காலநிலை மாற்றம் குறித்து விரைவாக செயல்பட வேண்டும் – ரிஷி சுனக் பேச்சு!

0
89
Article Top Ad

ஆர்டிக், அண்டார்டிகா கண்டங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருவதால் உலக நாடுகள் இதுவரை கண்டிராத பெரும் அபாயத்தை எதிர்கொள்ள இருப்பதாக விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

இதனால் பருவநிலை மாற்றத்தை சமாளிக்கவும், அதன் தீவிரத்தை குறைக்கவும் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஐ.நா. பருவநிலை மாற்ற பணித்திட்டம் கடந்த 1992-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 1994-ம் ஆண்டில் அது முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது. இந்த பணித்திட்டத்தில் கையெழுத்திட்டுள்ள 198 நாடுகளும், 1995 முதல் ஆண்டுதோறும் பருவநிலை மாநாட்டை கூட்டி, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து விவாதித்து வருகின்றன.

இதற்கிடையே, ஐ.நா. பருவநிலை மாற்ற பணித்திட்டத்தின் 27-வது மாநாடு எகிப்து நாட்டின் ஷார்ம் எல் ஷேக் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. 50-க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் வரும் 18-ம் திகதி வரை 2 வாரங்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் பங்கேற்று பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான தங்களின் பரிந்துரைகளையும், முன்னெடுப்புகளையும் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள்.

நேற்று முதல் எகிப்தில் உலக தலைவர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்றைய மாநாட்டில் பங்கேற்ற இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பேசுகையில், கால நிலை மாற்றம் குறித்து விரைவாக செயல்பட வேண்டிய நேரம் இது என தெரிவித்தார். மேலும், காலநிலை நிதியத்திற்கு நாட்டின் அர்ப்பணிப்பாக 11.6 பில்லியன் பவுண்டுகளை வழங்கினார்.