2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 6ம் திகதி அதிகாலை வேளை அன்று மனம் படபடக்கின்றது. பதபதைத்துக்கொண்டிருக்கின்றது.
மரணப்படுக்கையில் இருக்கும் பாசமிகு உறவினரோ உற்றநண்பரோ எல்லாவிதப் போராட்டங்களும் பயனற்ற நிலையில் எம்மைவிட்டுப் போய்விடப்போகின்றார் என அந்தரித்து நின்ற திக் திக் கணங்கள் அது. தங்கள் தலையிலேயே வாரிப்போட்டுக்கொள்ளும் வரலாற்றை செய்துவிட்டனரா தமிழ் மக்கள் எண்ணம் உணர்வுகள் மேலோடுகின்றது.
பாராளுமன்றத்தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கையில் யாழ் மத்திய கல்லூரி வளாகத்தில் வாக்குகள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கையில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சட்டத்தரணி எம்,ஏ. சுமந்திரன் பின்தங்கி நிற்பதாகக் கிடைத்துக்கொண்டிருந்த ஆரம்பத்தகவல்களைக் கேள்விப்பட்டபோது மனதில் வந்துவெந்துபோன எண்ண ஓட்டங்கள் பற்றிய சில ஒப்பீட்டு உணர்வுகளைத் தான் ஆரம்பத்தில் குறிப்பிட்டேன்.
மாவை, சித்தார்த்தன் தரப்பு எப்படியேனும் வெற்றிபெற்றுவிடவேண்டும் என்ற கூட்டம், ரவிராஜ் அவர்களின் விதவை மனைவி சசிகலலை வெல்லவைக்கவேண்டும் என எண்ணியிருந்த கூட்டம், உதயன் ஸ்தாபகர் சரவணபவன் அவர்களை வெல்லவைக்கவேண்டும் என்று திடசங்கற்பம் கொண்டிருந்த கூட்டம்,கொழும்பில் இருந்து தமது இடத்திற்குள் நுழைந்த வெளியாளை விரட்டியடிக்கவேண்டும் என்ற ஒரு கூட்டம், ராஜபக்ஸக்களை போர்க்குற்றத்தில் இருந்து காப்பாற்றுகின்ற வேலையைச் செய்யவந்தவர் என ஒரு கூட்டம்,மத்திய வங்கியின் வாக்கெண்ணும் சாவடிக்குள் நின்று வெறியாட்டம் ஆடிக்கொண்டிருக்கின்றது காட்டுக்கூச்சல்கள் காதைப் பிளந்து கொண்டிருக்கின்றது.
பல மணி நேர பதபதைப்பிற்கு பின்னர் சுமந்திரன் தெரிவாகிவிட்டார் என்ற அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வருகின்றது. மனம் ஏதோபுரியா நிம்மதியில் ஆழ்ந்த நித்திரைக்கு செல்கின்றது.
இந்த உணர்வுப் போராட்டத்திற்குள் அன்றைய தினம் நான் மட்டும் சென்று வரவில்லை நன்கு கற்றறிந்தவர்கள் உயர் தொழில்களில் இருந்தவர்கள் மட்டும் சென்றுவரவில்லை. நிதானமாக யோசிக்கின்ற தூரநோக்கோடு பார்க்கக்கூடிய சாதாரணமான இளைஞர் யுவதிகள் பெற்றோர் பெரியவர்களும் ஊடகவியலளார்களும் அடங்குவர் என்பதற்கு எனக்கு வந்த தொலைபேசி அழைப்புக்கள் சமூக வலைத்தளப்பதிவுகளும் சான்றுபகரும்.
ஏன் அன்று எம்.ஏ. சுமந்திரன் எப்படியேனும் வெற்றிபெற்றுவிடவேண்டும் என்று விரும்பினோம்? காரணம் எமது மக்களுக்காக படித்தவர் அதிலும் சட்டம் நன்கு தெரிந்தவர் பூகோள அரசியலை விளங்கி செயலாற்றக்கூடியவர் ஒருவர் பாராளுமன்றத்தில் எம்மைப் பிரதிநிதித்துவம் செய்யும் போது இனத்திற்கு கௌரவம் மட்டுமன்றி நன்மையும் நடக்கும் என்ற எண்ணத்தினாலல்லவா?
இத்தனைக்கு சுமந்திரன் அண்ணா அரசியலுக்கு வந்தது 2010ம் ஆண்டு. அவருக்கு முன்னரே எனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் அண்ணாவை நன்கு தெரியும் . சக்தி டீவியில் பணியாற்றிய காலத்தில் போர்நிறுத்த காலத்தில் அடிக்கடி அதிகாலை லசந்த விக்கிரம துங்க நடத்தும் குட்டோர்னிங் சிறிலங்கா நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் வரும் போது பழக்கம் அதனைவிட பலமுறை சந்தித்தும் இருக்கின்றேன. அப்படிப்பார்த்தால் நன்கு தெரிந்தவர் என்ற அடிப்படையில் ரவிராஜ் அண்ணாவின் மனைவியே தேர்தலில் வென்றிருக்கவேண்டும் என சிந்தித்திருக்க வேண்டும்.
அதுபோன்றே உதயன் ஸ்தாபகர் சரவணபவன் அவர்கள் கொழும்பில் நடத்திய சுடர் ஒளிப் பத்திரிகையின் ஆசிரியராக 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை இருந்தவன் நான். வெளிநாட்டிற்கு செல்லும் வழியில் தொலைபேசியில் நேர்காணல் செய்து சுடர் ஒளியின் ஆசிரியர் என்ற பதவியை வழங்கியவர் அவர். அவர் மீது பலரும் பல குறைகளை அவ்வப்போது கூறியபோதும் தமிழ் மக்களின் வரலாற்றில் மிகவும் மோசமான காலப்பகுதியில் அடங்காத் தமிழர்களின் குரலாக தாயகத்திற்குள்ளிருந்துகொண்டே எத்தனையோ தாக்குதல்கள் அச்சுறுத்தல்களின் மத்தியிலும் தமிழர்களின் பிரச்சனைகளை அபிலாஷைகளை வெளியே கொண்டுவந்த பத்திரிகையின் ஸ்தாபர் என்ற வகையில் பெருமதிப்பு இருந்தும், சுமந்திரன் வந்துவிடவேண்டும் என்று எண்ணியமைக்கு காரணம் பாராளுமன்றத்தில் புதிய அரசியல்யாப்பு தயாரிப்பு நடவடிக்கைகள் இடம்பெறும் போது சட்டதிட்டங்கள் பற்றி பேசவல்ல ஒருவர் தமிழ் மக்களுக்காகப் பேச பாராளுமன்றத்தில் பாராளுமன்றத்தில் இருக்கவேண்டும் என்று சிந்தித்தமைதான்.
தற்போதைய பாராளுமன்றத்தில் சுமந்திரன் அவர்கள் ஆற்றிய பல உரைகள் அதற்கு வெளியே ஆற்றிய பல செயல்கள் அவர் வெற்றிபெறவேண்டும் என்று எதிர்பார்த்தது தவறில்லை என்பதை பல முறை நிரூபித்திருக்கின்றது.
ஆனால் ரணில் விக்கிரமசிங்க விடயத்தில் அவர்களின் நிலைப்பாடு சரியானதா?
அன்று யாழ் மத்திய கல்லூரி வளாகத்திற்குள் காட்டுக்கூச்சல் போட்ட கூட்டத்துடன் காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்களின் கோஷங்கள் அனைத்தையும் எடுத்துவிடக்கூடாது. ஆனால் அவர்களது கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானதா? ஆரம்பமுதலே ஒரே நிலைப்பாட்டில் நகருகின்றதா?யதார்த்தத்துடன் ஒன்றிப் போகின்றதா?
ரணிலுக்கு மக்கள் ஆணை இல்லையாம்
காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் போன்று சுமந்திரன் அவர்கள் முன்வைக்கும் முதன்மை வாதம் ரணிலுக்கு மக்கள் ஆணை இல்லை என்பது. கடந்த 2020ம் ஆண்டு தேர்தலில் குறிப்பாக தென்பகுதியில் வழங்கப்பட்ட மக்கள் ஆணை சரியானதென்றால் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஜனாதிபதித் தேர்தலில் வழங்கப்பட்ட 69 லட்சம் வாக்குகளை விடவும் பாராளுமன்றத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவிற்கு வழங்கப்பட்ட மூன்றிலிரண்டு பெரும்பான்மைதந்த மக்கள் ஆணையை மதிக்காது ஏன் அவர்களை விரட்டிருக்கவேண்டும்? ஏனெனில் அது இனவாதத்தையும் மதவாதத்தையும் உசுப்பேற்றி பெறப்பட்ட துவேச ஆணை. அதனால் தான் சரத் வீரசேகர போன்ற இனவெறியர்கள் மூன்று லட்சத்திற்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்று கொழும்பு மாவட்டத்தில் முதலிடத்திற்கு வரமுடிந்தது. அப்படிப் பார்த்தால் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவும் தோற்றுத்தானே போனார் கடந்த தேர்தலில் சஜித் 14 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கோட்டாவிடம் தோற்றார். இப்போது போர்க்கொடி தூக்கும் தேசிய மக்கள் சக்தி கடந்த பொதுத் தேர்தலில் ஒரு தேசியப்பட்டியல் அடங்கலாக 3 ஆசனங்களையே பெற்றது. ஐக்கியதேசியக் கட்சி 249,435 வாக்குகளைப் பெற்ற அதேவேளை தேசிய மக்கள் சக்தி 445,958 வாக்குகளையே பெற்றது. விடாப்பிடியாக நிற்கும் முன்னிலைவாத சோசலிஸக் கட்சி வெறுமனே 14,522 வாக்குகளை மாத்திரமே பெற்றது.
ரணில் ராஜபக்ஸக்களை காப்பாற்றுகின்றவராம்
ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஸக்களைக் காப்பாற்றுகின்றார் பதவிக்கு வந்தால் தொடர்ந்தும் காப்பாற்றுவார் என்பது காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களதும் சுமந்திரன் அவர்களதும் மற்றைய வாதம். சரி அவர் ராஜபக்ஸக்களை காப்பாற்றுகின்றவர் என்றே வைத்துக்கொள்வோம். தற்போது ஜனாதிபதி வேட்பாளராக முன்னிலையாகியிருக்கும் டலஸ் அழகப்பெரும ஆட்சிக்கு வந்தவுடன் ராஜபக்ஸக்களை தூக்கி சிறையில் அடைத்துவிடுவாரா? திருடப்பட்ட பணத்தை உடனே கொண்டுவர நடவடிக்கை எடுப்பாரா? ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளுக்கு உடனே தண்டனை வாங்கிக்கொடுப்பாரா?
தனிக்கட்சியில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஸக்களைக் காப்பாற்றுகின்றவர் என்றால் ராஜபக்ஸக்களால் இரண்டு முறை தேசியப்பட்டியலூடாக தெரிவுசெய்யப்பட்ட டலஸ் அழகப்பெரும ராஜபக்ஸக்களைக் காப்பாற்றமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஸக்கள் இன்றும் செல்வாக்குச் செலுத்தும் பொதுஜன பெரமுண (மொட்டு) கட்சியுடன் தொடர்புவைத்திருப்பது தவறென்றால் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மொட்டுக்கட்சிக்கு முட்டுக்கொடுப்பது தவறில்லையா?
அப்படியென்றால் இங்கு தவறு ரணில் விக்கிரமசிங்க என்ற தனி மனிதன் தானா?
ரணில் விக்கிரமசிங்க பெரும் ஊழல்வாதி என்ற வாதத்தையும் மத்தியவங்கி பிணைமுறிமோசடியையும் வைத்துத்தானா இந்த நிலைப்பாடு.ரணில் ஊழல் மோசடிப் பேர்வழியா இல்லையா என்பதற்கு என்னால் உத்தரவாதம் தரமுடியாது. காரணம் அவர் பற்றிய அதிக தகவல் கிடையாது. ஆனால் இலங்கையில் உள்ள முன்னணி சர்வதேச ஊடகங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுடன் பழகிவருகின்றவன் என்றவகையில் ரணில் பற்றி நான் வினவியபோது அவர்கள் கூறியபதிலின் சாரம்சம் ரணில் தனிப்பட்ட ரீதியில் ஊழல் மோசடிகளுடன் சம்பந்தப்படாதவர். ஆனால் அவரைச் சுற்றியிருந்தவர்கள் ஊழல் மோடியில் ஈடுபட்டிருந்தனர் என்பதாகவே இருந்தது.
நிலைமை இப்படி இருக்கையில், ரணில் மீது பல்வேறு தரப்பினரும் கொண்டிருக்கும் காழ்ப்புணர்ச்சிக்கும் அச்சத்திற்கும் காரணம் என்ன? நாடாளுமன்றத்தில் ஒரே ஆசனத்தை வைத்திருக்கும் ஒருவரை ஏன் அனைத்துத் தரப்பும் ஒன்று சேர்ந்து எதிர்க்கின்றனர்? அவரது அரசியல் எதிரிகள் கூட மெச்சும் ‘ அரசியல் அறிவையும் அனுபவத்தையும் பார்த்தா? இல்லை அவர் கொண்டிருக்கும் சர்வதேச இராஜதந்திரத் தொடர்புகள் மூலம் நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள அத்தியாவசிய பிரச்சனைகளைத் தீர்த்துவிட்டால் தமது அரசியல் செல்லாக்காசாகிவிடும் என்ற எண்ணத்திலா?
இத்தனைக்கும் டலஸ் அழகப்பெரும அவர்கள் ஊடகங்களோடு சிறப்பாக உரையாடக்கூடியவர். நேற்றையதினம் வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு நேர்காணலொன்றிற்காக தொலைபேசி அழைப்பை எடுத்தபோது என் பெயர் சொல்லி அருண் நான் மூச்சுவிடக்கூட நேரமில்லாமல் இருக்கின்றேன் பின்னர் பார்த்துக்கொள்வோம் என்று நாகரீகமாக மறுத்தவர். பண்பான மனிதர். மறுமுனையிலோ ரணில் விக்கிரமசிங்கவிற்கு எனது பெயரைக்கூடத்தெரியாது. எப்போது அவருடன் புகைப்படம் எடுத்தபோது எங்கோ மூலையைப் பார்த்துக்கொண்டு போஸ் கொடுத்திருந்தவர்.
எமது பிள்ளைகளை சாதாரணமாக ஒரு டியூஸன் வகுப்பில் சேர்க்கும் போதே ஆசிரியர் கெட்டிக்காரரா? என பல்வேறு தரப்பினரிடம் உத்தரவாதத்தை வாங்கும் நாம் நாட்டின் எதிர்காலத் தலைவரைத் தெரிவு செய்யும் விடயத்தில் எடுத்திருக்கின்ற முடிவு சரியானதா?
எமக்கு நன்கு தெரிந்த உறவினர்களாக இருந்தாலும் நண்பர்களா இருந்தாலும் அவர்கள் நல்லவர்களாகவே இருந்தாலும் எமது பிள்ளைகள் கல்வி கற்கும் பாடசாலையின் ஆசிரியராகவோ அதிபராகவோ தொழில் பெற பரிந்துரை செய்வோமா? இல்லைதானே அப்படி இருக்க எந்தளவிற்கு நல்லவரா இருந்தாலும் நாட்டின் ஜனாதிபதி ஆவதற்கு தெரிவுசெய்யப்படும் ஒருவர் இப்படித்தான் இருக்கவேண்டும் இந்தத்தகைமைகளைக் கொண்டிருக்கவேண்டும் என்ற அடிப்படை அளவுகோல் கூட இல்லையா?
காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் கோரிக்கைகள்?
எந்தக்காரணம் கொண்டும் நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க வந்துவிடக்கூடாது என்பதில் சஜித் பிரேமதாஸவும் அவரை ஆதரிக்கும் நகர்வுகளை நகர்த்துவது வெள்ளிடைமலை. காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் ஒருதரப்பாக அண்மையில் சஜித் பிரேதாஸவை சந்தித்தித்த அனைத்துப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே ‘ எந்தக் காரணம் கொண்டும் எவ்வகையிலேனும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி ஆகிவிடக்கூடாது’ அதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. அப்படி ஆகிவிட்டால் அவரை செயற்பட நாம் அனுமதிக்கப்போவதில்லை. இடைவிடா போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்பதாக இருக்கின்றது அவரது வாதம்.
சஜித் பிரேமதாஸவும் -டலஸ் அழகப்பெருமவும் ஏற்படுத்தியுள்ள கூட்டணி ராஜபக்ஸ தரப்பிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் ? அவர்களைக் கைதுசெய்து கூண்டிலடைக்கும் என்ற உறுதிமொழி போராட்டக்காரர்களிடம் வழங்கப்பட்டதா? கொள்கையிடப்பட்ட பணம் மீண்டும் நாட்டிற்கு கொண்டுவரப்படும் என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டதா?
அதெல்லாம் இல்லாமல் வெறுமனே ரணில் விக்கிரமசிங்கவை விரட்டியடிப்பதற்காக மாத்திரமே கூட்டணி அதனை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கப்போகின்றோம் என்றால் இதுவரை உயிரைத் துச்சமென மதித்து நடத்திய உன்னதப் போராட்டத்தில் என்ன அர்த்தம் இருக்கின்றது?
2020 ஓகஸ்ட் 6ம் திகதியன்று யாழ் மத்திய வங்கி வாக்கு எண்ணும் நிலையத்தில் காட்டுக்கூச்சல் போட்ட கூட்டம் உணர்ச்சிப் பிரவாகத்தில் தூரநோக்கற்று செயற்பட்டமை காலஓட்டத்தில் உறுதியானது. இன்று காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் முன்வைத்துள்ள பல கோரிக்கைகள் சரியாக இருந்தாலும் அனைத்துக்கோரிக்கைகளும் அர்த்தமுள்ளவைதானா என அதில் பங்கேற்கும் பெரும்பான்மையான இளைஞர் யுவதிகளே விளங்கிக்கொள்வதற்குள் தீர்க்கமான காலம் கடந்துவிடும்.
ReplyForward
|