சுகாதார அணையாடைகளை உள்நாட்டில் தயாரிக்க வரி சலுகை!

0
125
Article Top Ad

பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகள் மத்தியில் சுகாதாரத்தை உறுதி செய்தல் மற்றும் சுகாதாரப் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொடுத்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில், உள்நாட்டில் சுகாதார அணையாடைகளை தயாரிப்பதற்காக ( Sanitary Napkin ) இறக்குமதி செய்யப்படும் பிரதான 05 மூலப்பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து வரிகளையும் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் சுகாதார அணையாடைகளுக்கு வரிச்சலுகையை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் மேற்படி தீர்மானத்திற்கமைய உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 10 சுகாதார அணையாடைகள் அடங்கிய ஒரு பக்கற்றின் விலை 50 தொடக்கம் 60 ரூபாவால் குறைவடையும். அதற்கமைய அதன் அதிகபட்ச சில்லறை விலை 260 தொடக்கம் 270 ரூபாவாக இருக்கும். அதேபோன்று, இறக்குமதி செய்யப்படும் முடிவுப்பொருட்களின் நுகர்வோர் சில்லறை விலைகளும் 18% அல்லது 19% ஆல் குறைவடையும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக வரிச்சலுகை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரச அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். உற்பத்தியாளர்கள் இந்த மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் சந்தர்ப்பத்தில் உரிய வரிச் சலுகைகளை பெற்றுக்கொள்வதற்கு தொழில் அமைச்சின் செயலாளரின் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதனால், அதற்கான செயன்முறைகளை தயாரிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய 05 பிரதான மூலப்பொருட்களை இறக்குமதி செய்கின்றபோதும், இடைநிலைப் பொருட்களின் இறக்குமதியின்போதும் 15% சுங்க இறக்குமதி வரி, 10% -15% CESS வரி மற்றும் 10% PAL வரி ( Ports & Airport Development Levy) , ஆகியன நடைமுறையிலிருக்கும்.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் சுகாதார அணையாடைகளுக்கு பூச்சிய சதவீத வற் வரி அறவிடப்படும். அதுபோன்று சுகாதார அணையாடைகளை முடிவுப்பொருட்களாக இறக்குமதி செய்பவர்களுக்கும் பூச்சிய சதவிகித வற் வரியின் அனுகூலம் கிடைக்கும். நெருக்கடியான காலகட்டத்திற்கு ஏற்றவாறு இச்சலுகைகள் யாவும் அமுல்படுத்தப்படுகின்றன.

சுகாதார அணையாடைகளின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் அதிக வரி காரணமாக அதன் விலை உயர்வடைந்துள்ளதால், இறக்குமதி வரியை குறைக்குமாறு உள்நாட்டு உற்பத்தியாளர்கள் அண்மையில் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
02-10-2022