கடுமையான பொருளாதார நெருக்கடியில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள்!

0
140
Article Top Ad

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் குறைந்த வருமானம் பெறும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெருந்தோட்டப் பகுதியில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைவதாக இங்கு வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

பெருந்தோட்டங்களில் பணிப்புரியும் தொழிலாளர்களுக்கு மாதாந்தம் அதிகபட்சமாக 16முதல் 19ஆயிரத்துக்கு இடைப்பட்ட சம்பளத்தையே பெற முடிவதாக கூறும் இவர்கள், தற்போதைய நெருக்கடிக்கு முகங்கொடுக்க முடியாத சூழ்நிலை எழுந்துள்ளதாகவும் எதிர்காலத்தில் ஒருவேளை அல்லது இரண்டு வேளை உணவை மாத்திரமே உண்ணக் கூடியதாக இருக்குமென கவலை வெளியிடுகின்றனர்.

இலங்கையை பொருத்தமற்றில் மிகவும் வருமானம் குறைந்த தரப்பினராக பெருந்தோட்டத் தொழிலாளர்களே உள்ளனர். பெருந்தோட்டங்களில் வாழும் மக்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் தினக்கூலிகளாக உள்ளனர்.பெருந்தோட்ட சமூகத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரே அரச தொழிலில் ஈடுபடுகின்றனர். இலங்கையின் மத்தியத்தர வர்கத்தினரே ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாது திணறிவரும் சூழலில் இந்த மக்கள் தொடர்பில் அரசாங்கத்தின் கூடிய கவனம் அவசியமாகவுள்ளது.

கம்பனிகள் தொழிலாளர்களுக்கு குறைந்தளவான வேலை நாட்களை மாத்திரமே வழங்குகின்றன. மறுபுறும் அரசாங்கத்தால் வாக்குறுதியளிக்கப்பட்ட ஆயிரம் ரூபா சம்பளம் எந்தவொரு கம்பனியாலும் வழங்கப்படுவதில்லை. இலங்கையின் பணவீக்கத்திற்கமைய பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக குறைந்தப்பட்சம் 2500 ரூபாவை வழங்க வேண்டுமென பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், அவர்களது நாளார்ந்த வருமானம் வெறும் 700 ரூபாவாகும். அத்துடன் தோட்டங்களில் 16,17 நாட்கள்தான் தொழிலும் வழங்கப்படுகிறது.

அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள 7500 ரூபா நிவாரணம் முழுமையாக பெருந்தோட்டங்களில் வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் இந்தத் தருணத்தில் கிடைக்கப் பெற வேண்டியது கட்டாயமாகும். அத்துடன் பெருந்தோட்டங்களில் காணப்படும் தரிசு நிலங்கள் உடனடியாக மரக்கறி உற்பத்திக்காக இவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதற்கான அத்தியாவசிய உதவிகளையும் அரசாங்கம் வழங்க வேண்டும்.

நாட்டில் காணப்படும் வளங்களை இனவாத நோக்கில் நோக்காது அனைத்து மக்களுக்கு பகிர்ந்தளிப்பதன் ஊடாக எதிர்காலத்தில் இலங்கை எதிர்கொள்ள போகும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இந்த மக்களால் முகங்கொடுக்க சூழ்நிலையை உருவாக்குவதே இத்தருணத்தில் கட்டாயமானது.