இலங்கை அரசிற்கு ஒத்து ஊதும் ஐ.நா”: தமிழர்கள் கவலை

0
63
Article Top Ad

ஐ நா மனித உரிமைகள் ஆணையம் இலங்கை தொடர்பான தனது மீளாய்வை எதிர்வரும் புதன்கிழமை (21) நடத்தவுள்ள நிலையில், இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலங்கள் தொடர்பில் அரசு கூறும் பொய்யுரைகளை கடந்த முறை போன்று ஐ நா அமைப்புகள் நம்பி ஏமாற கூடாது என்று போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் எச்சரித்துள்ளனர், தமிழர்கள் தாயகப் பகுதியான வடக்கு கிழக்கில் இன்னும் ஆயிரக்கணக்கான ஏக்கர் அளவு நிலங்கள் விடுவிக்கப்படாமல் இருக்கும் நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தில் இன்னும் சொற்ப அளவிலான நிலங்களே மக்களிற்கு திருப்பியளிக்க வேண்டியுள்ளது என்று உண்மைக்கு புறம்பான தகவலை இலங்கை அரசு தெரிவித்திருந்தது.
பாதிக்கப்பட்டவர்களின் நலன்களை மையப்படுத்தியே செயல்படுவதாக தொடர்ந்து ஐ நா கூறி வந்தாலும், அது தொடர்ச்சியாக இலங்கை அரசு தெரிவிப்பதையே கிளிப்பிள்ளைப் போன்று மீண்டும் மீண்டும் கூறுகிறது, அரசு கூறுவதின் உண்மைத் தன்மையை ஐ நா சரிபார்ப்பதில்லை என்று போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் வருந்துகின்றனர்.

நாட்டின் வடக்கு கிழக்கு பகுதியில் பாதுகாப்பு படைகளால் வலிந்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் தொடர்பில் ஐ நாவின் இரண்டு முந்தைய அறிக்கைகள் முரண்பட்ட தகவல்களை தெரிவித்தன. இரண்டு ஆண்டுகளிற்கு முன்னர், வலிந்து கையகப்படுத்தப்பட்ட தனியார் நிலங்களில் 92% திருப்பியளிப்பட்டுவிட்டதாக, அரசு கூறியதை ஐ நாவும் எதிரொலித்தது.

“ 2009 ஆண்டு கையகப்படுத்தப்பட்டிருந்த அரச நிலங்களில் தோறாயமாக 89.26% மற்றும் 92.22% – 31 டிசம்பர் 2019 முன்னதாக திருப்பியளிக்கபட்டுள்ளன,” என்று ஐ நா மனித உரிமைகள் ஆணையர் 2021ஆம் ஆண்டு-அதாவது மக்கள் எழுச்சி காரணமாக கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து அகற்றப்பட்ட காலம்- தெரிவித்திருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற அமர்வில் பங்குபற்றிய வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழு ஐ நாவிடம் இவ்வாறு தெரிவித்திருந்தது:
“ஜனவரி 2023 நிலவரப்படி வடக்கு கிழக்கில் இராணுவத்தின் வசம் இருந்த தனியார் காணிகளில் 92% நியாயமான உரிமையாளர்களிடம் உள்ளூர் அரச அதிகாரிகள் மூலம் கையளிக்கப்பட்டுவிட்டன. வட மாகாணம் பலாலியில் இராணுவம் மற்றும் கடற்படை வசமுள்ள 100 ஏக்கருக்கும் அதிகமான காணிகளும் விரைவில் விடுவிக்கப்படும்”.
ஆனால், தமிழ் மக்களும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர் கூறியது தவறாக வழிநடத்துவதாக மட்டுமின்றி முற்றாக உண்மைக்கு புறம்பானது என்று கூறுகின்றனர். ஏனெனில், முன்னதாக படைகள் வசம் இன்னும் 52 ஏக்கர் காணிகளே உள்ளன என்று அரசு ஐ நா மனித உரிமைகள் ஆணையகத்திற்கு தெரிவித்திருந்தது.

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசால் இம்முறையும் கூறப்படக் கூடிய பொய்கள் தமது நிலங்களை மீட்டெடுத்து தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு பெரியதொரு அடியாக அமையும் என்றும் அவர்கள் அச்சப்படுகின்றனர். ஐ நா மனித உரிமைகள் ஆணையம் மற்றும் இதர சர்வதேச அமைப்புகள் நேரில் வந்து அரசு கூறுவதை சுயமாக அறிந்துகொள்ள வேண்டும் என்று தமிழ் மக்கள் கோருகின்றனர்.

தமிழர்களின் வாழ்வாதாரங்களை முடக்கும் வகையில் வடக்கு-கிழக்கு பகுதிகளில் இன்னும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இலங்கை அரச படைகளின் வசங்கள் உள்ளன, அதன் காரணமாக தமிழ் மக்கள் கடுமையான சமூக-பொருளாதர நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டுகிறார்.
ஐ நா மனித உரிமைகள் ஆணையத்திடம் படையினர் வசம் இன்னும் 52 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது என்று கூறுவது “பச்சை பொய்” என்று சாடியுள்ள சிறீதரன், தமிழர் தாயகப் பகுதியான வடக்கு-கிழக்கில் யார் வந்து பார்வையிட்டாலும், படையினர் எந்தளவிற்கு நிலங்களை கையகப்படுத்தி வைத்துள்ளனர் என்பது அறிந்துகொள்ள முடியும் என்கிறார் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன். அரசு கூறுவதை அப்படியே ஒப்புவிப்பது தமக்கு “ஏமாற்றமாகவும் அவமானகரமாகவும்” இருப்பதாக தமிழர்கள் கூறுகின்றனர். படையினர் வசம் மிகக்குறைந்த அளவிற்கே நிலங்கள் உள்ளன என்று அரசு கூறியதை அங்கீகரிக்கும் விதமாக ஐ நா அறிக்கை வெளியிட்டதை அடுத்தே அவர்கள் இந்த கருத்தை அப்போது வெளியிட்டனர்.

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு செயலாளர் பிரிவில், 13 கிராம பிரிவுகளை உள்ளடக்கிய 3000 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை இன்னும் இராணுவம் தன்னுடைய வசம் வைத்துள்ளது. அங்கு அவர்கள் கட்டடங்களை அமைக்கிறார்கள், தோட்டங்கள் செய்து மரக்கறிகளை வியாபாரம் செய்கிறார்கள். குறிப்பாக மைலிட்டி பகுதியில் மக்களுடைய நீண்டகால பாரம்பரியமான தோட்டக்காணிகளில் இராணுவம் தோட்டம் செய்து, அந்த மரக்கறிகளை மக்களிற்கே கொண்டுவந்து சந்தையில் விற்கிறார்கள். அதே போல பூநகரியில் பல மக்களுடைய காணிகளை அபகரித்து பல ஹோட்டல்கள் , காவல் நிலையங்களை அவர்கள் அமைத்து வைத்திருக்கிறார்கள். யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள பல்வேறுபட்ட பிரதேசங்களிலும் 180க்கும் மேற்பட்ட இடங்களில் இராணுவத்தினருடைய காவலரண்களும், இராணுவ முகாம்களும் தனியாருடைய மக்களின் அமைக்கப்பட்டு, அவை இராணுவத்திற்காக சுவீகரிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகிறது” என்று அவர் மேலும் சுட்டிக்காட்டுகிறார்.
கிளிநொச்சியிலும் இதே நிலைதான் என்கிறார் சிறீதரன்.
“கிளிநொச்சி மாவட்டத்தின் நகரப்பகுதியில், பல்வேறுபட்ட இடங்களில் குறிப்பாக நகரத்தினுடைய 40 வீதமான இடத்தை இராணுவ முகாமாகவே இராணுவ தளமாகவே இப்போதும் வைத்திருக்கிறார்கள். இலங்கையிலேயே ஒரு நகரம் இல்லாத மாவட்டமாக நகரசபை இல்லாத மாவட்டமாக கிளிநொச்சி காணப்படுவதற்கு இராணுவமே முக்கிய காரணமாகும்”.
கிளிநொச்சியின் நகரப்பகுதிகளில், இலங்கை வங்கி, மக்கள் வங்கிக்கு பின்னால் பெரும் நிலப்பரப்பையும், கிளிநொச்சி மகாவித்தியாலத்திற்குரிய காணிகளையும், அதன் மைதானதிற்குரிய காணிகளையும் இராணுவம் தன்னக்கப்படுத்தி வைத்திருக்கிறது. ஆலயங்களிற்குரிய காணிகளை இராணுவம் வைத்திருக்கிறது. இலங்கையிலேயே ஒரு அரச செயலகத்திற்குள் (ஒரு கச்சேரிக்குள்) இரண்டு ஏக்கர் காணியை பிடித்து ஒரு முகாம் அமைத்திருப்பதே கிளிநொச்சியில் மட்டும் தான். தமிழர் புனர்வாழ்வு கழகத்தினரின் காணி இராணுவத்தின் வசம் இருக்கிறது. கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு உரிய காணிகளை இராணுவம் தன் வசம் வைத்திருக்கிறது. இரத்தினபுரம் திருவையாறு பகுதியிலும் இராணுவம் தமது முகாம்களை அமைத்திருக்கிறது.

வட்டக்கச்சியிலே இருக்கின்ற அரசினர் விவசாயப் பண்ணை அமைந்துள்ள 400 ஏக்கர் காணி இன்னும் மக்களிடம் கையளிக்கப்படாமல் இராணுவத்தின் வசம் உள்ளது. உருத்திரபும், வன்னேரிகுளம், பளைப்பகுதி கண்டாவளை போன்ற இடங்களில் முக்கியமான பிரதேசங்களை எல்லாம் இராணுவம் தன் வசம் வைத்திருக்கிறது என்று தொடர்ச்சியாக பட்டியலிடுகிறார் அவர்.
“எனவே அது எவ்வளவு ஏக்கர் நிலம் என்பதல்ல விடயம். அடிப்படையில் அது பொய்களாகும். அந்த பட்டியல் மிகவும் நீளமானது. அந்த மாவட்டத்தில் எங்கு திரும்பினாலும் இராணுவ நிலைகளை காண முடியும் என்பதை நேரில் சென்று பார்த்தவர்கள் அனைவரும் அறிவார்கள். மட்டுமல்ல நீர்ப்பரப்புகளையும் இராணுவம் தனது பிடிகளில் வைத்துள்ளது என்று கூறும் அவர் அதற்கு உதாரணமாக கௌதாரிமுனை கடற்கரை பகுதியை சுட்டிக்காட்டுகிறார்.

“பூநகரி பிரதேசத்திற்கு உட்பட்ட கௌதாரிமுனையிலே கடலில் கூட மக்கள் சென்று குளிக்க முடியாதவாறு இராணுவமே அங்கு அறவீடு செய்கிறது. பிரதேச சபை செய்ய வேண்டிய பணியை இராணுவம் செய்து அந்த கடலில் குளிப்பதற்கு தலா ஒருவரிடம் 300 ரூபா பணம் சேகரித்து அவர்கள் உழைக்கிறார்கள்” பொது இடங்களை இராணுவம் ஆக்கிரமிப்பதன் மூலம் உள்ளூர் மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகின்றன எனவும் அவர் வலியுறுத்துகிறார். வாழ்வாதற்காக மட்டுமின்றி இளைப்பாறுவதற்கு கூட கடற்கரை செல்வோரிடம் பணம் அறவிடப்படுவதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்பது ஏற்புடைய வாதமே.

“அரசாங்கம் தமிழ் மக்களுடைய குடிப்பரம்பலை அகற்றி சிங்கள இனப்பரம்பலை பெரிதாக்கி தமிழர்களுடைய வாழ்விடங்களை அழிப்பதற்கான ஒரு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை, இன அழிப்பு நடவடிக்கையை மிக கச்சிதமாகச் செய்து வருகிறது. இந்த விடயங்களிலே குறிப்பாக இலங்கை அரசாங்கம் சொல்லி வருகின்ற விடயங்களையே உலகம் நம்புகிறது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையமும் சரி, அல்லது ஐக்கிய நாடுகள் சபையில் செயலாளர் நாயகமும் சரி, ஐக்கிய நாடுகளின் நிறுவனங்கள் கூட இலங்கை சொல்லுகின்ற விடயங்க ளை கருத்திலே எடுக்கின்றார்கள்” என்று மிகவும் ஆதங்கப்படுகிறார் சிவஞானம் சிறீதரன்.

ஐ நா உட்பட சர்வதேச அமைப்புகள் சுயாதீனமான ஆய்வை செய்தால் மட்டுமே உலகத்திற்கு உண்மை தெரியவரும் என்றும் அந்த அமைப்புகள் அரசாங்கம் கூறும் பொய்யுரைகளிற்கு பலியாகிவிடக் கூடாது எனவும் கோருகிறார் கடந்த 13 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் அவர். “இந்த மண்ணிலே நாங்கள் துப்பாக்கியால் மட்டும் படுகொலை செய்யப்படவில்லை, கலாசார ரீதியாக, நில ரீதியாக ஒரு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்குள் தொடர்ந்தும் மெல்ல மெல்ல அழிக்கபட்டு கொண்டிருக்கிறோம். இன்னும் ஒரு ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் தமிழர்கள் வடக்கு கிழக்கில் வாழ்வார்களா என்பதில் கேள்விக்குறியாக இருக்கிறது. ஆகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அணையாளரும் சரி, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமும் சரி , சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளும் தயவு செய்து தமிழ் மக்களின் இந்த அவல நிலையை ஒரு முறை நீங்கள் உங்கள் கண்களைத் திறந்து உங்கள் இதயத்தின் ஈரமான பகுதிகளால் பாருங்கள்” என்று உருக்கமான வேண்டுகோளையும் முன்வைக்கிறார்.

ஐ நா இனியும் அரசு கூறுவதை மட்டுமே கேட்டு அதற்கேற்ற வகையில் செயற்படாமல், மனித உரிமைகள் ஆணையத்தின் அடிப்படை கொள்கைகளில் ஒன்றான ‘பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பது’ என்றா நிலைப்பாட்டின்படி செயற்பட வேண்டும், அரசின் ஊதுகுழலாக அல்லது அரசிற்கு ஒத்து ஊதுவதை நிறுத்த வேண்டும் என்பதே போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சிவா பரமேஸ்வரன் – சிரேஷ்ட சர்வதேச ஊடகவியலாளர்
(பிபிசி தமிழ் முன்னாள் ஊடகவியலாளர்)