நீரிழிவு நோய், இதய நோய், புற்று நோய்க்கான மருந்துகள் தட்டுப்பாடு!

0
111
Article Top Ad

நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் புற்று நோய் என்பவற்றுக்கான மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறதாக அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அஜித் திலகரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நோய்களுக்காக வழங்கப்படும் மருந்துகளின் கையிருப்பு குறைவடைந்து வருகின்ற நிலையில் எதிர்வரும் காலங்களில் வைத்தியசாலை கட்டமைப்பு பாரதூரமான அபாயத்தை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்றும் வைத்தியர் அஜித் திலகரத்ன எச்சரித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சிறுநீரக நோயாளர்களின் செங்குறுதி சிறுதுணிக்கைகளின் அளவை அதிகரிப்பதற்காக உபயோகிக்கும் தடுப்பூசியொன்று உள்ளது. தற்போது அந்த தடுப்பூசியின் இருப்பு குறைவடைந்து வருகிறது. சிறுநீரக நோயிலிருந்து மீள்வதற்கான நிரந்த தீர்வு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையாகும்.

இவ்வாறு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும் போது , புதிய சிறுநீரகத்தைப் பெற்றுக்கொண்ட நபரது உடல் அதனை ஏற்றுக் கொண்டு இசைவாக்கமடையச் செய்வதற்கு வழங்கப்படும் மருந்தொன்று உள்ளது.

தற்போது நாட்டில் அந்த மருந்து கிடையாது. குறித்த மருந்தை வழங்காவிட்டால் வைத்தியரோ அல்லது நோயாளரோ எதிர்பார்க்கும் பலனைப் பெற முடியாது. அதே போன்று புற்று நோய்க்காக பயன்படுத்தப்படும் மருந்திற்கும் பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது. புற்று நோயாளர்களுக்கு மாத்திரைகள் மூலமும் , தடுப்பூசி மூலமும் சிகிச்சையளிக்கப்படும்.

இவற்றை குறிப்பிட்டவொரு காலப்பகுதிக்குள் மீண்டும் மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டும். எனவே இந்த காலப்பகுதியில் புற்று நோய்க்கான சிகிச்சையைப் பெறத் தொடங்கியுள்ள நோயாளர்கள் தமக்கான அடுத்த கட்ட மருந்தினைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.

குறித்த காலப்பகுதியில் அவர்கள் மீண்டும் மருந்தினைப் பெற்றுக் கொள்ளவில்லை எனில் , புற்று நோய் நிலைமை தீவிரமடையும். இது தவிர இதய நோய்க்கான மருந்துகளுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது. நீரிழிவு நோயாளர்களுக்கான நோய் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் மருந்தின் இருப்பும் குறைவடைந்து வருகிறது.

வைத்தியசாலை கட்டமைப்பில் சாதாரண காயங்களுக்கான சிகிச்சையளிக்கும் மருத்துவ உபகரணங்கள் கூட அற்ற நிலைமை ஏற்படக் கூடும். கடந்த 6 மாதங்களாகவே நாம் இந்த நிலைமை தொடர்பில் சுகாதார அமைச்சிற்கும் , ஜனாதிபதிக்கும்,முன்னாள் நிதி அமைச்சருக்கும் , முன்னாள் பிரதமருக்கும் தெரியப்படுத்தியுள்ளோம்.

இவர்கள் எவருமே இதற்கு உரிய நடவடிக்கையை எடுக்காமையின் காரணமாக தற்போது நோயாளர்கள் பாரதூரமான அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். வைத்தியசாலை கட்டமைப்பும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. வைத்தியசாலையின் அன்றாட நடவடிக்கைகளைக் கூட முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலைமை ஏற்படும் என்றார்.