யாழ்., பலாலி அன்ரனிபுரத்தில் இராணுவத்தினர் வசமுள்ள 13 ஏக்கர் அரச காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதி செயலகத்தால், யாழ். கட்டளைத் தளபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்குப் பாதுகாப்புத் தரப்பினரும் சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் மேலதிக செயலராக இணைக்கப்பட்ட இ.இளங்கோவனின் பங்கேற்புடன் பலாலி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கடந்த வாரம் கூட்டமொன்று நடைபெற்றது.
வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து தற்போதும் முகாம்களில் வசிக்கும் மக்களை நிரந்தரமாக குடியமர்த்தும் முயற்சிகள் கடந்தகாலங்களில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதன் ஒரு கட்டமாக பருத்தித்துறைப் பகுதியில் தங்கியுள்ள 76 குடும்பங்களுக்கும் பலாலி அன்ரனிபுரத்தில் உள்ள அரச காணியைப் பெற்றுக் கொடுத்து அவர்களை மீளக்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பலாலி அன்ரனிபுரத்திலுள்ள 13 ஏக்கர் அரச காணி பாதுகாப்புத் தரப்பினர் வசம் உள்ளது. அதனை விடுவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. அதற்கு பாதுகாப்புத் தரப்பினரும் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் , இறுதி முடிவு தேசிய பாதுகாப்பு கவுன்ஸிலே எடுக்கும் என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரையில் பல கட்டங்களாக 20 ஆயிரத்து 872 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டுள்ளது எனவும், இன்னமும் 3 ஆயிரத்து 27 ஏக்கர் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது எனவும் யாழ். மாவட்டச் செயலர் க.மகேசன் நேற்று ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
மேலும் விடுவிக்கப்படாமல் இராணுவத்தினர் வசமுள்ள 3 ஆயிரத்து 27 ஏக்கரில், ஆயிரத்து 617 ஏக்கர் காணியைப் பாதுகாப்புத் தரப்பினருக்கு சுவீகரிப்பதற்கு காணி அமைச்சு ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.