‘‘இனி ஐபிஎல்லில் பங்கேற்க மாட்டேன்’’ – ஓய்வு அறிவிப்பில் டுவைன் பிராவோ உருக்கம்!

0
63
Article Top Ad

இனி ஐபிஎல்லில் பங்கேற்க மாட்டேன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் டுவைன் பிராவோ அறிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த டுவைன் பிராவோ. கேப்டன் தோனியின் நம்பிக்கைக்கு உரிய ஒரு வீரராக அறியப்பட்டவர். அதனால், 2011ம் ஆண்டு முதல் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்து வந்தார். 2011, 2018 மற்றும் 2021ம் ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸின் ஐபிஎல் கோப்பையை வென்றதிலும், 2014ல் சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பை வென்றதிலும் பிராவோவின் பங்கு மிகமுக்கியம்.

ஐபிஎல் சீசனில் இரண்டு முறை (2013 மற்றும் 2015) அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 144 போட்டிகளில் விளையாடி 168 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் 1556 ரன்கள் எடுத்துள்ளார்.

இதனிடையே, வயது அடிப்படையில் இம்முறை அணியில் இருந்து விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் எதிர்பார்த்தபடி, ஐபிஎல் 2023 மினி ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் பிராவோவை விடுவித்தது. இந்நிலையில் தான் இன்று ஓய்வு தொடர்பாக சமூக வலைதளங்கள் மூலமாக அறிவித்துள்ளார்.

அதில், “உலகின் மிகவும் கடினமான டி20 லீக்கில் 15 ஆண்டுகள் விளையாடிவிட்டேன். இனி ஐபிஎல்லில் பங்கேற்க மாட்டேன். இந்த 15 வருடம் மிகச் சிறந்த பயணம். நிறைய ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும், கடந்த 15 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரின் ஒரு அங்கமாக இருந்தற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனக்கும், எனது குடும்பத்தினருக்கும், முக்கியமாக எனது ரசிகர்களுக்கும் இது ஒரு சோகமான நாள்.

அதேநேரத்தில், இந்த 15 வருட பயணத்தை அனைவரும் கொண்டாட வேண்டும் என விரும்புகிறேன். இனி, எனது பந்துவீச்சு காலணிகளை கழற்றி வைக்கும் அதேவேளையில், பயிற்சியாளர் என்ற பணியை ஏற்றுக்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன். சிஎஸ்கேயில் இளம் பந்துவீச்சாளர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். இத்தனை ஆண்டுகளாக எனக்களித்த அனைத்து அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று உருக்கமாக பேசி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.