தென் ஆப்பிரிக்கா – இந்தியா இடையிலான இரண்டாவது போட்டி நாளை!

0
93
Article Top Ad

பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் போட்டித் தொடரில் டெல்லியில் நடந்த முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா-தென் ஆப்ரிக்கா மோதும் 2-வது 20 ஓவர் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நாளை (12-ம் திகதி) நடக்கிறது.

முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு ரிஷப்பண்ட் தலைமையிலான இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் நடந்த போட்டியில் 211 ரன் குவித்ததும் இந்திய அணி தோல்வியை தழுவியது பரிதாபமே. அந்த அளவுக்கு பந்துவீச்சும், பீல்டிங்கும் மிகவும் மோசமாக இருந்தது. தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களின் அதிரடியை இந்திய பவுலர்களால் சமாளிக்க இயலவில்லை.

இந்திய அணி அதில் இருந்து மீண்டு நாளைய ஆட்டத்தில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடி உள்ளது. வீரர்கள் தேர்வில் மாற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. பந்து வீச்சில் மாற்றம் இருக்கலாம்.

முதல் ஆட்டத்தில் பெற்ற வெற்றியால் தென்ஆப்பிரிக்க வீரர்கள் 2-வது போட்டியிலும் நம்பிக்கையுடன் விளையாடுவார்கள். அந்த அணி இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று 2-0 என்ற முன்னிலையை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

டேவிட் மில்லர், வான்டர் டூசன் கடந்த போட்டியில் அதிரடியை வெளிப்படுத்தினார்கள். இது தவிர கேப்டன் பவுமா, குயின்டன் டிகாக், பிரிட்டோரியஸ், ரபடா, நோர்க்கியா போன்ற வீரர்களும் அந்த அணியில் உள்ளனர்.

இரு அணிகளும் நாளை மோதுவது 17-வது போட்டியாகும். இதுவரை நடந்த 16 போட்டியில் இந்தியா 9-ல், தென் ஆப்பிரிக்கா 7-ல் வெற்றி பெற்றுள்ளன.

நாளைய போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.