பற்றி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.
✍️ பிரதமர் அமைச்சரவையில் சட்டமூலத்தை முன்வைத்த பிறகு, உரிய சட்ட நடவடிக்கைகளின் பின்னர் அமைச்சரவை அனுமதி வழங்கும். அதன்பின்னர் அது வர்த்தமானியில் வெளியிடப்படும்.
அதன்பின்னர் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும். இது தொடர்பில் உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்ததும், நாடாளுமன்றத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இடம்பெறும்.

நன்றி – ஆர்.சனத்