உடனடி ஜனாதிபதித் தேர்தல் ; மூடிய அறைக்குள் ரணில் மந்திராலோசனை

0
75
Article Top Ad

உள்ளூராட்சி சபைத் தேர்தலை அப்படியே ஒத்திவைத்துவிட்டு உடனடியாக ஜனாதிபதித் தேர்தல் ஒன்றுக்குச் செல்வது பற்றி மந்திராலோசனை ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன எம்.பி., ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச ஆகிய மூவரும் ஒன்றிணைந்தே இது பற்றி ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்தச் சந்திப்பில் வேறு எவரும் கலந்துகொள்ளவில்லை. மூடிய அறைக்குள்ளேயே ஆலோசனை இடம்பெற்றுள்ளது.

இந்த ஆலோசனையை முதலில் சமர்ப்பித்தவர் வஜிர அபேவர்தன. அப்படி உடனடியாக ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால் அதை எவ்வாறு வெற்றிகொள்வது என்ற வழிகள் சிலவற்றையும் அவர் பஸிலிடம் விளக்கிக் கூறியுள்ளார்.

நான்கு வருடங்கள் நிறைவில் ஜனாதிபதி விரும்பினால் ஜனாதிபதித் தேர்தலை நடத்தலாம். அவசரம் ஏற்பட்டால் அடுத்த வருடம் நடுப்பகுதியில் தேர்தலை நடத்தலாம். இதை வைத்துக்கொண்டு வேறு எந்தத் தேர்தலையும் நடத்தாது அடுத்த வருடம் நடுப் பகுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவோம் என்று வஜிர அங்கு கூறினார்.

அவ்வாறு நடத்தினால் வடக்கு – கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளும் மலையகத் தமிழர்களின் வாக்குகளும் ரணிலுக்குக் கிடைக்கும் என்று வஜிர சுட்டிக்காட்டினார்.

தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் தமிழர்கள் நிச்சசயம் ரணிலுக்கே வாக்களிப்பர் என்றும், முஸ்லிம்களும் அவ்வாறே செய்வர் என்றும் வஜிர குறிப்பிட்டார்.

‘மொட்டு’க் கட்சியின் கைகளில் இருக்கும் சிங்கள வாக்குகளை ரணிலுக்குப் பெற்றுத் தருவதற்கு நீங்கள் உரிய நடவடிக்கை எடுத்தால் எந்தவித சிக்கலும் இன்றி இலகுவாக ரணிலால் வெல்ல முடியும் என்றும் வஜிர மேலும் தெரிவித்தார்.