உயர்பாதுகாப்பு வலயங்கள் வர்த்தமானி வாபஸ்! – அழுத்தங்களுக்கு அடிபணிந்தார் ரணில் 

0
120
Article Top Ad

கொழும்பின் பல பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி அண்மையில் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

கொழும்பின் சில முக்கிய பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சால் வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டது. இதற்கு எதிராக கொழும்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. சர்வதேச சமூகமும் இதனைக் கண்டித்திருந்தது.

இந்தநிலையில் வெளிநாட்டுப் பயணங்களை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற்றுள்ளார்.

ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, உயர் நீதிமன்ற வளாகம், பாதுகாப்பு அமைச்சின் தலைமையகம் உள்ளிட்ட முக்கியமான கட்டடங்கள் அமைந்துள்ள பிரதேசங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டன. இந்தப்  பிரதேசங்களுக்குள் தகுதிவாய்ந்த அதிகாரியின் அனுமதியின்றி ஒன்றுகூடல், கூட்டங்களை நடத்துதல் உள்ளிட்ட செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த வர்த்தமானியே தற்போது திரும்பப் பெறப்பட்டிருக்கின்றது.