மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த தீர்மானம் நிறைவேற்றம்!

0
94
Article Top Ad

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை  13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரேரணை மீதான வாக்கெடுப்பு சற்றுமுன் மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்றது.

இலங்கை குறித்த புதிய பிரேரணைக்கு ஆதரவாக 20 நாடுகள் வாக்களித்துள்ளன. பிரேரணைக்கு எதிராக 7 நாடுகள் வாக்களித்துள்ளன. வாக்கெடுப்பில் 20 நாடுகள் கலந்துகொள்ளவில்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் கடந்த செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமான நிலையில், அன்றைய தினமே இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையின் சாராம்சம் வாசிக்கப்பட்டு, அதுகுறித்த விவாதமும் இடம்பெற்றது.

அதன் தொடர்ச்சியாக பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் இணைந்து ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பில் தயாரித்துள்ள புதிய பிரேரணை மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இலங்கை குறித்த தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள சீனா இலங்கையின் சுதந்திரத்திற்கான தனது உறுதியான ஆதரவை வெளியிட்டுள்ளது.

தொடர்புபட்ட நாட்டின் இணக்கம் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ள இந்த தீர்மானம் அரசியல்மயமாக்கலின் விளைவு என சீனா தெரிவித்துள்ளது.

சீன பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்துள்ளன.