ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி முகத்திடலுக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றுவதற்கு ஆயுதப்படைகளை அரசாங்கம் அனுப்பியமை குறித்து பல வெளிநாட்டு இராஜதந்திரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், “நள்ளிரவில் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆழ்ந்த கவலையடைகிறேன்” என கூறியுள்ளார்.
அதிகாரிகளால் இது கட்டுப்படுத்தப்பட வேண்டும் மற்றும் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவியை வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன், “காலிமுகம் போராட்ட தளத்தில் என்ன நடக்கிறது என்று கேட்கிறேன். இப்போது ஏன் இப்படி நடக்கிறது என்று தெரியவில்லை.”அதிகாரிகள் நிதானத்துடன் செயல்படுவதும், வன்முறையைத் தவிர்ப்பதும் முக்கியம் என்றும் அவர் கூறினார்.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன், “காலிமுகம் போராட்ட தளத்தில் இருந்து வரும் அறிக்கைகள் குறித்து மிகவும் கவலையடைவதாக” தெரிவித்துள்ளார்.
அமைதியான போராட்டத்திற்கான உரிமையின் முக்கியத்துவத்தை பிரித்தானிய தெளிவுபடுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.
இன்றுகாலை நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, பல போராட்டக்காரர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் படையினரால் தாக்கப்பட்டனர்.
சம்பவங்களில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது