“கனவு நனவானது” – தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சிப் பதிவு

0
76
Article Top Ad

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார். இதன் மூலம் தனது கனவு நிஜமாகிவிட்டது என ட்விட்டரில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை போட்டித் தொடர் அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இதில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்களின் பெயரை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி, ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் கே.எல்.ராகுல் துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் விலகியிருந்த ஜடேஜா அணியில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு மாற்றாக அக்சர் படேல் அணியில் இடம்பெற்றுள்ளார். ஆசிய கோப்பை தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார். இந்திய அணியில் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெற்றுள்ளனர்.

இதில் மாற்றுவீரர்களாக முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். அணியில் சஞ்சு சாம்சன், முஹம்மத் ஷமி இடம்பெறாதது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் டி20 உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கனவு நனவானது’ என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். ஐபிஎல் தொடரின்போது டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பது தனது ‘கனவு’ என அடிக்கடி தினேஷ்கார்த்திக் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக கிரிக்கெட் உலகில் கம்பேக் நாயகன் என்று வருணிக்கப்படுபவர் டிகே. நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் தனது அதிரடி ஃபினிஷிங் திறன் மூலம் இந்திய அணியில் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு விளையாடும் வாய்ப்பை பெற்றார் தினேஷ் கார்த்திக்.

கங்குலி தொடங்கி டிராவிட், கும்ப்ளே, தோனி, கோலி, ரோகித், இப்போது கே.எல்.ராகுல் வரையில் பல கேப்டன்களுக்கு கீழ் விளையாடிய நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர் தினேஷ் கார்த்திக். நட்சத்திர வீரர்களுக்கு மத்தியில் சிக்கித்தவித்த அவருக்கு இந்திய அணியில் ரெகுலராக இடம் கிடைப்பதே பெரிய சவாலாக இருந்தது. இருந்தாலும் மனம் தளராது அணியில் விளையாடும் வாய்ப்புக்காக முயற்சித்துக் கொண்டே இருந்தார். அதற்காக தனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் தனது திறனை நிரூபித்து வந்தார். அது உள்ளூர் கிரிக்கெட், உலக கிரிக்கெட் என அவர் வேறுபாடு பார்க்கவில்லை. பல்வேறு பேட்டிங் ஆர்டரில் விளையாடியவர். இப்போது, தன் விடாமுயற்சிக்கான பலனைப் பெற்றுள்ளார் டிகே.