மற்றொரு பாரிய புதைகுழி பற்றி நாடாளுமன்றில் வெளிப்படுத்தல்

0
80
Article Top Ad

மண்டைதீவில் அரச படையினரால் கொல்லப்பட்ட இளைஞர்களின் பாரிய புதைகுழி ஒன்று இருப்பதாக நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் கொக்குத்தொடுவாயில் சில பெண் போராளிகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் அகழ்வுப் பணிகளை முன்னெடுத்ததால் தமிழ் போராளிகளின் புதைக்கப்பட்ட உடல் உறுப்புகளை கண்டுபிடிக்க முடியுமென, இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

“மண்கும்பான், அல்லைப்பட்டி, வேலணையில் இருந்து கலைத்துவரப்பட்ட 60ற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் அங்கே இருக்கின்ற தோமையார் ஆலயத்தின் முன் கிணற்றிலே கொலை செய்யப்பட்டு 60ற்கும் மேற்பட்டவர்களின் எலும்புக்கூடுகளோடு சேர்ந்த உடல்கள் இப்பொழுதும் அங்கு இருக்கின்றன. தோமையார் தேவாலயத்திற்கு முன்னால் இருக்கின்ற கிணற்றையும் ஒருமுறை தோண்டி ஆய்வு செய்தால் 60ற்கும் மேற்பட்ட பல இளைஞர்களுடைய சடலங்கள் கிடைக்கும்.”

பாரிய புதைகுழிகள் காணப்படுவதனால் அந்த பிரதேசங்களில் அரச படையினர் பலவந்தமாக காணிகளை ஆக்கிரமித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

மண்டைதீவில் சதாசிவன் செந்தில்மணி, வைரநாதன் மகேஸ்வரி போன்ற காணி உரிமையாளர்களின் சொத்துக்கள் இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் ஏனைய பிரதேசங்களில் அகதிகளாக வாழ்ந்து வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தை அண்மித்து காணப்படும் மண்டைதீவில் போரினால் பாதிக்கப்பட்ட சுமார் 2,500 இந்து மற்றும் கத்தோலிக்க குடும்பங்கள் வசிக்கின்றன.

மண்டைதீவு உட்பட வடக்கின் பல தீவுகள் பல ஆண்டுகளாக இராணுவம் மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தன.

நீர்க்குழாய்களை புதைப்பதற்காக மண்ணை தோண்டிய போது தற்செயலாக கிடைத்த மனித எலும்புக்கூடு பாகங்கள் காரணமாக கண்டுபிடிக்கப்பட்ட கொக்குத்தொடுவாய் சமூக புதைகுழியின் அகழ்வு பணி அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் [JDS], சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் [ITJP], மனித உரிமைகள் அபிவிருத்தி மையம் [CHRD] மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்கள் [FoD]  போன்ற அமைப்புகளால் அண்மையில் வெளியிடப்பட்ட “ஸ்ரீலங்காவிலுள்ள பாரிய மனித புதைகுழிகளும், வெற்றியடையாத அகழ்வு பணிகளும்” அறிக்கைக்கு அமைய,  தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட பாரிய புதைகுழிகளுக்கு மேலதிகமாக மன்னார் திருக்கேதீஷ்வரம் மற்றும் சதொச கட்டிடம், கணேசபுரம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, மிருசுவில், செம்மணி, துரையப்பா விளையாட்டரங்கம், களுவாஞ்சிக்குடி ஆகிய இடங்களில் பாரிய புதைகுழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் இந்த அறிக்கை அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது