இலங்கை அணியின் அரையிறுதி கனவு தகர்ந்ததா?

0
87
Article Top Ad

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் நியூஸிலாந்து அணி 65 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக கிளென் பிலிப்ஸ் 64 பந்துகளில் 104 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டிகளில் அவர் பெற்ற இரண்டாவது சதம் இதுவாகும்.

இவர் 10 நான்கு ஓட்டங்கள் 4 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக இந்த 104 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் கசுன் ராஜித 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அத்துடன், மஹீஷ் தீக்ஷன, தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்க மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 10 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், 168 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 102 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

அணிசார்பில் அதிகபடியாக அணித்தலைவர் தசுன் சானக்க 35 ஓட்டங்களையும், பானுக ராஜபக்ஷ 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய இலங்கை அணியின் ஏனைய வீரர்கள் 20க்கும் குறைந்த ஓட்டங்களையே பெற்றனர்.

பந்துவீச்சில் நியூஸிலாந்து அணியின் டிரெண்ட் போல்ட் 13 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

அத்துடன், மிட்செல் சான்ட்னர் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்த இன்னிங்ஸில் ஒட்டுமொத்தமாக 6 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டன.

இலங்கை அணியின் இந்த தோல்வியின் மூலம் அரையிறுதிக்கான வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எஞ்சியுள்ள போட்டிகள் இரண்டையும் கட்டாயம் இலங்கை வெற்றிபெற வேண்டியுள்ளது. அவ்வாறு வெற்றிபெற்றாலும் புள்ளி பட்டியலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் ஓட்டங்கள் பெற்றுக்கொண்ட வேதங்கள் கணிக்கப்பட்டு தான் இறுதி தீர்மானம் எடுக்கப்படும். என்றாலும் அவுஸ்ரேலிய அணி மேலும் ஒரு போட்டியில் தொழவோயடைய வேண்டும் இல்லாவிட்டால் நியூசிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகள் தான் அரையிறுதிக்கு தெரிவாகும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.