இலங்கையின் சுற்றுலாத்துறை கடும் வீழ்ச்சிப் போக்கில் ; வெறிச்சோடிய விமானநிலையம்!

0
155
Article Top Ad

இலங்கைக்குவரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டுநாயக்க விமான நிலையம் வெறிசோடி காணப்படுகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் மார்ச் மாதத்தைவிட சுமார் 43.3 வீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா அமைச்சின் தகவலுக்கு அமைவாக மார்ச் மாதம் 106,500 சுற்றுலா பயணிகள் வருகைதந்துள்ள போதிலும் ஏப்ரல் மாதம் 60,359 சுற்றுலா பயணிகளே வருகை தந்துள்ளனர்.

ஜனவரி மாதம் 82,327 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன், பெப்ரவரியில் 96,507 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

மார்ச் மாதத்தில் சுமார் 100,000 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியதைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதத்தில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது.

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளதுடன், இலங்கையிலுருந்து தொழில்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை 287 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது.

இதேவேளை எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு போன்றவை சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவதற்கு காரணமாக அமைந்துள்ளது. எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சுற்றுலா சேவைகளை வழங்கும் பல ஹோட்டல்கள் நெருக்கடியில் உள்ளன. இதனால் சுற்றுலாத்துறையில் தொழில்புரிபவர்களும் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.