ஐபிஎல் ஏலத்தில் சாதனை தொகைகளுக்கு விலைக்கு வாங்கப்பட்ட உலக சம்பியன் இங்கிலாந்து வீரர்கள்

0
107
Article Top Ad

இந்தியாவின் கேரளமாநிலத்திலுள்ள கொச்சியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐபில் 2023ம் ஆம் ஆண்டிற்கான ஏலத்தில் இம்முறை டி20 உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி வீரர்கள் மூவர் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர்.

கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய சாம் கரன் இம்முறை பஞ்சாப் கிங்ஸ் அணியினரால் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார்.

இதற்காக அவர் முன்னர் இதுவரை யாரும் ஏற்படுத்தாத சாதனையை நிகழ்த்தியுள்ளார். 2.25 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அவரை ஏலத்தில் எடுத்துள்ளனர்.இந்திய நாணயத்தில் இதன் பெறுமதி 18.50 கோடிகளாகும்.

இம்முறை உலகக்கிண்ணத்தொடரின் ஆட்டநாயகனாக சாம் கரன் தெரிவாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் பென் ஸ்டோக்ஸ் 1.98 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இது இந்திய ரூபாவில் 16.25 கோடிகளாகும்.

பாகிஸ்தானுடனான மூன்று டெஸ்ட் தொடரில் மூன்று சதங்களைக் குவித்து அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்த ஹரி புரூக்கிற்கு இம்முறை அதிர்ஷ்டம் கைகூடியுள்ளது.

ஏலத்திறகு சில நாட்களுக்கு முன்னர் அவர் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தமையால் சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணி அவரை 1.61மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.இது இந்திய நாணயத்தில் 13.25 கோடிகளாகும்.

இங்கிலாந்து வீரர்களைத் தவிர அதிக விலைக்கு ஏலம் வாங்கப்பட்ட வீரர்கள் வரிசையில் அவுஸ்திரேலிய வீரர் கமரன் கிறீன் மும்பை இந்தியன்ஸ் அணியினரால் 17.50 கோடி இந்திய ரூபாவிற்கு விலைக்கு வாங்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்தியத்தீவுகளின் முன்னாள் அணித்தலைவரும் சிறந்த துடுப்பாட்ட வீரருமான நிக்கலஸ் பூரன் 2022 ஐபிஎல் சம்பியன்களான குஜராத் டைடன்ஸ் அணியினரால் 16 கோடி இந்திய ரூபாவிற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.