தமிழகத்தில் கொரோனா திடீர் அதிகரிப்பு : முதலமைச்சர் அவசர ஆலோசனை!

0
96
Article Top Ad

இந்தியாவில் கடந்த 2 வாரமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2 நாட்களில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தை எட்டி உள்ளது.

கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனா கடடுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது.

வட மாநிலங்களில் கொரோனா பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்த உஷார் நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதனால் அனைத்து மாநிலங்களும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க தொடங்கி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டார்.

இதனால் சில மாதங்களிலே கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதற்காக விதிக்கப்பட்டு இருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டது. பொது மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்கள்.

இந்த சூழ்நிலையில் வட மாநிலங்களை அச்சுறுத்தி வரும் கொரோனா சில நாட்களாக தமிழ்நாட்டிலும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது.

நேற்று 13 ஆயிரத்து 180 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 219 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

96 நாட்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 200-ஐ தாண்டி உள்ளது. சென்னை, செங்கல்பட்டு உள்பட 13 மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. சென்னையில் ஒரே நாளில் 129 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.

அவர் கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் சூழ்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி மற்றும் வருவாய் துறை உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் படுக்கைகளை தயார்படுத்தி வைக்குமாறும், தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயம் ஆக்குவது மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா? என்பது குறித்தும் அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசித்தார்.

இதனால் தமிழகத்தில் ஒருசில கட்டுப்பாடுகள் வரலாம் என தெரிகிறது. இது தொடர்பான அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.