ஒன்பது இலங்கை கடற்படையினர் அமெரிக்காவில் தலைமறைவு :பொருளாதார நெருக்கடி காரணமா?

0
235
Article Top Ad


அமெரிக்கா அன்பளிப்பாக வழங்கிய கடற்படைக் கப்பலொன்றைப் பொறுப்பேற்று வருவதற்காக சென்ற இலங்கை கடற்படையைச் சேர்ந்த ஒன்பது வீரர்கள் கப்பலில் இருந்து தப்பித் தலைமறைவாகியுள்ளதாக உத்தியோகபூர்வ தரப்பை மேற்கோள் காண்பித்து எக்கனமிநெக்ஸ்ட் இணையத்தளம் செய்திவெளியிட்டுள்ளது.

கடற்படையில் பல்வேறு பதவிநிலைகளைவகிக்கும் 27 முதல் 36வயது வரையான ஒன்பது பேரே இவ்வாறு தலைமறைவாகியுள்ளனர். பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கையில் இருந்து கடந்த சில மாதகாலப்பகுதியில் படகுமூலம் சட்டவிரோதமாக பலரும் தப்பிச் செல்ல முனைந்துகொண்டிருக்கும் நிலையில் அதனைத் தடுக்க முன்னரங்க காவலராக காணப்படும் கடற்படையைச் சேர்ந்தவர்களே அமெரிக்காவில் தலைமறைவாகியிருப்பது நிலைமையின் பாரதூரத்தைக் காண்பிப்பதாக அமைந்துள்ளது.

அமெரிக்காவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட கப்பலைக்கொண்டுவருவதற்கு கடற்படையைச் சேர்ந்த பெரும் குழாமொன்று சென்றிருந்தது ‘ என உத்தியோகபூர்வ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியதாக அந்த இணையத்தளம் செய்திவெளியிட்டுள்ளது. அந்தக் குழாமிலிருந்து ஒன்பது பேர் காணாமல் போயுள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த கடற்படையினர் குழாமொன்று அமெரிக்கவிலுள்ள சகாக்களுடன் பயிற்சிகளைப் பெற்றபின்னர் அமெரிக்காவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட P-627 என்ற கப்பலில் நாடுதிரும்பவிருந்தனர். இந்தக்கப்பல் முன்னர் அமெரிக்க கரையோர காவற்படையினரால் பயன்படுத்தப்பட்ட கப்பலாகும் என அமெரிக்க தூதரக வட்டாரங்களை மேற்கோள்காட்டி எக்கனமி நெக்ஸ்ட் மேலும் செய்தி வெளியிட்டுள்ளது. ” கடற்படையைச் சேர்ந்த பலர் பயிற்சிகளுக்கு சமூகமளிக்கத்தவறியதாக அறிகின்றோம். இந்தவிடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக உரியதரப்பிற்கு அறிவுறுத்தியுள்ளோம்’ என அமெரிக்க தூதரகப் பேச்சாளர் எக்கனமி நெக்ஸ்ட் இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க குடிவரவு சட்டங்களை மீறுகின்றவர்கள் கைதுசெய்யப்படவோ தடுத்துவைக்கப்படவோ அன்றேல் நாடுகடத்தப்படவோ முடியும் என்பதுடன் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்தால் பத்துவருட காலங்கள் வரையில் அங்கு வருவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் .இலங்கை அரசாங்கம் அரச சடையினர் மற்றும் மக்களுடனான தொடர்ச்சியான பிணைப்பை அமெரிக்கா பெறுமதிமிக்கதாகக் கருதுகின்றது. இந்த நெருக்கடியான காலப்பகுதியில் தாராளமயமான மனிதாபிமான உதவிகளையும் அபிவிருத்தி உதவிகளையும் இராணுவப் பயிற்சிகளையும் அமெரிக்கா வழங்கும்.”என அமெரிக்க தூதரகப் பேச்சாளர் எக்கனமி நெக்ஸ்ட் இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க கரையோர காவற்படைக்கு சொந்தமாக இருந்த டக்ளஸ் முன்ரோ என்ற கப்பல் இலங்கைக் கடற்படைக்கு அன்பளிப்பாக வழங்கப்படுவதாக  அறிவிக்கப்பட்டபின்னர் அதன் பெயர் P-627என மாற்றப்பட்டது. 180ற்கும் அதிகமானவர்களை ஏற்றிச்செல்லக்கூடிய இந்தக்கப்பல் இலங்கைக்கு கொண்டுவரமுன்பாக மீள்புதுப்பிப்பு பணிகளுக்குட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது தலைமறைவாகியிருக்கும் கடற்படையைச் சேர்ந்த ஒன்பது பேரும் Rim of the pacific (RIMPAC0) Exercise 2022 என்ற பயிற்சிப்பாசறையில் பங்கேற்பதற்காக கடந்த ஜுன்மாதம் 4ம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்றிருந்த 50 பேர் கொண்ட கடற்படைக் குழாமின் ஒருபகுதியினராவர்.

அமெரிக்க கடற்படையின் பசுபிக் படையணியினால் ஏற்பாடுசெய்யப்பட்ட பயிற்சிப்பாசறைக்காக ரோயல் அவுஸ்திரேலிய விமானப்படையினரால் ஒழுங்குசெய்யப்பட்ட விசேட விமானத்தில் அவுஸ்திரேலியா சென்று அங்கு இரண்டுவாரகாலப்பயிற்சிகளை முடித்துக்கொண்டு அங்கிருந்து அமெரிக்காவிற்கு புறப்பட்டுச்சென்றிருந்தனர்.

இந்தப்பயிற்சிப் பாசறை ஜுன் 29ம்திகதி முதற்கொண்டு ஓகஸ்ட் 4ம் திகதிவரை நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. ( நன்றி எக்கனமி நெக்ஸ்ட் இணையத்தளம் )