நாடு முழுவதும் சீரற்ற காலநிலை ; பல பிரதேசங்களுக்கு அபாய எச்சரிக்கை!

0
79
Article Top Ad

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி, இரத்தினபுரி, களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு அனர்த்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் அகலவத்த, மத்துகம, பண்டாரகம, பாலிந்தநுவர, புளத்சிங்கள, இங்கிரிய, வலல்லாவிட்ட, தொடங்கொட ஆகிய பிரதேசங்களில் மண்சரிவு ஆபத்து காணப்படுகிறது.

இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொட, குருவிட்ட, இரத்தினபுரி, எலப்பாத்த, அயகம, கிரியெல்ல, பெல்மெடுல்ல, நிவித்திகல, கலவான ஆகிய பிரதேசங்களில் மண்சரிவு ஆபத்து காணப்படுகின்றது.

இதேவேளை, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன இடைமாற்ற வழி பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இலகுரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறும் வாகன சாரதிகள் குருந்துகஹஹெடெக்ம மற்றும் தொடங்கொட இடைமாற்ற வழிகளை பயன்படுத்துமாறு அறவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் குறைந்த மட்ட வளிமண்டல தாழ் அமுக்கம் இன்னும் நீடிப்பதாகவும் அதனால் நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழையை எதிர்பார்க்கலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.