வடக்கில் போதைப்பொருளைச் சாட்டி இராணுவப் பிரசன்னம் அதிகரிப்பு!

0
71
Article Top Ad

“போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை சுகாதார அடிப்படையில் அணுகுவதே மனித உரிமையாகும். போதைப்பொருளைக் கட்டுப்படுத்துவதற்கு இராணுவம் தேவையில்லை. இதனைச் சாக்காக வைத்து வடக்கில் இராணுவப் பிரசன்னத்தை அதிகரிப்பதே அரசின் மறைமுக நோக்கமாகக் காணப்படுகின்றது.”

– இவ்வாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் போதைப்பொருள் கட்டுப்படுத்தல் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“போதைப்பொருள் பாவனையை ஒரு சாக்காக வைத்து இராணுவமயமாக்கல் அதிகரிப்பதை வடக்கில் அவதானிக்கின்றோம். அதுவும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்குக் கூட இராணுவம் தலையிடுகின்றது. போதைப்பொருள் பாவனை ஒரு மனித உரிமையின் அடிப்படையில் சுகாதார பிரச்சினையாகதான் அதனைப் பார்க்க வேண்டும். சுகாதார அமைச்சு மற்றும் மருத்துவ நிபுணர்கள்தான் பரிகாரங்களைத் தேட வேண்டும்.

சில வாரங்களுக்கு முன் நீதி அமைச்சர் வடக்கு வந்திருந்தார். அதன் பின்னர் போதைப்பொருள் ஒழிப்புக்காக நடவடிக்கை எடுக்கின்றோம் என்று கூறி அதற்கு இரண்டு நாள்களுக்கு பின்  இராணுவத்தினரின் சோதனைச் சாவடிகள் வடக்கில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

வடக்கில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், அவர்கள் போராட்டம் நடத்துகின்றபோது அல்லது அவர்கள் போராட்டம் நடத்தத் தயாராகின்ற போது இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினர் அவர்களிடம் வீடுகளுக்குச் சென்று – அலுவலகங்களுக்குச் சென்று தொலைபேசியில் தொந்தரவு கொடுத்து, நீங்கள் இப்படி ஒரு போராட்டத்தை ஒழுங்கு செய்கின்றீர்கள், யார் வருகின்றார்கள்? ஏன் செய்கிறீர்கள்? எனக் கேட்கின்றார்கள்.

அந்தளவுக்கு இராணுவத்துக்குத் தரவுகள் கிடைக்கின்றன. ஆனால், இந்தப் போதைப்பொருளைப் பொறுத்தவரை மட்டும் வடக்குக்கு எவ்வாறு போதைப்பொருள் வருகின்றது என்பது தொடர்பாக அவர்களுக்குத் தெரியாதா?

இராணுவத்தின் பிரசன்னத்தை அதிகரித்து சோதனைச்சாவடி அமைப்பதால் மாத்திரம் இதனைக் கட்டுப்படுத்த முடியாது. ஏனென்றால் அரச பொறிமுறையில் இயங்குகின்ற இராணுவத்தினர், பொலிஸார் ஆகியோரும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டிருக்கின்றார்கள், உடந்தையாக இருக்கின்றார்கள். அவர்களின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது தென்படுகின்றது.

இந்த விடயத்தில் இராணுவத்தினரை ஈடுபடுத்துவதால் இன்னமும் மோசமான நிலைமைதான் வருமே தவிர பிரச்சினை தீராது” – என்றார்.