உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்பாக நாட்டில் பல்வேறு தரப்பினரால் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அரசாங்கம் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பது தொடர்பான உணர்திறனை அவர் மேலும் வலியுறுத்தியதுடன், இந்தப் பிரச்சினையை அரசாங்கம் மிகுந்த பொறுப்புடன் அணுகுவதாக உறுதியளித்தார்.
அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, இலங்கையின் வங்கி மற்றும் நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்காக அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் உறுதிப்படுத்தினார்.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. எவ்வாறாயினும், ஒரு அரசாங்கமாக, நாங்கள் எப்போதும் முக்கியமான பிரச்சினைகளை பொறுப்புடன் அணுகுகிறோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பாராளுமன்றத்தில் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் உரையாற்றினார். மத்திய வங்கியும் நிதி அமைச்சும் தமது நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தியுள்ளன. ஸ்திரத்தன்மையை எதிர்மறையாக பாதிக்காமல், நமது நாட்டின் வங்கி மற்றும் நிதி அமைப்பை மேம்படுத்துவதற்கான தீர்வுகளை கண்டுபிடிப்பதில் எங்கள் கவனம் உள்ளது.
இதுகுறித்து அரசாங்கம் இறுதித் தீர்மானத்தை எட்டியதும், நாடாளுமன்றம் மற்றும் பொதுமக்களுக்கு அறிவிப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.