யாழ். மாநகர சபை நிர்வாகம் இனி திரிசங்கு நிலையில்! 

0
74
Article Top Ad

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு மேயர் தெரிவு இனி இடம்பெறாது என வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்தார்.

யாழ். மாநகரசபை மேயர் வி.மணிவண்ணன் பதவி விலகியுள்ள நிலையில் மாநகர சபையின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் அவரிடம் எழுப்பிய கேள்விக்கே மேற்கண்டவாறு பதிலளித்தார்.

“மாநகர சபைக் கட்டளைச் சட்டத்துக்கு அமைவாக மேயர் தெரிவை இனி நடத்த முடியாது. சபையைக் கலைப்பது தொடர்பில் நான் தீர்மானம் எடுக்க முடியாது. அது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படும். கிழக்கு மாகாணத்திலும் இவ்வாறான நிலைமை காணப்படுகின்றது. கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ள நிலையில் இன்னமும் அங்கும் பதில் கிடைக்கவில்லை” – என்று உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் குறிப்பிட்டார்.

இதனால் யாழ். மாநகர பையை யார் நிர்வகிக்கப்போகின்றனர் என்ற குழப்பங்கள் எழுந்துள்ளன. மாநகர சபைக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிகள் உள்ள நிலையில், ஆணையாளரின் அல்லது உள்ளூராட்சி ஆணையாளரின் கீழ் நிர்வாகம் முன்னெடுக்கப்படுவதற்கான சாத்தியங்களும் இல்லை.

இதேவேளை எதிர்வரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதியுடன் இலங்கையின் அனைத்து உள்ளூராட்சி சபைகளினதும் பதவிக் காலங்கள் முடிவுக்கு வருகின்றன. அதற்கு முன்னதாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டால், சபைகளின் பதவிக் காலங்கள் ஜனவரி மாதத்துடன் முடிவுறும் என்பது குறிப்பிடத்தக்கது.