ஜே ஆர் ஜெயவர்தன அறிமுகம் செய்த சர்வாதிகாரத்தின் ஆணிவேர்-இதுவரை ஆண்டுவந்த தலைவர்களின் நிறைவேற்று அதிகாரம் மிக்க ! ஜனாதிபதி எனும் பிரம்மாஸ்திரம் !

0
232
Article Top Ad

எவ்வித போராட்டங்களும் புரட்சிகளும் சட்டத்தின் ஊடாக கட்டுப்படுத்த முடியா உச்ச அதிகாரம் கொண்ட ஆசனம் அது ! இலங்கையில் உள்ள எந்த நீதி மன்றமும் , பாராளுமன்றமும் அமைச்சரவையும் கூட இலகுவில் பதவியில் இருந்து நீக்கிவிட முடியா அதிகாரகங்களின் குவியலான நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ! முப்படைகளின் தலைவர்.

20 ஆம் திருத்த சட்ட மூலம் இரட்டிப்பு அதிகாரமும் மூன்றில் இரண்டு பாராளுமன்ற பலமும் கொண்ட ஜனாதிபதி

இப்போது கூட தானாக பதவி துறந்தால் ஒழிய நம்பிக்கை இல்லா பிரேரணை எனும் மிகச் சிக்கலான பொறிமுறை ஒன்றி மூலமே பதவி துறக்க வைக்க முடியும் என்ற நிலை ! அதுவும் நடைமுறையில் சாத்தியமில்லை ! இந்த பின்னனியில் மக்கள் சக்திக்கு முன்பு சரணடைவாரா ?

அவ்வண்ணம் சரணடைந்தால் அடுத்து என்ன ? இடைக்கால அரசாங்கம் தற்காலிக ஒரு ஜனாதிபதி . அதன் தலைமையில் மக்களின் உடனடி பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கக்கூடிய செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்பட கூடும்.

எதிர்வரும் 13 ஆம் திகதி தான் பதவி விலகுவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். ஜூலை 9 ஆம் திகதி கட்சித் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்ததை அடுத்தே, எதிர்வரும் 13 ஆம் திகதி புதன் கிழமை தான் பதவி விலகுவதாக ஜனாதிபதி அறிவித்தார்.

எனினும் அதன் பின்னர் இலங்கை ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தை எழுத வேண்டும். அதற்க்கு மதச்சார்பின்மை கொண்ட அரசியலமைப்பு என்ற விடயத்தில் தொடங்கி – கற்றறிந்த இளைய தலைமுறையினரை உள்வாங்குதல் போன்ற முக்கிய படிமுறைகள் பலவற்றை கடந்து வர வேண்டும்.

இதுவரை இலங்கையை ஆட்சி செய்த பேரினவாத ஆட்சியாளர்கள் கட்டமைத்து வைத்துள்ள தேசிய வாதம் என்பதற்குரிய வரைவிலக்கணம் மாற்றி எழுதப்பட வேண்டும்.

இதற்குள் பௌத்த சங்கங்கள் தேசியவாத இயக்கங்கள் சிவில் அமைப்புகள் சட்ட வல்லுநர்கள் என பலதரப்பட்ட பிரிவினரின் கருத்துக்கள் உள்வாங்கப்படவேண்டிய கட்டாயம் உள்ளது.

அதன் பின்னர் ஒவ்வொரு அம்சங்களும் பாராளுமன்றத்துக்கு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். மக்கள் ஆணையை பெற பொது சன அபிராய வாக்கெடுப்புக்கு உட்படுத்த வேண்டும்.

இத்தனை படிமுறை இருக்கின்ற நிலையில், சிங்கள பௌத்தர்களை பெருவாரியாக கொண்ட நாட்டில் பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை போன்ற அம்ஸங்களை நீக்குவதன் மூலமே மதச்சார்பின்மை அரசியல் அமைப்பினை உருவாக்கிட முடியும் என்ற நியாயத்தை அவர்கள் ஏற்பார்களா ? அவ்வாறு ஏற்றாலும் பதவி மோகம் கொண்ட இனவாத அரசியல் வாதிகள் மக்களுக்கு மீண்டும் இனவாத ஊசியை ஏற்ற முயல மாட்டார்களா ?

இதில் இடதுசாரி சிந்தனை , தேசிய உற்பத்தி தேசிய அடையாளம் போன்ற விடயங்கள் மீள்கட்டமைப்பு செய்யப்படும் அவசியம் ஏற்படும் போது இன்று ராஜபக்ஷ ஆட்சியின் மூலம் போஷிக்கப்பட்ட பௌத்தவாத சிந்தனைகள் வலுவிழக்க கூடும். இதனால் மீண்டும் பௌத்த நாடு என்ற மதவாத சிந்தனை எழுச்சிக்கு அது வித்திடும் அபாயம் உள்ளது.

எனவே சிங்கள சமூகம் இன்றைய நலிவுற்ற வாழ்வாதாரத்தால் சிதைவுற்ற காரணத்தால் ராஜபக்ஷ ஆட்சி துடைத்தெறியப்படுவதன் மூலம் சர்வதேசத்தினிடம் இருந்து இலங்கை தனிமைப்படுவதை தவிர்ப்பதற்காக முற்போக்கு கருத்தியலை மக்கள் எழுச்சி போராட்டம் மூலம் வெளிப்படுத்துகிறது.


எனினும் அனைத்தும் மாற்றம் பெற்று மதச்சார்பின்மை அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கம் பெறுவதை அந்த முற்போக்கு சிந்தனை ஏற்குமா என்ற வினாவுக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

இலங்கை ஒரு பல்லின மக்கள் கொண்ட நாடு – இங்கே சமூக நீதியும் மக்களின் சம உரிமையும் காக்கப்படுவதன் மூலமே ஒரு தேசிய நல்லிணக்கத்தையும் தேசியவாத சிந்தனையை கட்டி எழுப்ப முடியும். இந்த பொறிமுறை ஒன்றே இனவாரியாக மக்களை பிரித்தாளும் தந்திரங்கள் மூலம் மோசமான அரசியல் வாதிகள் உருவாகாமல் இருப்பதை தடுக்கும்.

மதமும் அரசியலும் ஒன்றில் ஒன்று தலையிட கூடாது. ஒரு பிரஜையின் தேசிய உரிமையினை பெறுவதில் மதம் ஒரு விசேட காரணமாக கருதப்பட கூடாது.

குறித்த ஒரு மதச்சமூகத்தை மிதமிஞ்சிய வகையில் உயர்த்தியும் ஏனைய சமூகங்கள் அடிபணித்தல் வேண்டும் என்ற அமசங்கள் உருவாக இருக்கும் புதிய அரசியல் அமைப்பில் முற்றாக துடைத்தெறியப்படுத்தல் வேண்டும்.

சொல்லாலோ செயலாலோ மற்றுமொரு மத இன சமூகத்தை தாக்கி பேசினால் தேச துரோக குற்றத்துக்கு இலங்கை குற்றவியல் தண்டனை சட்டம் அளிக்கின்ற அதே தண்டனையை அளிப்பதற்கு இந்த புதிய அரசியல் அமைப்பு வழி செய்ய வேண்டும்.

மத இனம் கட்சி பிரதேசம் என்பதை மறந்து சர்வாதிகார ஆட்சியை ஜனநாயக போராட்டம் மூலம் மண்டியிட வைத்த இந்த வேகமும் விவேகமும் இனிவரவிருக்கும் மாற்றத்துக்காக மிகக்கவனமாக செயலாற்ற வேண்டிய தருணத்தை காலம் தந்துள்ளது.

குழந்தைக்கும் தாய்க்கும் பாதிப்பின்றி அவள் வயிற்றில் இருந்து நச்சுக்கொடியினை மிகக்கவனமாக அகற்றுகின்ற ஒரு செயல் முறைக்கு ஒப்பானது இது.

சற்று தவறினால் தொன்னூறு நாட்களுக்கு மேலாக போராடி பெற விருக்கும் தூய இலங்கை எனும் குழந்தையும் அதை பிரசவிக்கும் மக்கள் எழுச்சி எனும் தாயும் மிகப்பெரும் ஆபத்தை எதிர் கொள்ள நேரிடும்.

இருளப்பன் ஜெகநாதன்
சுதந்திர ஊடகவியலாளர்