இலங்கையில் இந்திய ரூபாயை பயன்படுத்துவது குறித்து பரிசீலனை!

0
37
Article Top Ad

உள்ளூர் வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாவை பயன்படுத்த அனுமதிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ இந்திய விஜயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

இந்திய ரூபாவை பொது பணமாக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்.

இந்திய ரூபாவின் நேரடி பயன்பாட்டை அனுமதிப்பது இந்திய சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக சமநிலையின்மை இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதால், இந்திய ரூபாயை ஏற்றுக்கொள்வது இலங்கைக்கு சாதகமாக அமையும்.

இதன் மூலம் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகள் மேலும் வலுவடையும் .

எனவே உள்ளூர் வர்த்தக பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்கு இந்திய ரூபாவை பயன்படுத்துவது வர்த்தக ரீதியில் இரு நாட்டுக்கும் நன்மை பயக்கும் என அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் மொத்தக் கடன் 83 பில்லியன் டொலர்களைத் தாண்டியுள்ளது, இதில் 41.5 பில்லியன் டொலர் வெளிநாட்டு மற்றும் 42.1 பில்லியன் டொலர் உள்நாட்டு கடன். இலங்கை தற்போது தனது கடனை மறுசீரமைக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.