மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதிகளில் ஒருவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான முத்துசிவலிங்கம் தனது 79 வது வயதில் நேற்று காலை (22.11.2022) நுவரெலியாவில் தனது இல்லத்தில் காலமானார்.
அன்னார் நுவரெலியா மாவட்டத்தின் உடபுஸ்ஸல்லாவ டலோஸ் தோட்டத்தில் முத்துகருப்பன் வீராயி தம்பதிகளின் நான்காவது பிள்ளையாவார்.தனது ஆரம்ப கல்வியை டலோஸ் தமிழ் வித்தியாலயத்திலும் பின்பு உயர் கல்வியை நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியில் கற்றவர்.
மனைவி ராஜேஸ்வரி இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு மகனும் இருக்கின்றனர்.
1959 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரசில் சாதாராண ஒரு உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டு தனது தொழிற்சங்க அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்தவர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் மிகவும் நம்பிக்கைக்கும் விசுவாசத்திற்கும் ஒருவராக அவர் மறையும்வரை அவருடன் இணைந்து செயற்பட்டவர்.இலங்கை தொழிலாளர் காங்கிரசில் பல்வேறு பதவிகளை வகித்ததுடன் இறுதியில் அதன் தலைவராகவும் இருந்து ஒய்வுபெற்றவர்.
தனது அரசியலை நுவரெலியா பிரதேச சபையின் நியமன தலைவராக ஆரம்பித்து படிப்படியாக பாராளுமன்ற உறுப்பினராக பிரதி அமைச்சராக என தனது அரசியலில் மிகவும் உச்ச நிலையை அடைந்த ஒருவர்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்ஜயவர்தன ரணசிங்ஹ பிரேமதாச டி.பி.விஜேதுங்க சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மகிந்த ராஜபக்ச ஆகிய ஜந்து ஜனாதிபதிகளுடன் இணைந்து செயற்பட்டவர்.
மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதிகளில் ஒருவர்.மலையக மக்களுக்கு மின்சாரம் பெற்றுக் கொடுப்பதில் முன்னின்று செயற்பட்டவர்.அது மாத்திரமின்றி பல்வேறு போராட்டங்கள் பேச்சுவார்த்தைகள் மலையக மக்களின் சார்பாக பல வெளிநாடுகளில் சென்று தொழிற்சங்க பிரதிநிதியாக கலந்து கொண்டவர். குறிப்பாக ஜெனீவா அமெரிக்கா இஸ்ரேல் இத்தாலி ஸ்பெயின் சுவிச்சர்லாந்து உட்பட பல நாடுகளில் நடைபெற்ற மாநாடுகளிலும் கூட்டங்களிலும் கலந்து கொண்டவர்.
அரசியலுக்கு அப்பால் பல பொது அமைப்புகளின் தலைவராகவும் செயற்பட்டதுடன் உலக பிரசித்தி பெற்ற நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயம் ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயங்களின் ஆயுள் காப்பாளராக நீண்டகாலமாக இருந்து இந்த ஆலய்ஙகளின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்து செயற்பட்டவர்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (24.11.2022) மாலை 3 மணிக்கு நவரெலியா பொது மயானத்தில் நடைபெறவுள்ளது.