சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி இன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா கந்தசுவாமி ஆலய முன்றலில் நேற்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமான இந்தப் பேரணி பஜார் வீதியூடாக ஹொறவப்பொத்தானை வீதியைச் சென்றடைந்து ஏ9 – வீதியூடாக வவுனியா பழைய பஸ் நிலையத்தை வந்தடைந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், “மனித உரிமை மீறப்பட்ட நாட்டில் மனித உரிமை தினம் எதற்கு?, “மனித உரிமை தினம் எமக்கு எதிர்ப்புத் தினம்”, “மனித உரிமை மதிக்கப்படாத நாட்டில் மனித உரிமை நிறுவனம் எதற்கு?”, “தமிழர்களின் உரிமைகளை மறுக்காதே”, “கடத்திக் காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே?” போன்ற பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
அத்துடன் போர்க் கால மனித உரிமை மீறல்கள் புகைப்படங்கள், கறுப்புக்கொடிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் ஆகியவற்றையும் அவர்கள் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் வருகை தந்து இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.