வெளிவிவகார செயலாளராக அருணி விஜேவர்தன கடமைகளை பொறுப்பேற்றார்

0
126
Article Top Ad

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் புதிய செயலாளரான அருணி விஜேவர்தன இன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

அவர் 2022 மே 20 முதல் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

கடமைகளைப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து நடைபெற்ற எளிமையான வைபவத்தின் பின்னர், வெளிவிவகார செயலாளர் விஜேவர்தன அமைச்சின் பணி அதிகாரிகளிடம் உரையாற்றினார்.

இலங்கை வெளிநாட்டு சேவையின் உறுப்பினரான, வெளிவிவகார செயலாளர் விஜேவர்தன, 34 வருடங்களாக வெளிநாட்டு சேவையில் ஈடுபட்டுள்ளதோடு, கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிலும், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களிலும், சர்வதேச நிறுவனங்களிலும் பல பதவிகளை வகித்துள்ளார். தனது வெளிநாட்டுப் பணிகளில், ஜெனிவாவில் உள்ள ஐ.நா. வுக்கான இலங்கையின் நிரந்தரத் தூதரகம், மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், பிலிப்பைன்ஸில் உள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். ஒஸ்ட்ரியாவுக்கான இலங்கைத் தூதுவராகவும், வியன்னாவில் உள்ள ஐ.நா. அமைப்புக்களுக்கான நிரந்தரப் பிரதிநிதியாகவும் அவர் மேலும் பணியாற்றியுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அங்கீகாரத்தின் பேரில், வியன்னாவில் உள்ள சர்வதேச அணுசக்தி முகவரமைப்பின் கொள்கை உருவாக்கும் உறுப்புக்களின் செயலகத்தின் பணிப்பாளராகவும் திருமதி. அருணி விஜேவர்தன பணியாற்றியுள்ளார்.

ஐக்கிய இராச்சியத்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் முதுமாணிப் பட்டம் பெற்றுள்ள திருமதி. விஜேவர்தன, அங்கு பிரிட்டிஷ் செவனிங் அறிஞராகத் திகழ்ந்ததுடன், கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், மேற்கு அவுஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

அவர் திருமணமானவர் என்பதோடு, அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு