இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் சிக்கித் திணறிய அவுஸ்திரேலிய அணி மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாகத் தப்பித்துக்கொண்டது.
போட்டியின் முதல் நாள் முதலே பின்னிலையில் இருந்த அவுஸ்திரேலிய அணி நான்காம் நாளான நேற்றைய தினத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆட்ட நேரத்தையும் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தின் முழுநேர ஆட்டத்தையும் மழை ஆக்கிரமித்துக்கொண்டதால் வெற்றிதோல்வியற்ற பெறுபேறுடன் போட்டியை நிறைவுசெய்தது. இதனையடுத்து ஆஷஸ் தொடரை இம்முறையும் தக்கவைத்துக்கொண்டது.
கடந்த முறை அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் அபார வெற்றியீட்டிய நிலையில் ஐந்துபோட்டிகள் கொண்ட நடப்புத் தொடரில் 2ற்கு 1என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையிலுமே அவுஸ்திரேலியா ஆஷஸ் கிண்ணத்தைத் தக்கவைத்துக்கொண்டது.
நான்காவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றிருந்தால் ஓவல் மைதானத்தில் இவ்வாரத்தில் ஆரம்பமாகவுள்ள 5வது டெஸ்ட் போட்டி தீர்மானமிக்க போட்டியாக அமைந்திருக்கும் . ஆனால் இந்தப்போட்டி ட்ராவில் வெற்றிதோல்வியின்றி முடிந்ததால் அட்டவணைப்படுத்தப்பட்ட தேவைக்காக விளையாடும் போட்டியாகத் தற்போது மாறிவிட்டது.
மன்செஸ்டர் ஓல்ட்டராவோர்ட் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி அதன் முதல் இனிங்ஸில் 317 ஓட்டங்களைப் பெற்றது. பதிலளித்த இங்கிலாந்து அணி அதன் முதல் இனிங்ஸில் 592 ஓட்டங்களைப் பெற்றது. இதனையடுத்த களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 108 ஓட்டங்களுக்கு நான்கு விக்கட்டுக்களை இழந்து தடுமாறியது. எனினும் 5வது விக்கட்டுக்காக மார்னஸ் லபுஷேன் மற்றும் மிச்சேல் மார்ஷ் இணைந்துபெற்ற 103 ஓட்ட இணைப்பாட்டத்தின் துணையுடனும் 150 ற்கும் அதிகமான ஓவர்களைக் காவுகொண்ட மழையினாலும் தப்பிக்கொண்டது.